ஐபிஎல் : சன் ரைசர்ஸ் ஐதராபாத் கோப்பையை வென்றது

ஐபிஎல் : சன் ரைசர்ஸ் ஐதராபாத் கோப்பையை வென்றது

நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டிகளில் இதுவரை கோப்பையை கைப்பற்றியிராத அணிகளான விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், பெங்களூரு சின்னசாமி அரங்கில், நேற்று இரவு நடைப்பெற்ற போட்டியில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் பலப்பரீட்சை நடத்தின. முன்னதாக இந்த தொடரில் இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில், முதல் ஆட்டத்தில் பெங்களூர் அணி 45 ரன்னில் வென்று இருந்தது. 2–வது ஆட்டத்தில் ஐதரபாத் அணி 15 ரன்னில் வென்று இருந்தது. ஓட்டு மொத்த ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் இதுவரை மோதிய ஆட்டத்தில் பெங்களூர் 4-ல், ஐதராபாத் 4-ல் வெற்றி பெற்றிருந்தன.

ipl may 30

இதனால் நேற்றைய போட்டி ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகிடையே ஆரம்பமானது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னரும், தவானும் களமிறங்கின. 2-வது தகுதிச்சுற்றில் சிறபான ஆட்டத்தை வெளிபடுத்தியதை போலவே, ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார் வார்னர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஐதராபாத் அணி 5.2 ஓவரில் முதல் 50 ரன்களை எட்டியது. மறுமுனையில் இவருக்கு ஈடுகொடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சகால் பந்துவீச்சில் ஜோர்டனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ( 25 பந்தில் 3 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும்). அப்போது ஐதராபாத் அணியின் ஸ்கோர் 63-ஆக இருந்தது.

பின் அதிரடியை தொடர்ந்த டேவிட் வார்னர், பந்தை நாலாப்புறமும் சிதறடித்தார். இதற்கிடையில், ஹென்ரிக்கியு 4 ரன்னில் அவுட்டானார். வார்னர் 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அரவிந் வீசிய பந்தை அடித்தபோது, இக்பால் அப்துல்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 38 பந்தை எதிர்கொண்ட அவர் 8 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் விளாசினார். 13.3 ஓவரில் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் விக்கெட்டை பறிகொடுத்த ஐதராபாத் அணி சற்று தடுமாறிய நிலையில் 4-வது ஆட்டக்காரராக களமிறங்கிய யுவ்ராஜ் சிங் சிறப்பாக ஆடினார். ஹூடா 3 ரன்னில் அவுட்டாக, யுவ்ராஜ் சிங் 23 பந்தில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜோர்டன் பந்தில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து 5-வது விக்கெட்டாக வீழ்ந்தார். இதில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். அடுத்து களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாக, பிசிஜே கட்டிங் மட்டும் கடைசிவரை அவுட்டாகாமல் நிலைத்து நின்று ஆடி 39 ரன்கள் எடுத்தார். இதனால், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை எடுத்தது.

பெங்களூர் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜோர்டன் 3 விக்கெட்டும், எஸ்.அரவிந் 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை அடைய களமிறங்கினர் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி, கெயில். ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கெயிலின் சிறப்பான பேட்டிங்கால் 4.4 ஓவரில் அந்த அணி 50 ரன்களை எட்டியது. கெயில் 42 ரன்னுடனும், கோலி 5 ரன்னும் எடுத்திருந்தனர். பின் கெயிலின் அதிரடி தொடர பெங்களூரு அணி 8.6 ஓவரில் 100 ரன்னை எட்டியது. அப்போது கெயில் 74 ரன்னும், கோலி 20 ரன்னும் எடுத்திருந்தனர். இந்த ஜோடியை பிரிக்க ஐதராபாத் அணி பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட யுக்தி அனைத்தையும் தவிடுபொடியாக்கி அதிரடியாக ரன்களை குவித்தார் கெயில். சிறப்பாக ஆடிய கெயில் 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கட்டிங் பந்துவீச்சில் பிபுல் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கடந்த போட்டிகளில் ஒற்றை இலக்க எண்னை எடுத்து விமர்சனத்துக்குள்ளான கெயில் இந்த போட்டியில் 38 பந்துகளில் 76 ரன்களை எடுத்து பதிலடி கொடுத்துள்ளார். இதில் 8 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும்.

இவரை அடுத்து களமிறங்கிய மற்றொரு சிறந்த வீரரான டி வில்லியர்ஸ், கோலியுடன் ஜோடி சேர ஆட்டத்தின் போக்கே மாறியது. சிறப்பாக ஆடிய விராட் கோலி பிபி ச்ரன் வீசிய பந்தை அடிக்க முற்பட்டபோது பந்து பேட்டின் விளிம்பில் பட்டு ஸ்டெம்பில் பட்டது. 35 பந்தை எதிர்கொண்ட கோலி 5 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 54 ரன்னை எடுத்தார். கடந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை இறுதிபோட்டிக்கு தகுதி பெறச்செய்த டி வில்லியர்ஸ் பிபுல் சர்மா பந்தில் ஹென்ரிக்கியுவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 14.1 ஓவரில் பெங்களூரு அணி 150 ரன்களை எட்டியது. அடுத்து இறங்கிய வீரர்கள் ராகுல், வாட்சன், பேபி சொற்ப ரன்னில் அவுட்டாக ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 19 ஓவரில் 183 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 6 பந்தில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான சூழ்நிலையில், சச்சின், ஜோர்டன் ஜோடி முதல் பந்தில் 1 ரன்னும், 2-வது பந்தில் 2 ரன்னும், 3-வது பந்தில் ஜோர்டான் 2 ரன்கள் எடுக்க முயற்சித்தபோது ரன்அவுட்டானார். கடைசி 3 பந்தில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 4-வது பந்தில் ஒரு ரன் கிடைத்தது.

இதன் மூலம் ஐதராபாத் அணி வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் 5-வது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. கடைசி பந்தில் 4 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஐ.பி.எல். போட்டியில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

Related Posts