ஐ பி எல் டி 20 ; ராஜஸ்தான் அணியை அநாயசமாக வீழ்த்தியது CSK
ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், வழக்கம் போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 64 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அபாரமாக வென்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி 4 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
சென்னையில் நடக்க இருந்து போராட்டக்காரர்களின் எதிர்ப்புக் காரணமாக புனேவுக்கு மாற்றப்பட்டு நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசியது. சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர்களாக வாட்சன், ராயுடு களமிறங்கினர். ராயுடு 12 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வாட்சனுடன் ரெய்னா இணைந்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
குறிப்பாக, பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட வாட்சன் 28 பந்தில் அரை சதம் அடித்தார். வாட்சன் – ரெய்னா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தது. ரெய்னா 46 ரன் (29 பந்து, 9 பவுண்டரி) விளாசி கோபால் பந்துவீச்சில் கவுதம் வசம் பிடிபட்டார்.அடுத்து வந்த கேப்டன் தோனி 5 ரன், பில்லிங்ஸ் 3 ரன் மட்டுமே எடுத்து கோபால் சுழலில் பலியாகினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் உறுதியுடன் விளையாடிய வாட்சன் 51 பந்தில் சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். வாட்சன் 106 ரன் (57 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி லாப்ளின் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சென்னை 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன் குவித்தது. பிராவோ 24 ரன் (16 பந்து, 4 பவுண்டரி), ஜடேஜா 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராயல்ஸ் பந்துவீச்சில் கோபால் 4 ஓவரில் 20 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். லாப்ளின் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து, கடினமான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 18.3 ஓவரிலேயே 140 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 45 ரன் (37 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். பட்லர் 22, கேப்டன் ரகானே, உனத்காட் தலா 16, பின்னி 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். கோபால் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை பந்துவீச்சில் சாஹர், தாகூர், பிராவோ, கரண் ஷர்மா தலா 2, வாட்சன், தாஹிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சென்னை 64 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. வாட்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.




