`சர்வதேச பாறுக் கழுகுகள் அல்லது பிணம் திண்ணிக் கழுகுகள் விழிப்புணர்வு தினம்!
உலகெங்கிலும் பல்வேறு கலாச்சாரங்களில் கழுகுகள் வலிமை, அதிகாரம், மற்றும் சுதந்திரத்தின் அடையாளமாகப் போற்றப்படுகின்றன. பறவைகளின் அரசனாகக் கருதப்படும் கழுகு, அசிபிட்ரிடே (Accipitridae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொன்றுண்ணிப் பறவை. இவை உலகம் முழுவதும் பரவலாகக் காணப்பட்டாலும், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய பகுதிகளில் இதன் இனங்கள் அதிகம் உள்ளன. உலகில் 74 வகையான கழுகினங்கள் இருந்தாலும், அதில் 60 இனங்கள் யூரேசியா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் வாழ்கின்றன.பாறு கழுகுகள் என்று இப்போது அழைக்கப்படும் பிணம் தின்னி கழுகுகள் என்ற பெயர் ஓர் எதிர்மறை எண்ணத்தை உருவாக்குவதாக கருதி பழந்தமிழில் பாறு என்று பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கழுகுகளை பாதுகாத்து, அதன் எண்ணிக்கையை அதிகரித்து மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக வைக்கப்பட்டு வருவதால், அவற்றை பாதுகாக்கும் வகையில் செப்டம்பர் முதலாவது சனிக் கிழமை, `சர்வதேச பாறுக் கழுகுகள் அல்லது பிணம் திண்ணிக் கழுகுகள் விழிப்புணர்வு தின’மாக உலக நாடுகளால் கடைபிடிக்கப் படுகின்றது.

கழுகுகளின் வகைகள் மற்றும் தனித்துவங்கள்
பொதுவாக, கழுகுகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: கடல் கழுகுகள், கால் வரை ரோமம் உள்ள கழுகுகள், பாம்பு உண்ணும் கழுகுகள், மற்றும் ராட்சச காட்டு கழுகுகள். தமிழில் இந்த கம்பீரமான பறவைகள் எழால், கழுகு, கங்கு, கங்கம், கூளி, பருந்து, பாறு, கருடன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன.இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் வனப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரியவகை பறவை இனங்கள் உள்ளன. இவற்றில் பிணம் தின்னி கழுகுகள் மிக முக்கியமானவை. இந்தியாவில் ஒன்பது வகை பாறு கழுகுகள் உள்ளன. இதில் தமிழகத்தில் வெண் முதுகு பிணம் தின்னி, இந்தியன் பிணம் தின்னி, செந்தனை பிணம் தின்னி, எகிப்திய பிணம் தின்னி ஆகிய நான்கு வகை மட்டுமே உள்ளன. இவற்றில் தற்போது எகிப்திய பிணம் தின்னியை தவிர மற்ற இனங்கள் அழிந்து வருகின்றன. ஒரு காலத்தில், தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட பிணம் தின்னி பறவை இனங்கள், தற்போது சத்தியமங்கலம், மோயார் ஆற்றுப்படுகை, ஊட்டி, முதுமலைக் காடுகளில் மட்டுமே அரிதாகக் காணப்படுகின்றன. தமிழகத்தில் பிணம் தின்னி கழுகுகளின் எண்ணிக்கை தற்போது 100 முதல் 150 வரை மட்டுமே உள்ளதாக அதிர்ச்சி தகவல் உள்ளது.
பாறுக் கழுகுகளின் முக்கியத்துவம்
பாறுக் கழுகுகள், இறந்த விலங்குகளின் உடல்களை உண்டு சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன. இவை இயற்கையின் துப்புரவுப் பணியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த செயல்பாடு, நோய்கள் பரவுவதைத் தடுக்கவும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கவும் உதவுகிறது. குறிப்பிட்டு சொல்வதானால் இவை சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கியமான “அழுகல் உண்ணிகளாக” (scavengers) செயல்படுகின்றன. இறந்த விலங்குகளின் எச்சங்களை அகற்றுவதன் மூலம், நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தி, உயிரியல் சமநிலையை பராமரிக்கின்றன. மேலும் பாறுக் கழுகுகள் இறந்த விலங்குகளின் எலும்புகளை உண்பதற்கு பெயர் பெற்றவை. இவை “எலும்பு உடைப்பவை” என்று அழைக்கப்படுகின்றன, ஏனெனில் இவை எலும்புகளை உயரத்தில் இருந்து கீழே போட்டு உடைத்து, அதன் மஜ்ஜையை உண்கின்றன. இதனால், சூழலில் உள்ள இறந்த உயிரினங்களின் எச்சங்களை அகற்றி, சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன.
முதுமலை புலிகள் காப்பகம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பந்திப்பூர் புலிகள் காப்பகம், வயநாடு சரணாலயம் பகுதிகளில் மட்டுமே தற்போது இந்த பாறு கழுகுகள் காணப்படுகின்றன.வனப்பகுதியில் உணவு சங்கிலியில் இறுதியாக உள்ளது பாறுக் கழுகுகள். இவை அனைத்து உண்ணிகள் என அழைக்கப்படுகின்றன. இவை இல்லை என்றால் வனத்திற்குள் உணவு சங்கிலியே இல்லை. பாறு கழுகுகளின் சிறப்பம்சம் வானத்தில் 4 கிலோ மீட்டர் உயரம் பறந்து கொண்டு இருக்கும் போதே தரையில் உயிரிழந்து கிடக்கும் விலங்குகளை கண்டறியும் தன்மை உடையது.
கழுகுகளில் பெண் கழுகுகள் ஆண் கழுகுகளை விடப் பெரியவை. பெண் கழுகுகள் ஓர் ஆண் கழுகைத் தேர்ந்தெடுக்கும் முன் அதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைச் சோதிக்க, ஒரு சுவாரஸ்யமான சோதனையை நடத்துகின்றன. ஆண் கழுகு பொறுப்புணர்வுடன் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்னரே அவை இணைகின்றன. அதாவது பெண் கழுகு ஓர் ஆண் கழுகை சந்தித்து உறவு கொள்ளும் முன், அந்த ஆண் கழுகுடன் நிலத்திற்குச் சென்று சிறு தடி போன்ற குச்சியை எடுக்கும். பின்பு மேலே ஆணுடன் உயரத்திற்குப் பறந்து சென்று அந்தக் குச்சியினைக் கீழே போட்டுவிட்டு காத்து கொண்டிருக்கும். நிலத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் குச்சியை ஆண் கழுகு விரட்டிச் சென்று, அது நிலத்தில் விழும்முன் பிடித்து, அதை உயரப் பறக்கும் பெண் கழுகிடம் சேர்க்கும். பெண் கழுகு மீண்டும் குச்சியைக் கீழே போட்டுவிடும். ஆண் கழுகு பிடிப்பதற்காக கீழே செல்லும். இவ்வாறு குச்சியை வீழ்த்துவதும், எடுத்து வருவதுமாக பல மணி நேர பரீட்சை நடைபெறும். பெண் கழுகு, ஆண் கழுகிடமுள்ள பொறுப்புணர்வை நிச்சயப்படுத்திக் கொண்டதும், அது உறவு கொள்ள இடமளிக்கும்.
கழுகுகள் மிக உயரமான மரக்கிளைகள் அல்லது மலைச் சரிவுகளில் உள்ள பாறை இடுக்குகளில் கூடு கட்டுகின்றன. ஒருமுறை இரண்டு முட்டைகள் இட்டாலும், முதலில் வெளிவரும் குஞ்சு அல்லது பெரிய குஞ்சு, தன் இளவலான சிறிய குஞ்சைக் கொத்தி கொன்றுவிடும். இந்த வன்முறைக்கு அவற்றின் பெற்றோர் எந்தத் தடையையும் ஏற்படுத்துவதில்லை. இது இயற்கையின் ஒரு விசித்திரமான அம்சமாக உள்ளது.
கழுகுகளின் ஆயுட்காலம் மற்றும் மறுபிறவி
பறவை இனங்களிலேயே கழுகுகள் மட்டும் சுமார் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. ஆனால், அவை 40 வயதை நெருங்கும்போது, அவற்றின் அலகு வளைந்து, இறக்கைகள் தடித்துப் பறப்பதற்குச் சிரமமாக மாறும். இந்த நிலையில், கழுகுகள் இரண்டு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்: ஒன்று இறந்துபோவது அல்லது வலியுடன் கூடிய ஒரு மறுபிறவிக்குத் தன்னை உட்படுத்துவது.
பெரும்பாலான கழுகுகள் இரண்டாவது வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கின்றன. அவை உயர்ந்த மலைக்குச் சென்று, தங்கள் அலகைப் பாறையில் மோதி உடைத்துக்கொள்கின்றன. புதிய அலகு வளரும் வரை அவை கூட்டிலேயே தனித்திருந்து உணவை உண்ணாமல் காத்திருக்கும். புதிய அலகு வளர்ந்ததும், தடித்த இறகுகளைத் தானே பிய்த்து எறிகின்றன. இந்த முழு மாற்றத்துக்கும் சுமார் 150 நாட்கள் ஆகின்றன. இந்தப் பெருந்துன்பத்தை அனுபவித்த பிறகு, கழுகுக்கு மேலும் 30 ஆண்டுகள் வாழும் ஆற்றல் கிடைக்கிறது. இந்த தனித்துவமான மாற்றம், வலிமையை அனுபவித்து மீண்டு வருவதன் ஒரு குறியீடாகப் பார்க்கப்படுகிறது.
கழுகுகளின் சிறப்புத் திறன்கள்
- கண்காணிப்புத் திறன்: கழுகுகளுக்கு மிக அபாரமான பார்வைத் திறன் உண்டு. ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கும்போது கூட, தரையில் ஓடும் ஒரு சிறிய முயலைக் கண்டு வேட்டையாடும் திறன் கொண்டவை.
- வேகம்: அவை மணிக்கு 32 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்.
- திறன்: கழுகுகள் மிகவும் புத்திசாலித்தனமானவை. ஆமை அல்லது நத்தையின் ஓட்டை உடைக்க, அவற்றை மலை உச்சியில் இருந்து பாறையில் வீசி எறிந்து உண்ணும் திறன் கொண்டவை.
கழுகுகள் அழிந்து வருவதன் காரணங்கள்
கழுகுகள் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. பிணம் தின்னி கழுகுகள் (Vultures) இறந்த விலங்குகளின் உடல்களை உண்டு, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்கின்றன. ஆனால், இன்று கழுகுகளின் இனம் மிக வேகமாக அழிந்து வருகிறது. இதற்கான முக்கிய காரணங்கள்:
- டைக்ளோஃபினாக் மருந்து: கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படும் இந்த வலி நிவாரணி மருந்து, கால்நடை இறந்த பிறகும் அதன் உடலில் தங்கிவிடுகிறது. இந்த இறந்த கால்நடைகளை உண்ணும் கழுகுகள் இந்த நச்சால் இறந்துவிடுகின்றன.
- விவசாய நச்சுப் பொருட்கள்: விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள், சிறிய விலங்குகளைக் கொல்கின்றன. இந்த நச்சுப் பொருட்களை உண்ட விலங்குகளை கழுகுகள் வேட்டையாடி உண்பதால், அவை நச்சுத் தாக்கத்தால் இறக்க நேரிடுகிறது.
- மின்சாரக் கம்பிகள்: மின்சாரக் கம்பிகளில் மோதி பல கழுகுகள் மின் அதிர்ச்சியால் இறந்துபோகின்றன.
இந்த அழிவைத் தடுக்க, செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை உலக கழுகுகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்து சமயத்தில், கழுகுகள் தெய்வீகமாகப் போற்றப்படுகின்றன. பகவான் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் கருடன் கருதப்படுகிறது. கோவில்களில் கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகளில் கழுகுகள் வட்டமிடுவது இன்றும் நல்ல சகுனமாகப் பார்க்கப்படுகிறது.
சென்னை அருகில் உள்ள திருக்கழுக்குன்றம் கோவிலுக்கு ஒரு காலத்தில் தினசரி வந்து இரை எடுத்துக் கொண்டு சென்ற பாறு கழுகுகள் (பிணந்தின்னிக் கழுகுகள்), இப்போது வருவதில்லை. தற்போது நீலகிரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மட்டுமே எஞ்சியுள்ள இந்தப் பறவைகளை பாதுகாக்க, உடனடியாக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
நிலவளம் ரெங்கராஜன்



