தமிழ் குரல் / AI Voice
ஒரு மொழியின் ஆழத்தையும் உணர்வையும் மற்றொரு மொழிக்குச் துல்லியமாகக் கொண்டுசேர்த்து, உலகை ஒற்றைக் கூரையின் கீழ் இணைப்பதில் மொழிபெயர்ப்பாளர்களின் பங்கு அளப்பரியது. மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கும் அறிவுப் பரிமாற்றத்திற்கும் உயிர்நாடியாக விளங்கும் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ம் நாள் சர்வதேச மொழிபெயர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. உலக மக்களிடையே கலாச்சாரப் பரிமாற்றத்தை வளர்க்கவும், மொழிபெயர்ப்புத் துறையின் பங்களிப்பைச் சிறப்பிக்கவும் இந்நாள் உலகளாவிய அளவில் கொண்டாடப்படுகிறது.
புனித ஜெரோம் மற்றும் இந்த நாளின் வரலாற்றுப் பின்னணி
திருவிவிலியத்தை எபிரேயம், அரமேயிக் ஆகிய மொழிகளிலிருந்து நேரடியாக லத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்த மொழி அறிஞரான புனித ஜெரோம் என்பவரின் நினைவு நாளான செப்டம்பர் 30-ம் நாள் இந்நாளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. குரோசியாவில் பிறந்த புனித ஜெரோம், மொழிபெயர்ப்பாளர்களின் பாதுகாவலர் எனப் போற்றப்படுகிறார். கிறிஸ்துவ குருவாகவும், இறையியலாளராகவும், வரலாற்று ஆசிரியராகவும் திகழ்ந்த இவர், ரோமில் தனது படிப்பை முடித்த பின்னர் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
இதன் காரணமாக கிரேக்கம், லத்தீன், எபிரேயம் உள்ளிட்ட செம்மொழிகளில் அரிய தேர்ச்சியும் மேதமையும் பெற்றார். இவர் எபிரேயம் மற்றும் அரமேயிக் மொழிகளிலிருந்து கிறிஸ்துவர்களின் புனித நூலான திருவிவிலியத்தை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்ததன் மூலம் உலகப் புகழ்பெற்றார். இவரது இந்தத் துல்லியமான மொழிபெயர்ப்பை ‘ட்ரென்ட் பொதுச்சங்கம்’ கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்பாக அறிவித்தது. இவரைச் சிறப்பிக்கும் வகையிலும், மொழிபெயர்ப்புத் துறையின் சேவையைப் போற்றும் வகையிலும் 1953-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ‘பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பின்’ (FIT) முயற்சியால் இந்நாள் ஆண்டுதோறும் சிறப்புடன் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

2026 ஆண்டின் முழக்கம்: மொழிப் பன்முகத்தன்மையும் உரிமைகளும்
ஒவ்வொரு ஆண்டும் மொழிபெயர்ப்புத் துறை சார்ந்த முக்கியப் பொருண்மையை மையமாகக் கொண்டு இத்தினம் கொண்டாடப்படுகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மொழிபெயர்ப்பு நாளின் அதிகாரப்பூர்வ மையக்ககருத்து (Theme) மொழிப் பன்முகத்தன்மை மற்றும் மொழி உரிமைகள்: புரிந்துகொள்ளப்படுவதன் சக்தி (Linguistic Diversity and Language Rights: The Power of Being Understood) என்பதாகும். இந்தத் தீம் International Federation of Translators (FIT) அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நவீன காலகட்டத்தில் மொழிப் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதும், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனது சொந்த மொழியில் தகவல்களைப் பெறவும் புரிந்துகொள்ளப்படவும் உள்ள உரிமையை நிலைநாட்டுவது அவசியமாகிறது. இந்த ஆண்டின் முழக்கம் கீழ்க்கண்ட முக்கிய உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது:
* உலகளாவிய பன்முகத்தன்மையை மதித்தல் மற்றும் ஒவ்வொரு பிராந்திய மொழியின் தனித்துவத்தைப் பாதுகாத்தல்.
* மொழித் தடைகளை உடைத்து, அனைத்து மக்களுக்கும் சமமான தகவலுக்கான உரிமையை உறுதி செய்தல்.
* சமூகத்தில் ஒருவரையொருவர் சரியாகப் புரிந்துகொள்ளும் சக்தியை மொழிபெயர்ப்பின் மூலம் சாத்தியமாக்குதல்.
சமூக வளர்ச்சியில் மொழிபெயர்ப்பாளர்களின் பங்கு
வெறும் வார்த்தைகளை மாற்றும் பணியாக மட்டும் மொழிபெயர்ப்பு சுருங்கிவிடுவதில்லை. அது நாகரிகங்களையும், இலக்கியங்களையும், அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஒரு தலைமுறையிடமிருந்தோ அல்லது ஒரு சமூகத்திடமிருந்தோ மற்றொரு சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் கலாச்சாரப் பாலமாகும். மருத்துவம், சட்டம், தொழில்நுட்பம், அரசியல் மற்றும் சான்னாச்சி சார்ந்த பல துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பாளர்கள் செய்யும் அர்ப்பணிப்பு மகத்தானது.
ஒரு மொழி பேசும் சமூகம் மற்றொரு சமூகத்தின் சிந்தனையை எளிதில் உள்வாங்கி வளர மொழிபெயர்ப்பே அடித்தளமாக அமைகிறது. உலக அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணிக்காப்பதில் மொழிபெயர்ப்பாளர்களின் பங்கு எக்காலத்திலும் போற்றத்தக்கது. சர்வதேச மொழிபெயர்ப்பு நாளில், மொழித் தடைகளைக் கடந்து உலகை இணைக்கும் அனைத்து மொழிபெயர்ப்பாளர்களின் உழைப்பையும் போற்றிப் பெருமை கொள்வோம்.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்
