32°C
விளம்பரம்
Advertisement

உணவு இழப்பு மற்றும் வீணடிப்பு பற்றிய சர்வதேச விழிப்புணர்வு நாள்:சிறப்புப் பார்வை!

admin சேலம் Published: September 29, 2026 4 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



ஒருபுறம் லட்சக்கணக்கான மக்கள் போதிய உணவின்றி பசியால் வாடும் கசப்பான நிதர்சனத்தை மாற்றியமைப்பதும், மறுபுறம் உலகில் உற்பத்தி செய்யப்படும் உணவில் பெரும்பகுதி வீணடிக்கப்படுவதைத் தடுப்பதும் இன்றைய அவசியமான தேவையாகும். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும், உணவு வீணடிக்கப்படுவதைத் தடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் நாள் ‘உணவு இழப்பு மற்றும் வீணடிப்பு பற்றிய சர்வதேச விழிப்புணர்வு நாள்’ (International Day of Awareness of Food Loss and Waste) கடைபிடிக்கப்படுகிறது. விவசாயப் பண்ணைகள் முதல் சந்தைகள், உணவகங்கள் மற்றும் வீடுகள் வரை உணவைக் கவனமாகக் கையாண்டு விரயத்தைக் குறைப்பது சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் பசுமை இல்ல வாயு உமிழ்வையும் பெருமளவு கட்டுப்படுத்த உதவும். தேவைகேற்ப மட்டுமே உணவை வாங்குவது, மீதமான உணவைப் பகிர்வது மற்றும் நிலையான உணவு முறைகளைப் பின்பற்றுவது போன்ற எளிய பழக்கங்கள் மூலம் பசியில்லா உலகைப் படைக்கவும் நமது பூமியைப் பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்.

2026 ஆண்டின் முக்கிய முழக்கம் மற்றும் பின்னணி

இன்று (29 செப்டம்பர் 2026) இந்த நாள் 7-வது ஆண்டாக அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் இணைந்து நடத்தும் இந்தப் பிரச்சாரத்தின் இந்த ஆண்டிற்கான மையக்ககருத்து உணவு இழப்பு மற்றும் வீணடிப்பைக் குறைப்பதால் ஏற்படும் மாற்ற ஆற்றல் என்பதாகும்.

இந்தத் தினத்தின் முக்கிய நோக்கங்களை நிறைவேற்ற உலகளாவிய விழிப்புணர்வு மிகவும் அவசியமாகிறது. உணவு இழப்பு மற்றும் வீணடிப்பைக் குறைப்பது மூன்று பெரிய நன்மைகளைத் தரும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது:

* உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல்

* இயற்கை வளங்கள் மீதான அழுத்தத்தையும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தையும் குறைத்தல்

* உற்பத்தித்திறனையும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரித்தல்

உணவு இழப்பு மற்றும் உணவு வீணடிப்பு: அவசியமான வேறுபாடு

பொதுவாக பலரும் உணவு இழப்பு மற்றும் உணவு வீணடிப்பு ஆகிய இரண்டும் ஒரே பொருளைத் தருவதாக நினைக்கிறார்கள். ஆனால், பொருளாதார மற்றும் விநியோகச் சங்கிலியில் இவை இரண்டும் வெவ்வேறு நிலைகளைக் குறிக்கின்றன.

உணவு இழப்பு என்பது அறுவடைக்குப் பிந்தைய கட்டம், சேமிப்பு, பதப்படுத்துதல் மற்றும் போக்குவரத்து போன்ற விநியோகச் சங்கிலியின் ஆரம்ப கட்டங்களில் உணவு உற்பத்தி குறைக்கப்படுவதைக் குறிக்கும். இது பெரும்பாலும் உள்கட்டமைப்பு பற்றாக்குறை, குளிர்பதன வசதியின்மை மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகளால் ஏற்படுவதாகும்.

உணவு வீணடிப்பு என்பது சில்லறை விற்பனை நிலையங்கள், உணவகங்கள் மற்றும் நுகர்வோர் மட்டத்தில் ஏற்படும் உணவின் விரயத்தைக் குறிக்கும். வாடிக்கையாளர்கள் மற்றும் குடும்பங்கள் தேவையைவிட அதிகமாக உணவை வாங்கிவிட்டு வீணாக்குவது இதில் அடங்கும்.

சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தில் இதன் தாக்கம்

உலகில் உற்பத்தி செய்யப்படும் உணவில் தோராயமாக மூன்றில் ஒரு பகுதி மனித நுகர்வுக்காகப் பயன்படுத்தப்படாமல் இழக்கப்படுகிறதோ அல்லது வீணடிக்கப்படுகிறதோ என்ற அதிர்ச்சித் தகவல் ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. இந்த உணவு வீணடிப்பு மூலம் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளன.

* பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: குப்பைக் கூலங்களில் அழுகும் உணவு மீத்தேன் வாயுவை வெளியிடுகிறது. இது கார்பன் டை ஆக்சைடை விட பல மடங்கு ஆபத்தான பசுமை இல்ல வாயுவாகும். உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் உணவு இழப்பு மற்றும் வீணடிப்பின் பங்கு மிகப்பெரியது.

* நீர் மற்றும் நில வளங்களின் விரயம்: வீணடிக்கப்படும் உணவுக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலம், நீர், உரங்கள் மற்றும் ஆற்றல் அனைத்தும் வீணாகின்றன. இது இயற்கையின் மீதான தேவையற்ற அழுத்தத்தை அதிகரிக்கிறது.

* பொருளாதார இழப்பு: கோடிக்கணக்கான மதிப்பிலான உணவுப் பொருட்கள் வீணாவதால் விவசாயிகளும் வணிகர்களும் கடுமையான பொருளாதார இழப்பைச் சந்திக்கின்றனர்.

நமது பங்களிப்பு: பசியில்லா உலகிற்கான எளிய வழிகள்

ஒவ்வொரு செயலும் முக்கியமானது. வீட்டில் உணவைச் சரியாகச் சேமிப்பது, மீதமுள்ள உணவைப் பயன்படுத்துவது, விநியோகச் சங்கிலியில் இழப்பைக் குறைப்பது ஆகியவை இதில் அடங்கும். தனிப்பட்ட மனிதர்களாக நாம் செய்யக்கூடிய சில எளிய வழிமுறைகள்:

* திட்டமிட்டு வாங்குதல்: தேவைக்கு ஏற்ப மட்டுமே மளிகைப் பொருட்களையும் உணவையும் வாங்குவது.

* முறையான சேமிப்பு: உணவுகள் கெட்டுப்போகாதவாறு குளிர்பதனப் பெட்டிகள் மற்றும் முறையான கொள்கலன்களில் சரியாகப் பாதுகாப்பது.

* மீதமுள்ள உணவைப் பயன்படுத்துதல்: மீதமான உணவை வீணாக்காமல், அதனைப் புதுமையான சமையல் முறைகள் மூலம் பயன்படுத்துவது அல்லது தேவைப்படுவோருக்கு வழங்குவது.

* விழிப்புணர்வை ஏற்படுத்துதல்: உணவு விரயத்திற்கு எதிரான விழிப்புணர்வைச் சமூகத்தில் பரப்புவது.

நமது பூமியையும் எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்க உணவு இழப்பையும் வீணடிப்பையும் முற்றிலுமாகத் தவிர்ப்போம்.

நிலவளம் ரெங்கராஜன்

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்