👨👦சர்வதேச ஆண்கள் தினம்: புலம்பல்களும், நிஜமான அவசியமும்!
தினந்தோறும் ஏதோவொரு பெயரில் கொண்டாட்டங்களும் அனுசரிப்புகளும் தொடர்ந்து வரும் நிலையில், நவம்பர் 19 சர்வதேச ஆண்கள் தினத்தையும், ஆண்களின் புலம்பலையும் கண்டுகொள்வோர் இல்லையா என்ற சலம்பல் இன்றைய தினம் சமூக ஊடகங்களில் எதிரொலித்து வருகிறது. இந்த புலம்பலையும், இந்த நாளின் அவசியத்தையும் கொஞ்சம் அலசுவோமா?
🗓️ சர்வதேச ஆண்கள் தினம் – ஒரு அறிமுகம்
ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவுபடுத்தும் நாளாகவும் அமைகிறது.

பொதுவாக நாளொரு வைபவமாய் சிறப்பு தினங்களை கொண்டாடுவது மேற்கத்திய கலாச்சாரம். உலகமே கிராமமாக சுருங்கியதில் அந்த பழக்கம் எல்லா திசைகளிலும் பரவியது. நுகர்வு சந்தைக்கான பெரும் உபாயமாகவும் கார்ப்பரேட் நிறுவனங்களால் இந்த தினங்களின் முக்கியத்துவம் ஊதிப் பெருக்கப்பட்டது. அப்படி இறக்குமதி ஆனவற்றில் பரிதாபத்துக்குரிய தினங்களில் முக்கியமானது சர்வதேச ஆண்கள் தினம்.
📜 பின்னணியும் கேலிப் பதிவுகளும்
மகளிர் தினம், உழைப்பாளர் தினம் ஆகியவற்றுக்கு எல்லாம் வரலாற்றில் பெரும் இடம் உண்டு. தொடரும் உரிமைப் போராட்டம், சித்தாங்களின் நினைவு கூறல், அடுத்த கட்டத்துக்கான நகர்வு என பெரும் விவாதங்கள் இந்த தினத்தை முன்னிட்டு அரங்கேறும். ஆனால் ஆண்களுக்கு என ஒரு தினம் அனுசரிக்கப்படுவதை பெரும்பாலான ஆண்களே பொருட்படுத்துவதில்லை என்பது மற்றொரு சோகம்.
சர்வதேச மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்ததும், சில ஆர்வக்கோளாறு ஆண்கள் தமக்கான தினத்தை அறிவித்து கொண்டாடினர். ஆனால், ஒரு கல்லூரிப் பேராசிரியர் தனது தந்தையின் பிறந்த தினத்தை முன்னிட்டு நவம்பர் 19 அன்று ஆண்கள் தினத்துக்கான கொண்டாட்டத்தை தொடங்கியது மெல்லப் பரவி 90களில் சர்வதேச அங்கீகாரத்துடன் நிலைபெற்றது.
இதர சர்வதேச தினங்களின் போதெல்லாம் களைகட்டும் சமூக ஊடகங்களில், ஆண்கள் தினத்தை முன்னிட்டு பெரும் கேவலாகவும் பதிவுகள் எதிரொலிக்கின்றன. ஆண்கள் தினம் என்பதை பெண்கள் தினத்துக்கு எதிரானதாக புரிந்துகொண்டவர்களின் புலம்பலாக இவை இருக்கின்றன. மேலும் ஆண்கள் மீதான பெண்ணினத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் சிலர் இந்த தினத்தை நினைவுகூருகிறார்கள்.
-
காதலியால் கழற்றி விடப்பட்டவர்கள்
-
விவாகரத்துக்கு காத்திருப்போர்
-
குடும்பச் சண்டையின் சட்டை கிழிந்தோர்
-
பணியிடங்களில் சக பெண் ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் இருப்பை சகிக்க மாட்டாதோர்
-
அதீத ஆணாக்கவாதிகள்
என சகல தரப்பினர் இந்த குமுறல் கச்சேரிகளில் குவிந்துள்ளனர். இப்படி “ஆண்களுக்கென்று ஏன் ஒரு தனியான நாள் கொண்டாடப்பட வேண்டும்?” அவர்களுக்கு வாழ்நாளில் என்னதான் பிரச்னை உண்டு என சிலர் கேள்வி கேட்கின்றனர். ஆனால் உண்மை அப்படியல்ல.

🤔 ஆண்களுக்கும் உண்டு மனச் சுமை மற்றும் பிரச்னைகள்
ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு. அவனுக்கும் தீமைகள் இழைக்கப்படுகின்றன. ஆணுக்கும் பாலியல் தொந்தரவு உள்ளது என்பதை நம் சமூகம் நிச்சயம் உணர வேண்டும். இந்த சலம்பல்களை வெறுமனே புலம்பல்கள் என ஒதுக்குவதற்கும் இல்லை.
1. வளர்ப்பில் சேரும் அபத்தங்கள்
ஆண் குழந்தைகளின் வளர்ப்பில் அவை தொடங்குகின்றன.
‘ஆண் பிள்ளை என்றால் அழக்கூடாது, பெண்கள் போன்று பொம்மைகள் வைத்து விளையாடக் கூடாது, பிங்க் நிறத்தை விரும்பக்கூடாது’ என ஏராளமான திணிப்புகள் குழந்தை பிராயம் தொட்டே தொடங்கி விடுகின்றன.
சக பெண்களை மதிக்க வேண்டும், அவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், எவருக்கும் தீங்கிழைக்கக் கூடாது என்பது போன்றவை ஆண் குழந்தைகளின் வளர்ப்பில் முறையாக வழங்கப்படுவது மிகவும் அரிதாக இருக்கிறது. ’நீ ஆண் பிள்ளை; அவள் கிடக்கிறாள் பெண் பிள்ளை; ஆண் பிள்ளை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்’ என்றெல்லாம் பிஞ்சிலேயே நஞ்சை கலக்கும் பெரியவர்களே இங்கு அதிகம். பெண்ணினத்துக்கு எதிரான இந்த பெரும் பிழைகளை தாய்மார்களே முன்னின்று செய்வது மற்றொரு கொடுமை.
பருவ வயதை எட்டும் ஆண் குழந்தையை ’அவன் ஆண் பிள்ளை; தானாக தெரிந்துகொள்வான்’ என்று சமாளித்து நட்டாற்றில் கழற்றி விடுகிறது சமூகம். போகிறபோக்கில் கிடைக்கும் வம்புகள், வதந்திகள், இணைய வாந்திகள் ஆகியவற்றிலிருந்து தன்னை வளர்த்துக்கொள்ளும் ஆண் குழந்தை எப்படி முழுமையான ஆணாக சமுதாயத்தில் கலப்பான்?
2. நிதர்சன நிர்பந்தங்கள்
இளம்பருவத்து ஆணை துரத்தும் நிதர்சன நிர்பந்தங்கள் தனி.
-
வேலை
-
திருமணம்
-
குழந்தைப் பேறு
-
சம்பாதித்தியம்
-
சொத்து சேர்ப்பு
-
இதர குடும்பக் கடமைகள்
என சாவு வரை அவன் முதுகை ஒடிக்கும் சமூக அழுத்தங்கள் எத்தனையோ. இவற்றில் எல்லாம் பெண்ணுக்கு கிடைக்கும் தளர்வுகளில் பாதி கூட ஆண்களுக்கு கிடைப்பதில்லை என புலம்புகிறது சமூக ஊடக ஆண் சமுதாயம். மணவாழ்வின் அழுத்தங்களால் ஆண்டுதோறும் தற்கொலைக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்கிறது ஒரு புள்ளி விபரம்.
🎯 ஆண்கள் தினத்தின் உண்மையான தேவை
நிஜத்தில் மகளிர் தினத்துக்கு இணையான முக்கியத்துவமும், கோரல்களும் ஆண்கள் தினத்துக்கும் அவசியம். இந்தப் பதிவுகள் பாலின சமத்துவத்துக்கும் முக்கியத்துவம் சேர்க்கின்றன.
-
பாதுகாப்பு மற்றும் அரவணைப்பு: பெண் குழந்தைகளுக்கு எளிதில் கிடைக்கும் அரவணைப்பும், பாதுகாப்பும், ஆண் குழந்தைகளுக்கும் அவசியம் கிடைக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு நிகராக ஆண் குழந்தைகளும் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாவது பெரும்பாலும் வெளித்தெரிவதே இல்லை.
-
மனநல அக்கறை: அங்கே தொடங்கி முதிர் பருவம் வரை ஆணின் உடல், மனம் சார்ந்த பிரச்சினைகளை, நமது குடும்ப மற்றும் சமூக அமைப்புகள் சற்று கரிசனத்தோடு செவிமடுப்பது நல்லது. எல்லா அழுத்தங்களையும் உள்ளுக்குள் பூட்டிவைத்து, பின்னர் அந்த அழுத்தம் தாங்காது அவன் தடம் மாறும்போது மட்டும் நிந்தித்து பலனில்லை.
மொத்தத்தில் ஆணுக்கும் உரிமைகள், பாதுகாப்பு, மனநல ஆதரவு ஆகியவை அவசியம். அவனின் பாதுகாப்பிற்காகவும், உரிமைக்காகவும் நிச்சயம் ஒருநாள் கடைபிடிக்கப்பட வேண்டும். அதுவே இன்றைய நாள்.
அனைத்து ஆண்களுக்கும் சர்வதேச ஆண்கள் தின நல்வாழ்த்துகள்!


