சர்வதேச எழுத்தறிவு தினம்: அறிவின் ஒளி!
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி, உலகம் முழுவதும் சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஒரு விழா மட்டுமல்ல, அது நம் சமூகத்தின் அடிப்படைத் தூணாக விளங்கும் கல்வி மற்றும் எழுத்தறிவின் அவசியத்தை உணர்த்தும் ஒரு முக்கியமான நினைவூட்டல். எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்ந்து, யுனெஸ்கோவின் 14 ஆவது பொதுக்குழு, 1966 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 8-ஐ சர்வதேச எழுத்தறிவு தினமாக அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம் எழுத்தறிவை உலகளாவிய இயக்கமாக மாற்றும் முதல் படி எடுக்கப்பட்டது.

எழுத்தறிவின் மகத்துவம்
‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்‘ என்ற தமிழ்க் கூற்று, எழுத்தறிவின் மகத்துவத்தை எவ்வளவு ஆழமாக உணர்த்துகிறது! எழுத்தறிவு என்பது வெறும் ஒரு மொழியைப் படிக்கவும், எழுதவும், புரிந்து கொள்ளவும் மட்டும் அல்ல. அது, ஒரு மனிதன் தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தையும், உலகத்தையும் புரிந்துகொள்ள உதவும் ஒரு கருவி. எழுத்தறிவுள்ள ஒருவரால், சவால்களை எதிர்கொள்ளவும், சிறந்த முடிவுகளை எடுக்கவும், புதிய அனுபவங்களைப் பெறவும், சமூகத்தில் ஒரு நல்ல குடிமகனாக வாழவும் முடியும். ஒரு தனிமனிதனின் வளர்ச்சியைப் போலவே, ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் எழுத்தறிவு மிகவும் அவசியமான ஒன்று. எழுத்தறிவு ஒரு சமூகத்தின் முதுகெலும்பு போன்றது; அது இல்லாமல் எந்தச் சமூகமும் முன்னேற முடியாது.
எழுத்தறிவை அடைவதற்கான சவால்கள்
ஒரு மனிதனுக்கு எழுத்தறிவு என்பது வாழ்வின் அத்தியாவசியத் தேவையாக இருந்தாலும், அதை அடைவதில் பல சவால்கள் உள்ளன. இவற்றில் சில:
- வறுமை: பொருளாதார நெருக்கடி காரணமாக பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை விட வேலைக்கு அனுப்புவதை விரும்புகின்றன. இதனால் பல குழந்தைகள் கல்வியை இழக்கின்றனர்.
- சமூக ஏற்றத்தாழ்வுகள்: சில சமுதாயங்களில் பாலின பாகுபாடு, கலாச்சாரப் பிணக்குகள், மற்றும் அடிமைத்தனம் போன்ற காரணங்களால் சில பிரிவினர் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை இழக்கின்றனர்.
- அரசியல் மற்றும் இயற்கைச் சீரழிவுகள்: யுத்தம், அரசியல் நெருக்கடி, மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்ற காரணங்களால் கல்வி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. இது, பலரின் எழுத்தறிவு வாய்ப்புகளை வெகுவாக பாதிக்கிறது.
- போஷாக்கின்மை: போதிய ஊட்டச்சத்து இல்லாததால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள், குழந்தைகளின் கற்றல் திறனைப் பாதிக்கின்றன.
இந்த சவால்களை எதிர்கொண்டு, விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் உள்ள ஒருவரால் எழுத்தறிவை நிச்சயமாகப் பெற முடியும். இருப்பினும், பலர் இந்த சவால்களுக்குப் பலியாகி, தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொள்கிறார்கள்.
வாசிப்புக்கும் எழுத்தறிவுக்கும் உள்ள தொடர்பு
எழுத்தறிவின் அடிப்படை வாசிப்பு ஆகும். ஒரு மனிதன் எந்த அளவுக்கு வாசிக்கிறானோ, அந்த அளவுக்கு அவனுடைய எழுத்தறிவும், மொழித்திறனும் மேம்படும். வாசிப்பு பழக்கம் ஒரு மனிதனைப் பூரணமாக்குகிறது. அது நம்முடைய உலக அறிவை வளர்ப்பதுடன், நமது சிந்தனைத் திறனையும், பகுப்பாய்வுத் திறனையும் மேம்படுத்துகிறது. வாசிப்பு ஒருவரின் எழுத்தறிவுக்கு அச்சாணியாக இருப்பதால், வாசிப்பு பழக்கத்தை உருவாக்குவது மிகவும் அவசியம்.
ஒரு சமூகத்தின் மனித மற்றும் சமூக மேம்பாட்டுக்கு எழுத்தறிவு மிகவும் அவசியம். எழுத்தறிவுள்ள ஒரு சமூகத்தில் மக்கள் தங்கள் உரிமைகளையும், கடமைகளையும் உணர்ந்து செயல்படுவார்கள். எழுத்தறிவு என்பது ஒரு தனி மனிதனின் உயர்வு மட்டுமல்ல, அது ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் ஒரு சக்தி. எனவே, எழுத்தறிவு இல்லாதவர்கள் இல்லாத ஒரு உலகை உருவாக்குவது நம் அனைவரின் கடமையாகும்.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்


