சர்வதேச வறுமை ஒழிப்பு நாள் – வறுமையற்ற உலகை நோக்கி ஓர் அவசரப் பயணம்
உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை ஆகிய அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படும் நிலையில் மனித சமூகம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுதல் வறுமை ஆகும். இத்தகைய வறுமையில் வாடும் மக்களின் நிலையை உலகறியச் செய்யவும், வறுமை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஐக்கிய நாடுகள் சபை 1992-ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ஆம் தேதி சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாக (International Day for the Eradication of Poverty) கடைப்பிடிக்கப்படுகிறது. ஆதரவற்ற நிலையில் வறுமையில் யாரும் தத்தளிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே இந்நாளின் முதன்மையான நோக்கமாகும்.

வறுமையின் வகைகள் மற்றும் அதன் தாக்கங்கள்
வறுமை என்பது வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமின்றி, வளர்ந்த நாடுகளிலும் வீடின்மை போன்ற பல சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகிறது. வறுமையின் வலி மற்றும் துன்பம் காரணமாக, இது விரும்பத்தகாத ஒன்றாகவேக் கொள்ளப்படுகிறது.
வறுமை பொதுவாக இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது:
- முற்றிலும் வறுமை (Absolute Poverty): ஒரு குடும்பத்தின் வருமானம் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத மிகக் குறைந்த அளவில் இருக்கும் நிலை. மிகக் குறைந்த வாழ்க்கைத் தரத்திற்குக் கீழான நிலையில் உள்ளவர்களை இது குறிக்கும்.
- ஒப்பீட்டு வறுமை (Relative Poverty): இரண்டு பிரிவினரின் வாழ்க்கைத் தரத்திற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குறிப்பது. தேசிய வருமானப் பங்கீட்டில் உள்ள ஏற்றத் தாழ்வுகளால் இது ஏற்படுகிறது.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இரண்டு வகை வறுமையும் காணப்படுகிறது. ஆனால், அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒப்பீட்டு வறுமை மட்டும் காணப்படுவது தேசிய வருமானப் பங்கீட்டில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் காட்டுகிறது.
தற்போதைய வறுமை குறித்த உண்மைகள் மற்றும் சவால்கள்
வறுமை ஒழிப்பில் உலகம் கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருந்தாலும், சவால்கள் இன்னும் ஆழமாகவே உள்ளன:
- உலகளாவிய நிலை: சமீபத்திய மதிப்பீடுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 700 மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு $2.15 க்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்து வந்தனர்.
- சிரமமான இலக்கு: 2030 ஆம் ஆண்டுக்குள் தீவிர வறுமையை முடிவுக்குக் கொண்டுவரும் உலகளாவிய இலக்கை அடைய முடியாது என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போதும்கூட கிட்டத்தட்ட 600 மில்லியன் மக்கள் இன்னும் தீவிர வறுமையில் வாழலாம்.
- குழந்தைகளின் நிலை: ஆறு குழந்தைகளில் ஒருவர் மிகுந்த வறுமையில் வாழ்கிறார். 2013 மற்றும் 2022 க்கு இடையில் வறுமைக் குறைவு ஏற்பட்டிருந்தாலும், கோவிட்-19 இன் தாக்கம் மூன்று ஆண்டுகள் முன்னேற்றத்தை இழக்க வழிவகுத்தது.
- சமூகப் பாதுகாப்பு இன்மை: 2021 ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகையில் 53 சதவீதம் பேர் – அதாவது 4.1 பில்லியன் மக்கள் – எந்த வகையான சமூகப் பாதுகாப்பிலிருந்தும் பயனடையவில்லை.
- தொற்றுநோயின் தாக்கம்: தீவிர வறுமையில் வாடும் தொழிலாளர்களின் பங்கு 2019 இல் 7.1 சதவீதமாகக் குறைந்திருந்தாலும், கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு 2020 இல் இது மீண்டும் உயர்ந்தது.
நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) மற்றும் வறுமை ஒழிப்பு
2030 ஆம் ஆண்டு நிலையான வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலின் 17 இலக்குகளில், வறுமையை அதன் அனைத்து வடிவங்களிலும் முடிவுக்குக் கொண்டுவருவது (SDG 1) முதன்மையானதாக உள்ளது.
வறுமை ஒழிப்பிற்கான முக்கிய இலக்கு (இலக்கு 1.A) வளர்ந்து வரும் நாடுகளுக்கு, குறிப்பாக குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு, வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்களைச் செயல்படுத்த போதுமான வளங்களை வழங்குவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது.
மேலும், ஏழைகளுக்கு ஆதரவான மற்றும் பாலின உணர்திறன் கொண்ட மேம்பாட்டு உத்திகளின் மூலம், 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஆண்களும் பெண்களும் பொருளாதார வளங்கள், அடிப்படைச் சேவைகள், சொத்துக்கள் மற்றும் நிதிச் சேவைகளில் சம உரிமைகளைப் பெறுவதை உறுதிசெய்வதும் SDG-களின் இலக்குகளாக உள்ளன.
முடிவுரை
தீவிர வறுமை ஒழிக்கப்பட மிகவும் கடினமான பகுதிகளான மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள், மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமப்புறங்கள் போன்ற இடங்களில் இன்னும் குவிந்துள்ளது. இந்த சர்வதேச வறுமை ஒழிப்பு நாளில், வறுமையின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்துகொண்டு, நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையவும், ஒவ்வொரு தனிமனிதனும் கண்ணியமான வாழ்க்கையை வாழவும் தேவையான உறுதியான கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நிலவளம் ரெங்கராஜன்



