சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் -நவம்பர் 25

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் -நவம்பர் 25

நாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைமைத்துவம், பங்கேற்பு போன்ற பல உரிமைகள் அதிகரித்து வந்தாலும் அவற்றுக்கெதிராக பெண்களுக்கெதிரான உரிமை மீறல்களும் அதிகரித்து கொண்டேதான் வருகின்றன. அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான உரிமைகள் உலக நாடுகளில் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே காணப்படுகின்றன. இத்தனைக்கும் 1789 ஆம் ஆண்டுகளிலேயே பெண்களின் உரிமை மீறலுக்கு எதிராக புரட்சிகள் ஆரம்பித்தன. அக்காலப்பகுதிகளில் வேலைக்கேற்ற ஊதியம், வேலை நேரம், வாக்குரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தல் போன்ற சம உரிமைகளைக் கோரி பிரான்சில் ஆரம்பித்து, ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பெண்கள் உரிமைகள் தொடர்பான பரந்தளவான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்காலத்திலும் பெண்கள் இப்படியான தமது உரிமைகளை அனுபவித்து வருகின்றனரா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.

அத்துடன் இன்றைய காலக்கட்டத்தில் வரதட்சிணை, பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை, சிசுக்கொலை என பெண்கள் மீதான வன்முறை பல வடிவங்களில் நிகழ்த்தப்படுகிறது. அதிலும் மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தை விட பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களின் வளர்ச்சி வீதம் அதிகம் என்பதும் கல்வியறிவு பெற்றவர்களும் குற்றத்தில் ஈடுபடுவதுதான் வேதனைக்குரியதுதான் .

நமது இதிகாசங்களை உற்று நோக்கும் போது ஆரம்ப கால பெண்கள் மிகக் கெளரவத்துடனும் சுதந்திரமாகவும் காணப்பட்டதற்கான ஆதாரங்கள் கூறப்படுகின்றன. இடைக்காலப் பகுதியில் அந்நிய நாட்டினரின் ஆக்கிரமிப்புகள், பொருளாதார நெருக்கடி போன்ற சமூகக் காரணங்களால் பெண் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டாள். தற்போதைய நிலையிலும் இது தொடர்கின்றது என்பதை பலதரப்பட்ட மட்டங்களிலிருந்து அறியக்கூடியதாய் உள்ளது. இன்று ஊடகங்களில் நாளொன்றுக்கு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான ஒரு வன்முறையாவது அறிய முடிகின்றது. பெண்ணாக பிறப்பதாலேயே பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் பல்வேறு வடிவங்களில் அதிகரித்து வருகின்றன.

இதை எல்லாம் கவனத்தில் கொண்டு ஐ.நா. மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள பெண்ணிய அமைப்புகளும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கப் பல்வேறு விதங்களில் தொடர்ந்து போராடி வரு கின்றன. இவற்றின் விளைவாகக் குறிப்பிட்ட சதவீதப் பெண்கள் விழிப்புணர்வு பெற்றாலும், வன்முறை குறைந்தபாடில்லை. மாறாக, நாளுக்கு நாள் அதிகரித்துவருவதுடன் புதுப்புது வடிவமும் எடுத்துவருகிறது. உடல் ரீதியான, உளவியல்ரீதியான வன்முறை போன்றவற்றின் நீட்சியாகத் தற்போது இணையவழித் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. இத்தனைக்கும் பதிவு செய்யப்படும் குற்றங்கள், தரவுகள் போன்றவற்றின் அடிப்படையில்தான் நாம் வினையாற்றுகிறோம்.

உண்மையில் மாலாவைப் போன்று, தன் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை எந்த இடத்திலும் பதிவுசெய்யாத பெண்களே நம்மிடையே அதிகம். இவர்களில் படித்தவர், படிக்காதவர் என்கிற பேதமெல்லாம் இல்லை. சமூகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் பெண் என்கிற ஒரே காரணத்துக்காக ஒடுக்கப்படுகிறவர்கள் இங்கே ஏராளம். அதிலும் வன்முறைக்கு எளிதில் இலக்காகும் வகையில் பலவீனமான நிலையில் இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள், மாற்றுப் பாலினத்தவர், அகதிகள், புலம்பெயர்ந்தோர், சிறுபான்மையினர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் போன்றோர் அதிக அளவில் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

பெண்கள், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படுகிற வன்முறையைப் பாலின பேதத்தின் வெளிப்பாடு என்று குறுக்கிவிட முடியாது. அது பெண்களைப் பாதிப்பது மட்டு மல்லாமல், பாலினச் சமத்துவத்தை அடையும் உலகளாவிய நோக்கத்துக்குப் பெரும் தடையை ஏற்படுத்துவதுடன் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியையும் சேர்த்தே பாதிக்கிறது. எவ்வளவோ இழப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் பிறகு பெண்களையும் குழந்தைகளை யும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. தண்டனைகளும் கடுமையாக்கப் பட்டுள்ளன. இருந்தாலும் 2015ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியா முழுவதும் 3,27,394 வழக்குகள் பெண்களுக்கு எதிரான வன்முறையின்கீழ் பதிவுசெய்யப் பட்டுள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்ணைப் பற்றி மட்டுமே பேசும் நம் சமூகம், அந்தப் பெண்ணின் மீது வன்முறையை நிகழ்த்திய ஆணைக் கண்டுகொள்வதில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளிபோல் சித்தரித்து அவள் மீது களங்கத்தைச் சுமத்தும் நம் சமூக மனநிலையே சட்டத்தின் உதவியை நாட விடாமல் பெண்களைத் தடுக்கிறது. தவிர, நீதி கிடைப்பதற்கான நெடிய போராட்டத்தில் ஏற்படும் அலைக்கழிப்பும் குற்றவாளிக்குத் தண்டனையைப் பெற்றுத்தர முடியாத அதிகாரப் படிநிலையும் பெண்களைச் சோர்வுறச் செய்கின்றன. போராடத் துணிகிற பெண்கள் அனைவரும் வெற்றிபெற்றுவிடுவதில்லை என்கிறபோதும் தன்னைப் போலவே பாதிக்கப்படும் பெண்களுக்கு அவர்கள் நம்பிக்கை அளிக்கத் தவறுவதில்லை.

சமூகத்தின் அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் சட்டத்தின் உதவி எளிதில் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டியது அரசின் கடமை. அதுதான் பெண்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே சுருக்கிவிடவில்லை என்பதற்கான சான்றாக இருக்கும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான நீதி என்பது குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படுகிற தண்டனை மட்டுமல்ல, அந்தப் பெண் தற்சார்புடன் வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தித் தருவதும்தான்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பதிலும் அழித்தொழிப்பதிலும் சட்டத்தின் பங்கு சொற்பமே. அச்சத்தால் குற்றங்களைக் குறைப்பதைவிட, குற்றச் செயல் களுக்குக் காரணமான மனநிலையை மாற்றுவதுதான் அவசியம்.

இந்த சூழ்நிலையில் ஐ.நா., சபை, 1993ம் ஆண்டு பெண்கள் மீதான வன்முறை மனித உரிமையை மீறும் செயல் என அறிவித்தது. இதை தொடர்ந்து 1999 முதல், நவ., 25ம் தேதி உலக பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

error: Content is protected !!