பன்னாட்டு எதிர்பாலீர்ப்பு இன்மை நாள்!

பன்னாட்டு எதிர்பாலீர்ப்பு இன்மை நாள்!

மூகம் வகுத்து வைத்திருக்கும் ‘இயல்பு’ என்ற சட்டகத்திற்குள் அடங்காத பல உணர்வுகளில் ஒன்றுதான் ‘எதிர்பாலீர்ப்பு இன்மை’ (Asexuality). ஏப்ரல் 6-ஆம் தேதி உலகெங்கும் கடைபிடிக்கப்படும் பன்னாட்டு எதிர்பாலீர்ப்பு இன்மை நாள்(International Asexuality Day). இது குறித்த போதிய புரிதலற்ற பொதுவெளியில் ஒரு காத்திரமான விவாதத்தை முன்வைக்கிறது. பாலியல் ஈர்ப்பு என்பது ஒவ்வொரு மனிதருக்கும் அவசியமான ஒன்று என்ற பொதுப்புத்தியை உடைப்பதே இந்த நாளின் மையப்புள்ளி.

எதிர்பாலீர்ப்பு இன்மை (Asexuality) – ஒரு தெளிவு

பாலியல் ஈர்ப்பு (Sexual Attraction) என்பது ஒருவருக்கு மற்றவர் மீது இயல்பாகத் தோன்றும் உணர்வு. ஆனால், இந்த ஈர்ப்பை மிகக் குறைவாகவோ அல்லது அறவே இல்லாமலோ கொண்டிருப்பவர்களை ‘ஏசெக்ஷுவல்’ (Asexual) என்று அழைக்கிறோம். இது ஒரு பாலியல் சார்புநிலை (Sexual Orientation) தானே தவிர, மருத்துவ ரீதியான குறைபாடோ அல்லது மனநலப் பிரச்சினையோ அல்ல.

சமூகம் சந்திக்கும் நான்கு தூண்கள்

சர்வதேச அளவில் இந்தப் பன்னாட்டு நாள் நான்கு முக்கியமான நோக்கங்களை முன்னிறுத்துகிறது:

  • வக்காலத்து (Advocacy): சமூகத்திலும் சட்ட ரீதியாகவும் இவர்களுக்கான உரிமைகளைப் பேசுதல்.

  • கொண்டாட்டம் (Celebration): தங்களை ஒரு தனித்துவமான அடையாளமாகக் கொண்டாடுதல்.

  • கல்வி (Education): இது குறித்த தவறான கற்பிதங்களை அகற்றிச் சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல்.

  • ஒற்றுமை (Solidarity): உலகெங்கிலும் உள்ள இச்சமூகத்தினரை ஒரு புள்ளியில் இணைத்தல்.

சவால்களும் சங்கடங்களும்

திருமணம் மற்றும் பாலியல் வாழ்க்கை என்பது ஒரு கட்டாயமான நடைமுறை எனப் பார்க்கும் சமூகத்தில், ஏசெக்ஷுவல் நபர்கள் பெரும் நெருக்கடியைச் சந்திக்கின்றனர். “உனக்கு இன்னும் சரியான நபர் கிடைக்கவில்லை”, “இது ஹார்மோன் குறைபாடு” என்பது போன்ற அறிவுரைகள் அவர்களின் தனித்துவத்தை நிராகரிப்பதாகவே அமைகின்றன. உறவுகளில் அன்பு, தோழமை மற்றும் குடும்பப் பாசம் இருந்தாலும், பாலியல் ஈர்ப்பு இல்லை என்பதை ஒரு பெரும் குறையாகப் பார்க்கும் போக்கை மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அன்பிற்கும் ஈர்ப்பிற்குமான இடைவெளி

எதிர்பாலீர்ப்பு இன்மை கொண்டவர்களுக்கும் காதல் உணர்வு (Romantic Attraction) இருக்கும். அவர்கள் ஆழமான நேசத்தையும், வாழ்நாள் தோழமையையும் விரும்புகிறார்கள். பாலியல் ஈர்ப்பு என்பது அன்பின் அளவுகோல் அல்ல என்பதைப் புரிந்துகொள்வதே சமூகத்தின் முதிர்ச்சியாகும். பன்முகத்தன்மை கொண்ட இந்த உலகில், ஒவ்வொரு மனிதனும் தன் உணர்வுகளின்படி வாழ்வதற்கு முழு உரிமை உண்டு என்பதை அங்கீகரிப்பதே உண்மையான சமத்துவம்.

தமிழ்செல்வி

Related Posts