சர்வதேச விலங்கு உரிமைகள் தினம்: மனிதனை வாழ வைக்கும் ஜீவன்கள்!

சர்வதேச விலங்கு உரிமைகள் தினம்: மனிதனை வாழ வைக்கும் ஜீவன்கள்!

னித உரிமைகள் தினம் கொண்டாடப்படும் அதே டிசம்பர் 10-ம் தேதியன்று, ‘சர்வதேச விலங்கு உரிமைகள் தினழும்’ (International Animal Rights Day) கடைபிடிக்கப்படுவது எதேச்சையானது அல்ல. இந்த பூமியில் வாழ்வதற்கு மனிதனுக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அதே அளவு உரிமை ஐந்தறிவு ஜீவன்களுக்கும் உண்டு என்பதை உலகிற்கு உரக்கச் சொல்வதே இந்நாளின் நோக்கமாகும்.

2025 தீம் (Theme):
“Save Animals, Save the Planet!” (விலங்குகளை காப்போம், பூமியை காப்போம்!). இந்த தீம் விலங்கு நலனுக்கும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்துக்கும் இடையிலான இணைப்பை வலியுறுத்துகிறது. விலங்குகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் பூமியின் சமநிலை, பன்முகத் தன்மை (biodiversity) மற்றும் நிலையான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் என்பதை இது நினைவூட்டுகிறது.தீமின் முக்கிய அம்சங்கள்:
  • இணைப்பு வலியுறுத்தல்: விலங்குகளின் வாழ்விடங்கள் அழிவு, தொழில்துறை விவசாயம், மாசுபாடு போன்றவை சுற்றுச்சூழலை பாதிக்கின்றன. விலங்குகளைப் பாதுகாக்கும்போது, பூமியையும் காப்போம்.
  • செயல் அழைப்பு: விலங்குகளுக்கு இரக்கம் காட்டுதல், விழிப்புணர்வு பரப்புதல், பாதுகாப்பு முயற்சிகளில் பங்கேற்பது போன்றவற்றை ஊக்குவிக்கிறது.

சூழலியல் சமநிலை: மனிதகுலத்தின் அஸ்திவாரம்

உலகில் உள்ள விலங்குகளின் இருப்பைப் பொறுத்தே, ஒவ்வொரு இடத்தின் சூழலியல் மண்டலமும் இயங்குகிறது. மனிதனின் வாழ்க்கைச் சூழலைச் சிறப்பாக வழிநடத்துவது இயற்கையும் விலங்குகளும் இணைந்த கூட்டணிதான். நதிகளும் அருவிகளும் வற்றாமல் இருக்க புலி, சிங்கம் போன்ற காட்டு விலங்குகள் மறைமுகமாக உதவுகின்றன என்பது சூழலியல் உண்மை.

உதாரணத்திற்கு, காட்டில் இயற்கையாக விளையும் ஒரு வகை புற்கள்தான் அருவிகளில் இருந்து வரும் நீரைத் தேக்கி மனித பயன்பாட்டிற்குத் தருகின்றன. இந்தப் புற்களை அளவுக்கு அதிகமாக மான், காட்டெருமை போன்ற தாவர உண்ணிகள் மேய்ந்துவிடாமல் இருக்க, அவற்றை வேட்டையாடி உண்ணும் புலி, சிங்கங்கள் தேவைப்படுகின்றன. இந்த உணவுச் சங்கிலி அறுபட்டால், மனிதனின் நீராதாரம் பாதிக்கும். எனவே, விலங்குகளைக் காப்பது என்பது உண்மையில் மனித இனத்தைக் காப்பதேயாகும்.

வரலாறு காட்டும் வழி

விலங்குகள் நலனுக்கான குரல் இன்று நேற்று ஒலிப்பதல்ல. இயற்கைப் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் அசிசியார், விலங்குகளையும் இறைவனின் படைப்பாகக் கண்டு நேசித்தவர். அவர் மறைந்த அக்டோபர் 4-ம் தேதியை மையமாக வைத்து, ஹென்ரிச் ஜெம்மர்மேன் என்ற சமூக ஆர்வலரின் முயற்சியால் ‘உலக விலங்குகள் தினம்’ உருவானது. 1925-ல் ஜெர்மனியில் தொடங்கப்பட்ட இந்த முன்னெடுப்பு, இன்று உலகமெங்கும் விலங்குகள் மீதான கரிசனத்தை விதைத்துள்ளது. அந்த வரலாற்றுத் தொடர்ச்சியே, இன்று விலங்குகளுக்கான ‘உரிமை’ கோரும் நாளாக (டிசம்பர் 10) பரிணமித்துள்ளது.

விலங்குகளைக் காக்கும் தமிழகம்

வனவிலங்குப் பாதுகாப்பில் இந்தியா, குறிப்பாகத் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. உலகிலேயே வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை (1972) முதன்முதலில் ஏற்படுத்திய நாடு இந்தியா. தமிழகத்தின் மொத்த வனப்பரப்பில் 29.32% பரப்பளவில் வன உயிரினக் காப்பகங்கள் உள்ளன என்பது நம் மாநிலத்தின் சிறப்பு.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், முண்டந்துறை புலிகள் காப்பகம் போன்றவை சட்டங்கள் வருவதற்கு முன்னரே மக்களால் பாதுகாக்கப்பட்டவை. உழவுக்கும் தொழிலுக்கும் உதவும் கால்நடைகளைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாகப் பார்க்கும் பண்பாடு தமிழர்களுடையது.

அச்சுறுத்தல்களும் நமது கடமையும்

“மனிதர்கள் விலங்குகளுக்குத் தீங்கு செய்யாமல் இருந்தாலே போதும்; அவை தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும்” என்பதே நிதர்சனம். ஆனால், மனிதனின் பேராசை காடுகளை அழிக்கிறது.

  • வாழிட அழிப்பு: மனிதத் தேவைக்காகவும், ரியல் எஸ்டேட் ஆசைக்காகவும் காடுகள் அழிக்கப்படுவதால், யானைகள் ஊருக்குள் புகுந்து மனித-விலங்கு மோதல்கள் உருவாகின்றன.

  • சட்டவிரோத வேட்டை: தோல், பல், நகம் மற்றும் மருத்துவ மூடநம்பிக்கைகளுக்காக அரிய வகை உயிரினங்கள் வேட்டையாடப்படுவது வேதனைக்குரியது.

  • சுற்றுலாத் தொல்லை: காடுகளில் அமைதி தேடிச் செல்லும் நாம், பிளாஸ்டிக் கழிவுகளை வீசியும், ஒலி எழுப்பியும் விலங்குகளின் அமைதியைக் குலைக்கிறோம்.

மாற்றம் நம் கையில்

முற்காலத்தில் விலங்குகளிடமிருந்து மனிதனைக் காப்பாற்ற வேண்டியிருந்தது; இன்றோ மனிதர்களிடமிருந்து விலங்குகளைக் காப்பாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

வனவிலங்குகளும் காடும் ஒன்றோடொன்று இணைந்தவை. இதில் ஒன்று அழிந்தாலும் மற்றொன்று அழியும்; இறுதியில் மனித இனமும் அழியும். எனவே, வளரும் தலைமுறையினரிடம் விலங்குகள் மீதான அன்பையும், சூழலியல் புரிதலையும் விதைப்போம். இந்த பூமியானது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல; அது அனைத்து உயிரினங்களுக்குமான பொது வீடு என்பதை உணர்வோம்.

வாயில்லா ஜீவன்களின் உரிமையை மதிப்போம்; வளமான பூமியை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவோம்!

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!