திரிபுரா செல்ல இந்தியர்களுக்கும் தனி ‘விசா’ – ஜனாதிபதி ஆர்டர்!

திரிபுரா செல்ல இந்தியர்களுக்கும் தனி ‘விசா’ – ஜனாதிபதி ஆர்டர்!

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்புகள் வலுப்பெற்று திரிபுராவைத் தொடர்ந்து அஸ்ஸாம் மாநிலத்திலும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ள நிலை யில் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து செல்லும் மக்கள், உட்கோட்டு அனுமதி பெற்றுச் செல்லும் மாநிலங்கள் பட்டியலில் மணிப்பூரையும் இணைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். உட்கோட்டு அனுமதி என்பது ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பாதுகாக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய ஒரு குறிப்பட்ட கால அளவிற்கு வழங்கப்படும் அனுமதி சீட்டு ஆகும். குறிப்பாக, இது இந்தியாவின் சில வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகளுக்கு செல்ல வழங்கப்படும் அனுமதியைக் குறிக்கும்.

இந்தச் சீட்டு வெறும் நுழைவு அல்லது பயண அனுமதி மட்டுமே; தங்குவதற்கல்ல. இதைத்தவிர, வெளி மாநிலத்தவர் இப்பகுதிகளில் அசையா சொத்துகளை வாங்கமுடியாது. கலப்புத் திருமணம் செய்ய முடியாது போன்ற நிபந்தனைகளும் உண்டு. வரலாற்றின் அடிப்படையில் தேநீர், எண்ணெய், யானை தந்தம், காண்டாமிருக கொம்பு மற்றும் தோல் ஆகிய தொழில்களுக்குப் போட்டியாக பிற ஆங்கில நிறுவனங்கள் மற்றும் தனியார் வருவதைத் தடுக்கும் எண்ணத்தில் இந்த அனுமதி, 1873ம் ஆண்டு ஆங்கிலேய அரசால் கொண்டு வரப்பட்டதாகும்.

‘வங்க எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறை’ என்றழைக்கப்பட்ட இந்த முறையின் மூலம் மிசோரம், நாகாலாந்தின், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த அனுமதிச் சீட்டு வழங்கியதில் இருந்து துவங்கியது. பின்னர், இது மற்ற வடகிழக்கு எல்லைப் பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டது.

இந்திய சுதந்திரத்திற்குப்பின், 1950ம் ஆண்டு ஆங்கிலேய அரசின் சட்டத்தில் ’பிரிட்டிஷார்’ என்ற வார்த்தையை அகற்றி ‘இந்திய குடிமகன்’ என்று மாற்றப்பட்டு அருணாசல பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த உட்கோட்டு அனுமதி முறை மணிப்பூர் மாநிலத்துக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இதுதொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இதைதொடர்ந்து, இந்தியாவின் பிறபகுதிகளில் இருந்து செல்லும் மக்கள் உட்கோட்டு அனுமதி பெற்றுச்செல்லும் மாநிலங்கள் பட்டியலில் மணிப்பூர் மாநிலத்தையும் இணைத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில், திரிபுராவைத் தொடர்ந்து அஸ்ஸாமில் 10 மாவட்டங்களிலும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கம் இன்று இரவு 7 மணிக்குத் தொடங்கி அடுத்த 24 மணி நேரத்துக்கு அமலில் இருக்க உள்ளது.அதேசமயம், வடகிழக்கு மாநிலங்களில் சட்டம் ஒழுங்கைக் கடைபிடிக்க மத்திய அரசு இன்று 5,000 துணை ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

error: Content is protected !!