ட்விட்டர் தலைமை நிர்வாகி ராஜினாமா! – புதிய சி இ ஒ-வாகிறார் இந்தியரான பராக் அக்ரவால்!
சோஷியல் மீடியாவின் டாப் 5ல் இடம் பிடித்த ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஜேக் டோர்சி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த ட்விட்டரை கடந்த 2006ஆம் ஆண்டு பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸ் மற்றும் நோவா கிளாஸ் ஆகியோருடன் இணைந்து நிறுவினார் ஜாக் டோர்சி (வயது 45). இணை நிறுவனர்களுள் ஒருவராக இருந்தாலும் கூட விரைவாகவே ட்விட்டர் நிறுவனத்தின் முகமாக மாறினார் ஜாக் டோர்சி. 2008ஆம் ஆண்டில் ட்விட்டரின் தலைவர் பதவியில் இருந்து விலகிச் சென்ற ஜாக் டோர்சி டிஜிட்டல் பேமெண்ட் செயலியான square-ஐ நிறுவினார். அதுவும் பில்லியன் டாலர் நிறுவனமாக உருவெடுத்தது.
இருப்பினும் 2015ஆம் ஆண்ட் அப்போதைய தலைமை செயல் அதிகாரியாக இருந்த டிக் கோஸ்டோலோ தனது பதவியிலிருந்து விலகியதால் ஜாக் டோர்சி சிஇஓவானார். இருப்பினும் இரு நிறுவனங்களில் உயர் பதவியில் இருந்து வந்ததால் ஒற்றை இலக்குடன் பயணிக்கக் கூடிய சிஇஓவாக இருக்க வேண்டும் என ட்விட்டரின் முதலீட்டாளர்கள் அழுத்தம் கொடுத்து வந்ததால் ஜாக் டோர்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்த நெருக்கடியில் இருந்து வந்த ஜாக் டோர்சி தனது சிஇஓ பதவியை இன்று யாரும் எதிர்பாராத வகையில் ராஜினாமா செய்துவிட்டு ட்விட்டரில் இருந்து விலகியிருக்கிறார். ஜாக்
இது தொடர்பாக ஜாக் தனது ட்விட்டர் பக்கத்தில், விரிவான கடிதத்தையும் பதிவு செய்துள்ளார். அதில் ‘கிட்டத்தட்ட 16 வருடங்கள் நிறுவனத்தின் இணை நிறுவனர் முதல் சிஇஓ வரை பல பொறுப்புகளை ஏற்றுள்ளேன். தறபோது வெளியேறுவதற்கான நேரம் இது. ஒரு நிறுவனம் நிறுவனர் தலைமையில் இருப்பதன் முக்கியத்துவம் பற்றி நிறைய பேசப்படுகிறது’என டோர்சி கூறியிருந்தார்.
ஜேக் டோர்சி பதவி விலகியதை அடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப நிர்வாகி பராக் அக்ரவால் ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பராக் அக்ரவால் 2011ஆம் ஆண்டு அக்டோபரில் ட்விட்டர் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலையில் இணைந்தார். அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப தலைவர் ஆக இருந்த ஆடம் மெசிஞ்சர் அப்பதவியில் இருந்து விலகியதை அடுத்து பராக் அக்ரவால் மார்ச் 8, 2018ல் ட்விட்டரின் CTO பொறுப்புக்கு வந்தார்.
மேலும் இந்த பராக் அக்ரவால் பாம்பே ஐஐடி, ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் (பிஹெச்டி) கல்வி பயின்றவர். மைக்ரோசாஃப், யாஹூ மற்றும் AT&T Labs நிறுவனங்களில் ஆராய்ச்சி பயிற்சியாளர் ஆக இருந்துள்ளார்.
தற்போது தன்மேல் நம்பிக்கை வைத்து ட்விட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள பராக் அக்ரவால் நிறுவனத்தை மென்மேலும் உயர்த்த பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.