அதானியின் அசுர வளர்ச்சி : உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-ம் இடம் பிடிச்சுட்டார்!
உலக அளவில் பேமசாணா போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் 155.7 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசை பின்னுக்கு தள்ளி, இந்தியாவைச் சேர்ந்த பிரதமர் மோடியின் நண்பர் கௌதம் அதானி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில், 273.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரராக முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசை பின்னுக்கு தள்ளி, 155.7 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவைச் சேர்ந்த கௌதம் அதானி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் 70 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இவ்வளவு நிகர மதிப்பு அதிகரிப்பைக் கண்டது உலகின் முதல் 10 பணக்காரர்களில் அதானி மட்டுமே. இந்த ஆண்டில் அதானியின் சொத்து மதிப்பு அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த பிப்ரவரியில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானியை முதன் முதலில் முந்தினார் அதானி. அதே போல கடந்த மாதம் உலகின் நான்காவது பணக்காரரான மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸை விஞ்சினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசையும் முந்தி இரண்டாம் இடத்துக்கு அதானி முன்னேறி உள்ளார்.
மார்ச் 2022 பங்குச் சந்தை தகவலின்படி, அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன்ஸ் ஆகிய நிறுவங்களின் 75% பங்குகளை அவர் வைத்திருக்கிறார். அதானி எரிவாயு நிறுவனத்தில் 37 சதவீதமும், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 65 சதவீதமும், அதானி பசுமை எரிசக்தி நிறுவனத்தில் 61 சதவீதம் பங்குகளையும் அதானி வைத்துள்ளார்.
ரிலையன்ஸ் குழும தலைவரான முகேஷ் அம்பானி, உலக பணக்காரர்கள் வரிசையில் 8-வது இடத்தில் உள்ளார்.