செட்டிநாடு குழுமம் கிட்டத்தட்ட 700 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு!?

செட்டிநாடு குழுமம் கிட்டத்தட்ட 700 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு!?

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 700 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்ட செட்டிநாடு நிறுவனம் சிமெண்ட், கட்டுமானம், லாஜிஸ்டிக்ஸ் என இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனமானது வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை, திருச்சி, கோவை, ஆந்திரா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட 60 இடங்களில் கடந்த 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் செட்டிநாடு குழுமம் ரூ. 700 கோடி வரை வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரிஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. லாபத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதை வருமான வரிதுறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் கணக்கில் வராத பணம் ரூ. 23 கோடியையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செட்டிநாடு குழுமம் வெளிநாட்டில் ரூ. 110 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்களும், பல்வேறு வங்கிகளில் நிரந்தர வைப்புத்தொகை வைத்ததற்கான ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனடிப்படையில் செட்டிநாடு குழுமத்தின் மீது கருப்புப் பண தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். லாபத்தை குறைத்துக் காட்டி, போலியான ஆவணங்கள் மூலம் மோசடி செய்தும், மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது பெறப்பட்ட நன்கொடை மற்றும் போலி ரசீதுகளை மறைத்து சுமார் 435 கோடி ரூபாயை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் செட்டிநாடு குழுமம் மற்ற குழுமத்துக்கு பல துறைமுகங்களில் உள்ள கட்டுமானங்களை விற்பனை செய்ததில் நடந்த பரிவர்த்தனைகளை கண்டுபிடித்துள்ளனர். அதில் முறையாக கணக்கு காட்டாத ரூ. 280 கோடியை கண்டுபிடுத்துள்ளனர். செட்டிநாடு குழும நிறுவனங்களிடையே நடந்த போலி பரிவர்த்தனைகளை கண்டு பிடித்த வருமானவரித்துறையினர் பல்வேறு முக்கிய ஆவணங்களையும் லாக்கர்களையும் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். இந்த சோதனை தொடர்பாக செட்டிநாடு குழுமத்தின் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related Posts

error: Content is protected !!