வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மார்ச் 15 ந்தேதி வரை கால அவகாசம்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசத்தை மார்ச் 15 ந்தேதி வரையில் நீடித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
பொதுவாக வருமான வரி கணக்கு தாக்கல் (ITR Filing) செய்ய, ஜூலை 31 ந் தேதி தான் கடைசி நாளாக இருக்கும். ஆனால், கொரோனா தொற்றுப் பாதிப்பு காரணமாகவும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரித் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப மற்றும் இதர பிரச்சினைகள் காரணமாகவும், முதலில் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலும் பிறகு டிசம்பர் 31ஆம் தேதி வரையிலும் என வருமான வரி தாக்கல் செய்யவதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டது.
மார்ச் 15 ந்தேதி வரை நீட்டிப்பு
இந்த நிலையில் 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய மார்ச் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சகமும், வருமான வரித்துறையும் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் வரி செலுத்துவோர் சிக்கலை சந்தித்துள்ளனர். இதை கருத்தில் கொண்டும், இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம், மார்ச் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.