இளையராஜா 75 நிறைவு விழாவில் ரஜினி & கமல் பேசியது இதுதான்!

இளையராஜா 75 நிறைவு விழாவில் ரஜினி & கமல் பேசியது இதுதான்!

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், சென்னை  நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ‘இளையராஜா – 75’ என்ற பெயரில் பாராட்டு விழா நடந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகினர் மற்றும் ஆயிரக் கணக் கான ரசிகர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழா நேற்று மாலை தொடங்கி இன்று நிறைவடைந்தது.நேற்றைய நிகழ்வின் ஹைலைட்டாக  ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் போட இளையராஜா ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலை பாடி ரசிகர் களை பெருமகிழ்ச்சிக்கு ஆளாக்கினார். இரண்டாம் நாளான இன்று நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என உச்ச நட்சத்திரங்கள் பலரும் வருகை தந்து இருந்தனர்.

விழாவில் ரஜினி பேசும் போது, “கலைகளிலேயே உயர்ந்த கலை இசைக் கலை. அதுதான் சாமானியர்களுக்கும் புரியக்கூடியது. அதனால், இசைக் கலைஞர்களை பெரிதும் போற்றுகிறேன். சில லிங்கம் நீரில் உருவாகும், சில லிங்கம் மனிதனால் உருவாக்கப்படும், சுயம்புவாகவும் சில லிங்கம் உருவாகும். இளையராஜா சுயம்பு லிங்கம் போன்றவர். அது அபூர்வமாகவே உருவாகும். அது வெளிப்படும் போது அதன் சக்தியும், அதிர்வும் அபாரமாக இருக்கும்.

திரைத் துறைக்காக தியாகம் செய்தவர் இளையராஜா. அவரது ஒட்டுமொத்த திறமையும் ‘அன்னக்கிளி’யில் இசையாக வெடித்து வெளிவந்தது. அன்று தொடங்கிய அவரது இசை ராஜ்ஜியம் இன்றுவரை நடக்கிறது. அவரை கவுரவிக்கும் வகையில், தயாரிப்பாளர் சங்கம் விழா நடத்துவது மகிழ்ச்சி.

பாடல்களை மட்டும் வைத்து பிரபலமானவர் என்று இளையராஜாவை மதிப்பிட முடியாது. அதற்கும் மேலாக அவர் வாழ்க்கை தியாகம் நிறைந்தது. கஷ்டப்பட்ட எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்து இருக்கிறார். 1980 கால கட்டங்களில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு 13, 14 படங்கள் என்று வெளியாகும். அவற்றில் 10, 12 படங்கள் இளையராஜா இசையமைத்தவைகளாகவே இருக்கும்.

நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய இளையராஜா ஸ்டூடியோவில் வரிசையில் நிற்பார்கள். அவர் பாடல்களுக்கு இசையமைத்து ரீ-ரிக்கார்டிங் செய்துவிட்டால், அந்த படத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.

ஒரே நாளில் 3 படங்களுக்கு கூட தூங்காமல் ரீ-ரிக்கார்டிங் செய்திருக்கிறார். ஆனால் இப்போது ஒரு படத்துக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய 30 நாட்கள் ஆகிறது. தயாரிப்பாளர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி உழைத்தார்.

டைரக்டர்கள் கதை சொல்லும்போது சரியாக இல்லாமல் இருந்தால் அதில் சில திருத்தங்கள் சொல்வார். அதுமட்டுமின்றி தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்காமல் கூட இருந்திருக்கிறார். இதனால் தான் அவரின் காலில் விழுகிறார்கள். பாடல்களுக்கு 70 சதவீதம் இளையராஜாவே பல்லவி போட்டிருக்கிறார்.

மற்ற பாடல் வரிகளிலும் அவருடைய பங்களிப்பு இருக்கிறது. சினிமா துறைக்கு பெரிய தியாகம் செய்திருக்கிறார். அவர் நீண்ட காலம் நிம்மதியாக வாழவேண்டும்

என்னைக்கூட தன் படத்தில் பாட வைத்தார். ‘மன்னன்’ படத்தில் 6 வரிகள் பாடினேன். பாடியது என்னவோ 6 வரி. ஆனால், அதற்கு 6 மணி நேரம் பயிற்சி எடுத்தேன். என்னுடைய பெரும்பான்மையான படங்களுக்கு இளையராஜா சார்தான் இசையமைத்திருக்கிறார். ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். 6 ஆயிரம் பாடல்களுக்கு மேல் தந்திருக்கிறார். உண்மையிலேயே ராஜா சார் இசைமேதை.

ஆரம்பத்தில் ‘ராஜா சார்’என்றுதான் கூப்பிடுவேன். அப்புறம், சிறிய இடைவெளிக்குப் பிறகு எதேச்சையாக சந்தித்தபோது, பேன்ட்-சட்டையில் இருந்து வேட்டி-ஜிப்பாவுக்கு மாறியிருந்தார். அவரை ‘சார்’ என்று கூப்பிடத் தோன்றவில்லை. ‘சாமி’ என்று கைகூப்பத்தான் தோன்றியது. அதுமுதல், நாங்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ‘சாமி’ என்றுதான் கூப்பிட்டுக் கொள்கிறோம். பெரிய மனிதர் எவ்வளவு எளிமையாக, தூய்மையாக இருக்கிறார் என்பதற்கு இளையராஜா உதாரணம். அவருக்கு நடக்கும் இந்தப் பாராட்டு விழாவில் நானும் நிற்கிறேன் எனப் பெருமைப்படுகிறேன்” என்றார்

தொகுப்பாளர் சுஹாசினி ரஜினியிடம், `உங்களுக்குப் பிடித்த ராஜா சார் பாட்டு எது’ என்று கேட்டார். அதற்கு ரஜினி, “அவர் இசையமைச்ச எல்லா பாட்டும் எனக்குப் பிடிக்கும். ஒரு ஹீரோவுக்கு முரட்டுகாளைல வர்ற `பொதுவாக என் மனசு தங்கம்’ பாட்டவிட வேற என்ன வேணும். `ராமன் ஆண்டாலும் ’ பாட்டு இப்ப இதுவா இருக்கு. `ஊர தெரிஞ்சிக்குட்டேன்’ மாதிரி ஒரு பாட்டு வருமா?. இருந்தும் அவர் கமலுக்குதான் நிறைய நல்ல பாட்டு போட்டுருக்காரு’’என்றார்.

அப்போது பேசிய இளையராஜா, “`இதைக் கமலிடம் கேட்டால், ரஜினியின் படங்களுக்குத்தான் பிரமாதமாகப் பாட்டு போட்டுத்தருகிறீர்கள் என்று சொல்லுவார். அவ்வளவு ஏன்… ராமராஜன் படங்களுக்குக் கூடத்தான், நல்ல நல்ல பாடல்கள் தந்திருக்கிறேன். நீங்களெல்லாம் பெயர் வைத்திருக்கிறீர்களே… மைக் மோகன் என்று! அந்த நடிகர் மோகனுக்குக் கூடத்தான், நல்ல பாடல்கள் போட்டுக் கொடுத்திருக்கிறேன். எனக்கு யார் இயக்குநர், நடிகர் யார் என்பதெல்லாம் இல்லை. பாரபட்சம் இல்லாமல்தான் இசையமைப்பேன். அதுதான் என் வழக்கம்” என்று பதிலளித்தார்.

விழாவில் நடிகர் கமல் பேசுகையில், ரஜினிக்கு இசையமைத்து போல் எனக்கு இசையமையுங்கள் என்று நான் கேட்டுள்ளேன். மேலும் இங்கு ஒரு உண்மையை சொல்லியாக வேண்டும். நான் அரசியலுக்கு வர காரணம் இளையராஜா தான் இவரின் அறிவுரை தான். முதலில் ஆலோசனை கூறியதும் இவர் தான்.

ஒரு அண்ணன் வேண்டாம் என்றார் (சந்திரஹாசன்). மற்றொரு அண்ணன் வேண்டும் என்றார் அவர் இளையராஜா. இவருடைய 100 படங்களில் பாடியுள்ளேன். இவர்தான் என் குரு. என்றார். தொடர்ந்து கமல், இளையராஜாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். மேலும் கமல் தனது மகள் ஸ்ருதியுடன் சேர்ந்து இரண்டு பாடல்கள், மற்றவர்களுடன் சேர்ந்து மூன்று பாடல்கள் என மொத்தம் ஐந்து பாடல்களை பாடினார். இதில் ஸ்ருதியுடன் சேர்ந்து அவர் பாடிய ஹே ராம் பாடலும், குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

error: Content is protected !!