சின்னதம்பியை கும்கி யானையாக மாற்றக் கூடாது என்ற மக்களின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும்!

சின்னதம்பியை கும்கி யானையாக மாற்றக் கூடாது என்ற மக்களின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும்!

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக செய்திகளில் முக்கியத்துவம் பெற்று வரும் சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றினால் தான் மக்களுக்கு பாதுகாப்பு என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை அருகே தடாகம், நஞ்சுண்டபுரம் போன்ற கிராமங்களுக்குள் சில மாதங்களுக்கு முன்பு 2 காட்டு யானைகள் நுழைந்தன. அங்கு விளைநிலங்களை அழிப்பது, ஊர் மக்களை அச்சுறுத்துவது என அட்டகாசம் செய்து வந்தன. பின்னர் மீண்டும் காட்டுக்குள் சென்றுவிட்டு அவ்வப்போது வந்து அட்டூழியம் செய்தன. அதனால் வனத்துறையினரோ, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று எண்ணி இந்த யானைகளை பிடிக்க திட்டமிட்டனர். ஆனால் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் இந்த 2 யானைகள் மீது கிராம மக்களுக்கு கொஞ்ச நாளிலேயே பாசம் அதிகமாகி விட்டது. அதனால் விநாயகா, சின்னதம்பி என்று இந்த யானைகளுக்கு பெயரையும் சூட்டி அழைத்து வந்தார்கள்.

இதில் வினாயகா ரொம்ப சாதுவான டைப். யாருக்கும் எந்தத் தொந்தரவும் தராது. ஆனால் சின்ன தம்பியோ எமகாதகன்! பயங்கர சேட்டை… எதற்கும் அடிபணியாமல் எல்லாரையும் தெறிக்க விட்டுவிடும். இந்நிலையில் கடந்த மாதம், சாதுவான விநாயகாவை முதலில் பிடிக்கலாம் என திட்டமிட்ட வனத்துறையினர் விஜய், மற்றும் கலீம் என்ற 2 கும்கி யானைகளை வரவழைத்தனர். “ஆபரேஷன் விநாயக்” என்று ஒரு பெயரையும் சூட்டி, விநாயகாவை பிடித்துக் கொண்டு போய் முதுமலை காட்டில் விட்டார்கள். அப்போது கிராம மக்கள் விநாயகாவுக்கு மிகுந்த சோகத்துடன் பிரியாவிடை கொடுத்து வழி அனுப்பியனுப்பினர்.

அடுத்ததாக சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப் பட்டது. இதனால் அந்த யானை எங்கும் செல்லாமல் அங்கேயே நின்றது. அதனுடன் ஒரு பெண் யானை மற்றும் குட்டி இருந்தன. அந்த யானைகள் வனத்துறையினரை அருகில் விட வில்லை. சுமார்1 மணி நேரம் போராடியும் அந்த யானை, மற்றும் குட்டியை அங்கிருந்து துரத்த முடியவில்லை.

இதையடுத்து கும்கிகள் மூலம் அந்த யானைகள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டன. கும்கி யானை கள் விஜய், பொம்மன் ஆகியவற்றின் உதவியுடன் சின்னதம்பி யானை லாரியில் ஏற்றப்பட்டது. பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வரகளியாறு பகுதியில் சின்னத்தம்பி விடப்பட்டது. வனப் பகுதியில் விடப்பட்ட 4 நாட்களில் சின்னத்தம்பி மீண்டும் ஊருக்குள் புகுந்தது. பொள்ளாச் சியை அடுத்த அங்கலக்குறிச்சி, கோட்டூா் உள்ளிட்ட கிராமங்களில் சின்னத்தம்பி யானை உலா வந்தது.

பல நூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த சின்னத்தம்பி கடந்த வெள்ளிக்கிழமை திருப்பூர் மாவட்டம் பள்ளபாளையம், தீபாளப்பட்டி பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கிருந்து மையவாடி என்ற இடத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே உள்ள பகுதிக்கு நேற்று வந்தது, சின்னத்தம்பி. தற்போது திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனி வாசன், சின்னதம்பியை கும்கியாக மாற்றுவதே சிறந்தது என யானை ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் கருதுவதாகக் கூறினார். அதே சமயம், சின்னதம்பியை கும்கி யானை யாக மாற்றக் கூடாது என்ற மக்களின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சின்னதம்பியால் மக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் , யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!