தமிழ் குரல் / AI Voice
சில நாட்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண், தான் மறைந்த முதல்வர் ஜெ.வி மகள் என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடுமாறு அவரை வலியுறுத்திய நீதிமன்றம், அவரின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், ஜெ.விற்கு ஒரு மகள் உண்டு அது அம்ருதாவாக இருக்கலாம். டி.என்.ஏ சோதனை செய்து பார்த்தால் உண்மை தெரியும் என ஜெ.வின் உறவினர் லலிதா என்பவரும், ஜெ.வின் அண்ணன் வாசுதேவனும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.
அந்நிலையில், ஜெ.விற்கு அக்குபஞ்சர் சிகிச்சையளித்த மருத்துவர் சங்கர் சில பரபரப்பு தகவல்களை கூறிவருகிறார். ஜெ.வின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷனில் சமீபத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அதிகளவில் கொடுத்தது அவருடைய உடல்நலத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம். 2016 சட்டசபை தேர்தலின் போது ஜெயலலிதாவுக்கு நான் சிகிச்சை அளித்தேன். என்னுடைய சிகிச்சைக்கு பின்னர் அவருடைய கால் வீக்கங்கள் குறைந்து நன்றாக நடந்தார். ஆனால் ஜெயலலிதாவை அப்பலோவில் அனுமதித்தபின் பலமுறை சந்திக்க முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அம்ருதா பற்றி கருத்து தெரிவித்திருந்த சங்கர் “ அம்ருதா கூறுவது மாதிரி அவர் ஜெ.விற்கும், சோபன்பாபுவிற்கும் பிறந்தவராக இருந்தால், ஜெ மற்றும் சோமன்பாபுவின் மகன் ஆகியோரின் டி.என்.ஏ இருந்தால் போதும், அதை வைத்து கண்டுபிடித்து விடலாம். ஜெ.வின் டி.என்.ஏ கண்டிப்பாக அப்போலோ மருத்துவமனையில் இருக்கும். அதை நீதிமன்றம் மூலம் கேட்டல் நிச்சயம் கிடைக்கும்.
அம்ருதா என்னை சந்தித்து இதுபற்றி பேசினார். ஆனால், நீங்கள் சட்டரீதியாக அணுகிக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டேன். அங்க லட்சணம், கை வாக்கு, நோய்த்தன்மை ஆகியவற்றை வைத்து அம்ருதா ஜெ.வின் மகளா என்பதை 40 சதவீதம் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். மீதி 60 சதவீதத்தை டி.என்.ஏ சோதனையால் மட்டுமே கண்டறிய முடியும்.
போயஸ்கார்டனில் இறந்து பின்புதான் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனக் கூறுவது தவறு. இறந்த ஒருவருக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை செய்ய முடியாது. அவருக்கு அளித்த மருந்துகளின் பக்க விளைவுகளே அவரின் மரணத்திற்கு காரணம்” என அவர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் யார் ஈடுபட்டாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளவரசியின் மகனும், ஜெயாடிவி தலைமைச் செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விவேக் ஜெயராமன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தின் முகமாகவும், நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமையாகவும் விளங்கியவர் ஜெயலலிதா. அவரது தனிப்பட்டை வாழ்க்கை குறித்து சிலர் மனசாட்சியற்ற கருத்துகளை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். அவர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் அவர் மகள் என்று சிலர் அவதூறுகளை பரப்பிவருவது கண்டிக்கத்தக்கது.
ஜெயலலிதா மறைந்தபோது வெற்று பரபரப்புகளுக்காக சிலர் இப்படிப்பட்ட அவதூறுகளைப் பரப்பியபோது காலப்போக்கில் இவையெல்லாம் காணாமல் போகும் என்று எண்ணி பொறுமையாக இருந்தோம். ஆனால், ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் ஆன பிறகும் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் சிலர் தங்கள் விருப்பத்திற்கு கதை, கற்பனைகளைக் கிளப்பிவிட்டு ஜெயலலிதா புகழுக்குக் களங்கம் கற்பிப்பது கொஞ்சமும் சகிக்க முடியாத மனசாட்சியற்ற செயல்.
வளர்ப்பு மகனாக சுதாகரனை தத்தெடுத்த போதும் மிக வெளிப்படையாக மக்களிடம் அறிவித்தார். அவெருக்கென யார் இருந்தாலும் அவர் மறைத்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அவரின் மரியாதையை குறைக்கும் விதமான எந்த செயலையும் யார் செய்தாலும் ஏற்க முடியாது. இத்தகைய அவதூறுகளை அதிமுக தொண்டர்கள் ஒரு போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் இனி யார் ஈடுபட்டாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விவேக் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.



