‘க்’ – திரைப்பட விமர்சனம்

‘க்’ – திரைப்பட விமர்சனம்

ரு கால் பந்து வீரனுக்கு விளையாட்டில் அடிபட அதைத் தொடர்ந்து நடக்கும் மர்மமான சம்பவங்கள் அவன் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பது தான் கதை. ஜீவி படத்தில் தனது கதை வசனத்தால் ஈர்த்த பாபு தமிழ் இயக்கியிருக்கும் முதல் திரைப்படம்.

பார்வையாளர்களுக்கு ஒரு கதையையும், உடன் சிறு சிறு தகவல்களையும் கொடுத்து, இறுதியில் பார்வையாளர்களையே கொடுத்த தகவல்களை கோர்த்து கதையை புரிந்துகொள்ளும் படி உருவாக்கபடும் திரைக்கதைகள் ஹாலிவுட்டில் தொடர்ந்து வந்தாலும், இந்தியாவில் இது போன்ற படங்களின் வரத்து குறைவாகவே உள்ளது. அப்படிப்பட்ட கதையமைப்பை சேர்ந்த படம் தான் “க்” .

ஒரு புட்பால் வீரனுக்கு ஒரு ஆட்டத்தின் நடுவே ஒர் விபத்து நிகழ்கிறது. அதன்பிறகு அவன் வாழ்கையில் நிகழும் அடுத்தடுத்த சம்பவங்கள் அவனை குழப்புவதாகவும், ஆச்சர்யத்த்தை தருவதாகவும் இருக்கிறது. அவனை சுற்றி நடக்கும் குழப்பங்களுக்கான காரணம் என்ன, இவனுக்கு ஏன் அந்த சம்பவங்கள் நடக்கிறது ? என்ற இரு கேள்விகளை வைத்தே முழுகதையும் அமைந்துள்ளது.

திரைக்கதையின் வரைமுறைக்குள் சிக்காமல், அனுபவத்தின் வரைமுறைக்குள் சிக்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சூப்பர் நேச்சுரல் திரில்லர், சைக்காலஜிகல் திரில்லர் என்ற வகையை சேர்ந்த இந்த படத்தின் திரைக்கதை ஒவ்வொரு காட்சியிலும் ஒரு கேள்வி, ஒரு அதிர்ச்சி என அமைக்கப்பட்டுள்ளது வசியம் செய்ய முயல்கிறது.

ஆனால் திரைக்கதையமைக்க எடுத்துக் கொண்ட இந்த சிரத்தை, படமாக்குத்தலில் கொஞ்சம் காட்டியிருக்கலாம் படம் மொத்தமாக சறுக்கும் இடம் அதுதான். ஒவ்வொரு காட்சிகளையும் பார்வையாளர்கள் கண்ணெடுக்காமல் பார்க்க வேண்டும் என்ற உணர்வை படம் காட்சி மொழியாக கடத்தவில்லை.

வசனங்கள் எழுத்தப்பட்ட விதம், அதற்கான சிந்தாந்தங்களை வசனத்தில் புகுத்திய விதமும் அருமை என்றால், அதை டெலிவரி பண்ணிய விதமும் இடமும், பாராட்டுகள் வாங்க வேண்டிய நிலைமையை உடைத்து விடுகிறது. திடீரென்று வரும் பாட்டுகள் படத்தை விட்டு நம்மை நகர்த்தி வெளியே கொண்டு போய் விடுகிறது. அதன்பிறகு மறுபடியும் படத்தினுள் நுழைய வேண்டியது போல் உள்ளது.

அறிவியலுக்கும், மனித மனத்திற்குமிடையே இருக்கும் நூலை பிடித்து பயணிக்கும் இந்த கதையில் அதற்கான பங்கை நடிகர்கள் வழங்கவில்லை. குருசோமசுந்தரம் வழக்கம் போல், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் முழு உருவகத்தையும் கொடுத்தாலும், அவரது முழு நடிப்பையும் வெளிக்கொண்டுவரும் இடம் அமையவில்லை. கிருஷ்ணன்,சகுனி, சூத்திரதாதி, தந்திரவாதி, ரகசியம் அறிந்தவன் என பல கதாபாத்திர பூச்சுகள் குருசோமசுந்தரம் கதாபாத்திரம் மேல் விழுந்திருந்தாலும், அதை அவர் வெளிபடுத்துவதற்கான தொடர்ச்சியான காட்சிகள் இல்லாமல், தொங்கு காட்சிகளாக அங்கங்கு வருகிறது.

படத்தின் இயக்குனர் பாபு தமிழ் தான் சிறந்த கதைகளை எழுதக்கூடிய எழுத்தாளர் என ஆணித்தனமாக கூறியுள்ளார். சிறு திருத்தங்கள் மட்டுமே தேவைப்படும் அவர் எழுத்து, தமிழ் சினிமாவிற்கு கண்டிப்பாக தேவைப்படும் ஒன்று.

படத்தின் உருவாக்கம் ஒரு நாடகத்தை பார்ப்பது போல் அமைந்ததும், தமிழுக்கு ஒட்டாத முகங்களின் நடிப்பும் படத்தை ரசிகர்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது.

அதீத புத்திசாலிகளுக்கான விடுகதை போல் அமைந்திருக்கிறது. சாதாரண ரசிகனையும் கருத்தில் கொண்டு உருவாக்கியிருக்கலாம்.

க் முழுதான சினிமாவாகவில்லை

மார்க் 2.5 / 5

error: Content is protected !!