ஒரு வேலையை செஞ்சா அத உருப்படியா செஞ்சு முடி!- ஆறுமுகசாமி ஆணைய வரலாறு!

ஒரு வேலையை செஞ்சா அத உருப்படியா செஞ்சு முடி!- ஆறுமுகசாமி ஆணைய வரலாறு!

“ஒரு வேலையை செஞ்சா அத முழுசா உருப்படியாக செஞ்சு முடி” அப்படிங்குறது தான் முன்னோர்கள் நமக்கு வழங்கிய அறிவுரை. முன்னோர்களின் கூற்றுப்படி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது வரை அனைத்து செய்திகளையும் முழுமையாகவும், சரியாகவும் கொடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவு…

செப்டம்பர் 22, 2016 அன்று உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா 75 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பொதுமக்களுக்கு எழுந்த புகாரின் அடிப்படையிலும் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தத்தின் அடிப்படையிலும் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்தார் அப்போதய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சரி விசாரணை ஆணையம் அமைப்பதற்கான அறிவிப்பு வந்துவிட்டது. யார் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட போகிறது ? விசாரணை எங்கிருந்து தொடங்கப் போகிறது ? யார் யாரிடம் விசாரணை நடைபெறும் என்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் செய்தியாளர்களாகிய எங்களுக்கு மட்டுமல்ல சாதாராண பொதுமக்களுக்கும் கூட எழத் தொடங்கியது.

விசாரணை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியானதுமே அவர் யார் ? எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் ? நீதிபதியாக இருக்கும் போது எந்த மாதிரியான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார் ? என தேட தொடங்கினோம். அவர் நீதிமன்றத்தில் தான் நீதிபதி என்பதையும், வெளியில் சகஜமாக பேசக்கூடியவர் என்பது அந்த நேரத்தில் எங்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (அவரின் பண்புகளை அடுத்து வரும் பத்திகளில் விரிவாக பார்க்கலாம் ) விசாரணைக்காக சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் அலுவலகம் அமைக்கப்படுகிறது. எழிலகம் என்பது பெயரில் மட்டுமல்ல எழில் கொஞ்சும் சூழல் நிலவக்கூடிய இடமும் கூட. பசுமை தீர்ப்பாயம் இருப்பதால் என்னவோ அந்தளவுக்கு அமைதியும், ரம்மியான சூழலும் நிறைந்த இடம் அது.

நீதியரசர் விசாரணையை தொடங்குவதற்கு முன்பாகவே தானாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து ஆஜராகினார் திருப்பரங்குன்றம் மருத்துவர் சரவணன். சமீபத்தில் அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவத்திற்கு பிறகு பாஜகவிலிருந்து விலகினாரே அவரே தான். அவர் அப்போது திமுகவில் இருந்தார். திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் வழங்கக்கூடிய படிவத்தில் ஜெயலலிதாவின் கை ரேகை தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த அவர் ஆணையத்தில் முதல் ஆளாக ஆஜராகி தனது வாக்குமூலங்களை பதிவு செய்தார். அவர் தொடங்கி கடந்த ஐந்து ஆண்டுகளில், ஜெயலலிதாவின் உறவினர்கள், உதவியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், 159 பேர் ஆணையத்தில் ஆஜராகி தனக்கு தெரிந்த தகவல்களை வாக்குமூலங்களாக பதிவு செய்துள்ளனர். அதிமுகவின் மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை, பொன்னையன் ஆகியோரும் அடங்குவர். விசாரணை தீவிரமாக சென்று கொண்டிருந்த சமயத்தில் தான் அப்பல்லோ நிர்வாகம் தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. அவ்வப்போது வழக்கு வாய்தாவுக்கு வந்தாலும் தீர்ப்பு வெளியாவதாக தெரியவில்லை. ஆணையத்தின் செயல்பாடுகளும் முடங்கின. ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசமும் நீட்டித்து கொண்டே செல்லப்பட்டன. ஆட்சி மாற்றமும் கூட ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கினாலும், எய்ம்ஸ் மருத்துவக்குழு முன்னிலையிலே விசாரணை நடைபெற வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் விசாரணையே நடைபெறாவிட்டாலும் அங்கு செல்வதை செய்தியாளர்களாகிய நாங்கள் தவிர்க்கவில்லை. மூன்றாவது பத்தியின் இறுதியில் குறிப்பிட்டிருந்த ரம்மியமான சூழலும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

ஒரு வழியாக நீதிமன்ற உத்தரவின் படி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விசாரணை தொடங்கியது. செய்தியாளர்களில் ஒருசிலர் தொலைக்காட்சி மாறியிருந்தார்கள். ஒரு சிலர் பணியை விட்டே சென்றிருந்தார்கள். புதியதாக வரக்கூடிய செய்தியாளர்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய பலர் எங்கள் அணியில் இருந்தது ஒருவித பலமாக இருந்தது. எப்போது மீண்டும் விசாரணை தொடங்குவோம் ? நண்பர்கள் அனைவரும் எலுமிச்சை தேன் தேநீர் ( Lemon Honey Tea ) அருந்தும் சூழல் எப்போது உருவாகும் என காத்திருந்த காலம் அது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பழைய மாதிரி மீண்டும் நாள்தோறும் விசாரணை குறித்த செய்தியை உற்சாகத்துடன் பதிவு செய்ய தொடங்கினோம். இந்த முறை நாங்கள் கேட்காமலே எங்களுக்கு போனஸ் வழங்கியிருந்தது உச்சநீதிமன்றம். ஆம், விசாரணையின் போது அனுமதிக்கப்படாமல், உள்ளே என்ன வாக்குமூலம் பதிவாகிறது என்பதை வழக்கறிஞர்கள் மூலம் கேட்டுக் கொண்டிருந்த செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்பது போனஸ் தானே… உச்சநீதிமன்ற தீர்ப்பின் கடைசி பக்கத்தில் தான் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது

விசாரணை ஆணையம் அமைக்க கோரிய ஓ.பன்னீர்செல்வம் அளித்த வாக்குமூலங்கள், அவருக்கு அருகில் நின்று பார்த்த எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், ஆணையத்தின் விசாரணையை முடிக்க அவரின் வாக்குமூலங்கள் மிகவும் உதவியாக இருந்திருக்கிறது. அவர் அளித்த வாக்குமூலங்கள் என்னவாக இருக்கும் என்பதை ஆராய்ந்து நேரத்தை வீணாக்க தேவையில்லை ” எனக்கு எதுவும் தெரியாது” என்பது தான் அவர் அளித்த வாக்குமூலங்களின் ஒட்டுமொத்த சாராம்சம்.

சசிகலா மற்றும் அப்பல்லோ தரப்பும் தங்களால் இயன்ற அளவுக்கு வாதங்களை முன்வைப்பதோடு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையையும் நடத்தி முடித்துள்ளனர். விசாரணை நிறைவடைந்து தனது அறிக்கையை முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்கியிருக்கிறார் நீதியரசர் ஆறுமுகசாமி. அதோடு நாளை மறுநாள் நடைபெற உள்ள அமைச்சரவையில் அறிக்கை குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார்.

இதையெல்லாம் தாண்டி மக்கள் விரும்பக்கூடிய தலைவர் ஒருவரின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆணையமாக ஆறுமுகசாமி ஆணையம் அமைந்தது. விசாரணை அறிக்கை வெளிவந்தால் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தாண்டி விசாரணையில் வெளிப்படைத் தன்மை வேண்டும், அனைவருக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதில் நீதியரசர் கடைசி வரை உறுதியாக இருந்தார். நீதிமன்ற அறைக்குள் அவர் செயல்படும் விதமும், மற்ற நேரங்களில் அவரின் மற்றொரு முகமும் அவருடன் நெருங்கி பழகிய சில செய்தியாளர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாத சூழல். அந்தளவிற்கு ஜாலியான நபர் என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளலாம். விசாரணை ஆணையம் அமைத்து 5 ஆண்டுகள் ஆனாலும், 13 மாதங்கள் மட்டுமே விசாரணை நடைபெற்றதாக கூறியிருக்கும் ஆறுமுகசாமி, அவர் மீதான விமர்சனங்களுக்கு, விமர்சனம் அவரவர் உரிமை அதனை தடுக்க கூடாது என பதிலளித்திருக்கிறார்.

எவர் என்ன விமர்சனம் செய்தாலும், தன் பணியை சரியாக முடித்திருப்பதாக நீதியரசர் ஆறுமுகசாமி நினைக்கிறார். தனக்கு தெரிந்த தகவல்களை வாக்குமூலங்களாக பதிவு செய்திருப்பதாக ஆஜரான சாட்சிகள் நம்புகின்றன. விசாரணை அறிக்கையின் படி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒன்றரை கோடி தொண்டர்களின் தலைவர், பலமுறை தமிழகத்தை ஆட்சி செய்த பெண் ஆளுமை, தமிழகம் மட்டுமல்ல தேசிய அரசியலிலும் தவிர்க்க முடியாத இரும்பு பெண்மணி என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை என்பதால் மட்டுமல்ல செய்தியை சரியாகவும், தெளிவாகவும் கொடுக்க வேண்டும் என்பதில் செய்தியாளர்கள் உறுதியாக இருந்தோம். முதல் நாள் முதல் இறுதிநாள் முதல் அதனை செய்தியாக பதிவும் செய்தோம் என்பதில் ஒருவித மன திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தான் ஆரம்பத்தில் நான் சொன்ன “ஒரு வேலையைச் செஞ்சா உருப்படியா செஞ்சு முடிக்கணும்ங்குறது”

பின்குறிப்பு – செய்தியாளர்கள் யார் யார் என்பதை தனியாக சுட்டிக்காட்டி வட்டத்திற்குள் அடைக்க விரும்பவில்லை. பதிவை படிக்கும் செய்தியாளர்கள், ஆணையத்தின் செய்தியை சேகரித்த செய்தியாளர்கள், எழிலகத்தின் ரம்மியமான சூழலை அனுபவித்த செய்தியாளர்களும் இதில் தாமாக வந்து சேர்ந்து கொள்ளலாம்.

வாட்ஸ் அப் பகிர்வு

error: Content is protected !!