மல்யுத்த விளையாட்டிலிருந்து விலகுகிறேன் – சாக்ஷி மாலிக் அறிவிப்பு!- ஏன்?.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக பிரிஜ் பூஷன் சிங்கிற்கு பதில் சஞ்சய் சிங் தேர்வாகியுள்ள நிலையில், “நாங்கள் இவ்வளவு போராடிய பிறகும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் ஒரு நெருங்கிய உதவியாளரே தேர்வு செய்யப்படுவார் என்றால், நான் மல்யுத்தத்தில் இருந்து ஒய்வு பெறுகிறேன்”, என கண்ணீருடன் சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் வைத்துக் கடந்த மே மாதம் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.இந்தப் போராட்டத்தில் நமது நாட்டிற்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தியபோது கூட இவர்களின் கோரிக்கைக்கு மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது.
மேலும் போலீஸாரை கொண்டு போராட்டத்தை அடக்கப் பார்த்தது பா.ஜ.க அரசு. ஆனால் மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தங்களின் போராட்டத்தை நடத்தினர். புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது அவர்களை போலிஸார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனைத் தொடர்ந்து தாங்கள் வென்ற பதக்கங்களைக் கங்கையில் ஆற்றில் வீசுவதற்காகச் சென்றனர். அப்போது அவர் விவசாயச் சங்கத் தலைவர்கள் சமாதானப்படுத்தி அவர்களது பதக்கங்களை வாங்கிக் கொண்டனர். இதற்கிடையில் பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கடந்த ஜூன் 15ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசுக்குச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தியுள்ளது. ஆனால் சரியாக விசாரணையை நடத்தாததால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பினை சர்வதேச மல்யுத்த நிர்வாக அமைப்பான united world wretling இடைநீக்கம் செய்தது.
இந்நிலையில், பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதரவாளராக சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், “பிரிஜ் பூஷன் சிங்கின் விசுவாசியான சஞ்சய் சிங் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது தனக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. இதனால் மல்யுத்தத்திலிருந்து நான் விலகுகிறேன்” என்று சாக்ஷி மாலிக் கண்ணீர்மல்க அறிவித்துள்ளார்.