இன்னும் உருவாகாத ஜியோ இன்ஸ்டிடியூட் தகுதி வாய்த கல்வி நிறுவனமா?

இன்னும் உருவாகாத ஜியோ இன்ஸ்டிடியூட் தகுதி வாய்த கல்வி நிறுவனமா?

மோடி அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில், இதுவரை தொடங்கப்படாத ஜியோ இன்ஸ்டிடியூட் இடம் பெற்று   உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இன்று அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் பல்கலைக்கழக மானியக்குழு இயங்கி வருகின்றது. சமீபத்தில், இந்த மானியக்குழு தலைசிறந்த 6 நிறுவனங்களை (Institute of Eminence) தேர்வு செய்து அதற்கான பட்டியலை வெளியிட்டது. இந்த நிறுவனங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1000 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும். இந்த பட்டியலில் உள்ள 6 நிறுவனங்களில் ஐஐடி மும்பை, ஐஐடி டில்லி, ஐஐஎஸ்சி பெங்களூர் ஆகிய மூன்றும் அரசு நிறுவனங்கள் ஆகும். மீதமுள்ள மூன்றில் மணிபால் பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி, ஜியோ இன்ஸ்டிடியூட் ஆகிய நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

ஜியோ இன்ஸ்டிடியூட் இன்னும் பேப்பர் அளவில் கூட தொடங்கப்படாத ஒரு நிறுவனமாகும். கூகுளில் தேடிப்பார்த்தால் கூட இந்த பெயரில் எந்த நிறுவனத்தையும் நம்மால் காணமுடியாது. பின்னர், எப்படி தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ இடம்பிடித்தது என பலர் கேள்வி எழுப்பினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ஆர்.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். இதில் பேசிய அவர்,”தற்போது அந்த கல்லூரிகள் தலைசிறந்த கல்லூரிகள் அந்தஸ்தை பெறாது. அடுத்த 3 ஆண்டுகளில் அந்த கல்வி நிறுவனங்கள் தங்களின் சிறப்பான சேவை மூலம் மட்டுமே அவர்களுக்கு அந்த அந்தஸ்து கிடைக்கும்” என்று கூறினார்.

மேலும்,”இந்த பட்டியலில் இடம்பெற 11 தனியார் பல்கலைக்கழகங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதில் ஜியோ இன்ஸ்டிட்யூட், புதிதாக தொடங்கப்பட உள்ள நிறுவனங்கள் பிரிவில் (greenfield institutions category) தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த நிறுவனம் தற்போது இயங்க வில்லை. ஆனால் எதிர்காலத்தில் தலைசிறந்து விளங்கவேண்டும் என்ற குறிக்கோளோடு செயலாற்றுகிறது. இதுபோன்ற நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

”இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு கல்வி நிறுவனங்கள், தலா ரூ.1,000 கோடி மானியத்தை பெறும். ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படாது” என்றும் சுப்பிரமணியன் கூறினார்.

error: Content is protected !!