June 7, 2023

அச்சு &காட்சி ஊடகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் போனதெப்படி?

இம்மாத ‘கேரவன்’ ஆங்கில இதழில் இந்தியாவில் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் எவ்வாறு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது என்பதையும், இந்த ஊடகங்களின் செய்தி அறைகளில் மோடி அரசின் ஆதிக்கத்தின் கீழ் எப்படி செய்திகள் தயாரிக்கப் படுகின்றன என்பதைப் பற்றியும் விரிவான அலசல் கட்டுரைகள் வெளி வந்துள்ளன. அதில் தமிழகத்தைப் பற்றி வந்துள்ள கட்டுரையில் நிறைய விவரங்கள் அடங்கியுள்ளது!

90 க்கு முன்பு பிராமண மயமாக இருந்த ஊடகத்துறை, அதன் பின் இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்துக் கிராமத்திலிருந்து வந்த அறிவுஜீவி களால், எப்படி மாற்றம் பெற்றது என்பது பற்றியும், நகரங்களையே சுற்றி வந்த ஊடகங்கள் எவ்வாறு கிராமங்களையும் ஏறெடுத்துப் பார்க்கத் துவங்கியது என்பது பற்றியும் விவரித்துள்ளன. இதற்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட பிரிவினரில் இருந்து வந்தவர்கள் காரணம் என்பதைப் பற்றியும், இவர்களின் முற்போக்குக் கருத்துகள் மற்றும் பெரியாரிச, அம்பேத்கரியக் கருத்துக்களின் தாக்கத்தால் கடந்த கால ஊடகங்களின் உள்ளடக்கத்தில் இருந்து எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள் என்பதைப் பற்றியும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.

அரசியல் ரீதியாகக் கருத்துக் கேட்க வேண்டுமென்றால் ‘துக்ளக்’ சோவிடம் தான் செல்ல வேண்டும் என்ற நிலை மாறி, பலரும் இன்று கருத்துச் சொல்வதில் பங்கு பெறும் நிலை ஏற்பட்டதையும் அது விவரிக்கிறது. பிற்பட்ட பிரிவிலிருந்து வந்தவர்கள் ஊடகங்களைத் துவக்கினாலும் அடிப்படையில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லாமல் ராசிபலன் தொடங்கி, பல மதங்களின் வழிபாடு உட்பட மூட நம்பிக்கைகளைப் பரப்புவதில் மாற்றம் இன்றி அப்படியே தொடர்ந்தனர் என்பது பற்றியும் அது குறிப்பிட்டுள்ளது.

செய்தி அறைகளில் மோடி பற்றிய செய்தி எத்தனை முறை ஒலிபரப்ப வேண்டும்? எப்படி காட்சிப்படுத்த வேண்டும் என்பது உட்பட சொல்லித் தரப்படுகிறது என்பது பற்றியும், இதற்கு மாநில அளவில் செயல்படும் ஊடகங்கள் மட்டுமல்ல, தில்லியில் செயல்படும் பெரும்பாலான ஊடகங்களும் மோடி அரசின் மிரட்டலுக்குக் கட்டுப்பட்டுச் செயல் படுவது பற்றியும், அவசர நிலைக் காலத்தை எதிர்த்த ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையும் இதில் அடங்கும் என்பதையும் அது குறிப்பிட்டுள்ளது. இந்தச் செய்தி ஊடகங்களுக்கு விளம்பரம் தந்து எப்படி மத்திய அரசு அவற்றைக் கட்டுப்படுத்துகிறது என்பதையும் விவரமாகத் தந்துள்ளன. தினமும் ஏழெட்டுப் பத்திரிகைகள் ஆங்கிலம் உட்பட படிக்கிறவர்களுக்கு நன்கு தெரியும். மோடி தொடர்பான செய்திகள், அரசு தொடர்பான செய்திகள், அரசுக்கு எதிரான செய்திகள் என எல்லாம் ஒரே மாதிரி இருக்கும். அது என் அனுபவமும் கூட !

முடிவாக அந்த ‘கேரவன்’ ஆசிரியர் கூறும் கருத்து இதுதான்! மோடி அரசு நான்காவது தூணான செய்தித் துறைகளை மட்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை, நீதித் துறையை யும் கூட. நாடாளுமன்ற ஜனநாயகங்களுக்கு எந்த மதிப்பும் அளிப்பதில்லை. அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்ட மோடி அரசு, ஒரு சர்வாதிகார அரசாக மாறி வருகிறது என்பதுதான்.

பெரு முதலாளிகளின் ஏவலாளாக மாறி விட்ட மோடி தனது எஜமானர்களைத் திருப்திப் படுத்துவதே தன்னுடைய பெருங்கடமையாக ஆக்கிக் கொண்டுள்ளார். அவர் கொண்டு வரும் ஒவ்வொரு சட்டமும் முதலாளிகளின் பாசறையிலிருந்து வருவதுதான். இது தெரிந்த செய்தி தானே என்று பலர் கூறலாம். ஆனால் தில்லியிலிருந்து வரும் ஆங்கில இதழில் இவ்வளவு விவரமாக ஆதாரங்களுடன் அது வெளி வந்திருப்பதும் , அது உலகம் முழுவதும் பரவலாக ஏற்படுத்தும் தாக்கத்தையும் கணக்கிட்டால் அதன் பெறுமானம் புரியும்!

தொலைக்காட்சி சீரியல் நடிகையின் தற்கொலையைப் புலனாய்வு செய்து செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், தில்லியில் கடந்த இருபது நாட்களாக நடைபெறும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத பிரம்மாண்டமான அமைதி வழிப் போராட்டங்களைப் பற்றியோ அல்லது அதில் ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள் உட்பட அனைத்து வயதுப் பிரிவினரும் பங்கேற்ற வரலாறு காணாத நிலை பற்றியோ எந்த அளவுக்குப் புலனாய்வு செய்து எழுது கின்றன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. வெறும் அரிப்புக்கும், பரபரப்புக்கும், அடுத்தவன் வீட்டை எட்டிப் பார்த்து மகிழும் அசிங்கத்தையும் செய்திகளாக்கி மக்களை விழிப்படைய வைக்காமல் மயக்கத்தில் ஆழ்த்துவதிலேயே ஊடகங்கள் குறியாய் இருப்பதற்கும் மோடி அரசின் நடவடிக்கையே பிரதான காரணம்.

நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது என்பதை விட, இந்தத் தேசத்தின் பெரு முதலாளிகளுக்கு எதிரானது என்பதுதான் இந்தப் போராட்டத்தின் முக்கிய அம்சமே. தங்கள் எதிரிகள் யார் என்பதைத் தெரிந்து கொண்டு போராடும் அவர்களைப் பற்றி நன்கு தெரிந்ததனால் தான் , தினமும் பாமர மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் மோடியால், கொல்லும் பனியிலும் தளராத உறுதியுடன் போராடும் விவசாயிகளைச் சந்திக்கும் தைரியம் இல்லை. குறைந்த பட்சம் விவசாயப் பிரதிநிதிகளைச் சந்திக்கக் கூட அவர் தயாராக இல்லை. மோடியின் எஜமானர்களான பெரு முதலாளி களின் கண்ணசைவின்றி மோடி எந்த நடவடிக்கை யும் எடுக்க மாட்டார். அரசுக்கு எதிராக மட்டுமல்ல, அதையும் தாண்டி தங்களுக்கு எதிரான போராட்டமாக விவசாயிகள் போராட்டம் மாறி விட்டதால், இதை அனுமதிப்பது என்பது தங்களின் இருப்பையே பாதிக்கும் என்பதனால், அவ்வளவு எளிதாகப் பெரு முதலாளி களும் கீழே இறங்கி வர மாட்டார்கள்?

எனவே தான் போராட்டத்தின் கோரிக்கை குறித்துத் தெளிவாகத் தெரிந்திருந்தும், விவசாயி களின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் அத்தனை தில்லுமுல்லு வேலைகளிலும் கூச்சமின்றி மத்திய அரசு ஈடுபடுகிறது. தனது ஆதரவுச் சங்கங்களைத் தூண்டி விட்டுக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இவ்வளவு தடைகளையும், எதிர்ப்பை யும் தாண்டி இருபது நாட்களாக நீடிக்கும் இந்த அறப்போராட்டம் தன்னேரில்லாப் புகழுடையது.

எனினும் இந்தப் போராட்டம் நீடிப்பதும், வெற்றி பெறுவதும் இனி நாடு முழுவதும் உள்ள அனைத்து உழைப்பாளி மக்களின் எழுச்சியைப் பொறுத்தது. அதை அனைத்து அமைப்புகளும் சேர்ந்து உருவாக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்? எனினும் அரசின் ஆணி வேராக இருந்து ஆட்டிப் படைக்கும் பெரு முதலாளிகளின் குடுமியைப் பிடித்து ஆட்டிய பெருமையைப் படைத்த வரையில் போராட்டக்காரர்களின் சாதனையை வரலாறு குறைத்து மதிப்பிடாது!

Ben Ven Mannar

பா. ஜீவ சுந்தரி