மாண்புமிகு மந்திரிகளா?மக்களின் நம்பிக்கையை இழந்தவர்களா??

மாண்புமிகு மந்திரிகளா?மக்களின் நம்பிக்கையை இழந்தவர்களா??

மிழ்நாட்டு அரசியலில் முன்னொரு காலம் ‘கனம்’ என்றும் பின்னாளில் “மாண்புமிகு” என்ற சொல்லாடல் புழக்கத்தில் உள்ளது. இதில் மாண்பு (மேன்மை) + மிகு (மிகுதியாக உள்ள) என்பதன் கூட்டுச் சொல், இது ஒருவரின் உயர்ந்த பண்பையும் மதிப்பையும் குறிக்கிறது. இது அமைச்சர்கள், முதலமைச்சர்கள் போன்றவர்களைக் குறிக்கும் மரியாதைப் பட்டமாக உருவானது. தமிழ்நாட்டில் 20-ஆம் நூற்றாண்டில், குறிப்பாக பெரியார், அண்ணாதுரை போன்ற திராவிட இயக்கத் தலைவர்களின் காலத்தில், தமிழில் மரியாதைச் சொற்கள் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக ஒரு மந்திரியின் பெயருக்கு முன் இடம்பெறுவது வழக்கமாக இருந்தாலும், இன்றைய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இந்த பட்டத்தின் மதிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அரசாங்கம் என்பது மக்களின் நலனுக்காக உழைக்க வேண்டிய ஒரு அமைப்பு; ஆனால், இன்றைய அமைச்சர்களில் பெரும்பாலோர் மக்களுக்கு அந்நியமாகவோ, அதிகாரமற்றவர்களாகவோ, அல்லது மக்கள் நலனில் அக்கறையற்றவர்களாகவோ இருப்பது கவலைக்குரிய உண்மை.

மக்களுக்கு அந்நியமான அமைச்சர்கள்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 90 சதவீத அமைச்சர்கள் மக்களுக்கு அறிமுகமில்லாதவர்களாக இருக்கின்றனர். இவர்களில் பலர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு உதவ மனமோ, திறனோ இல்லாதவர்களாக உள்ளனர். ஒரு அரசாங்கத்தின் வெற்றி, அதன் அமைச்சர்களின் செயல்பாடு மற்றும் மக்களுடனான தொடர்பில் தங்கியுள்ளது. ஆனால், இன்றைய அமைச்சர்களில் பலர் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவோ, தீர்க்கவோ முனையவில்லை. இது ஆளும் கட்சியான திமுகவின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.

நீதிமன்றங்களால் குட்டப்படும் மந்திரிகள்

இதைவிட வேதனையான உண்மை, பல மூத்த அமைச்சர்கள் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாக சுட்டிக்காட்டப்பட்டு, மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருப்போரின் எண்ணிக்கை எகிறிக் கொண்டே போகிறது.அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் ரத்து வழக்கு, அவருக்கு அமைச்சர் பதவியா அல்லது ஜாமீனா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்க உத்தரவு பிறந்துள்ளது. இதேபோல், அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய வழக்கில் காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது. மேலும், அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்கள், அமைச்சர்களின் நேர்மை மற்றும் அவர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள மதிப்பை கேலிக்கூத்தாக்குகின்றன.

முதலமைச்சரின் மௌனம்: மக்களுக்கு வஞ்சனையா?

இத்தகைய குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் முதலமைச்சரின் கவனத்திற்கு சென்ற பின்னரும், அவர் இவற்றை கண்டுகொள்ளாதது மக்களின் நம்பிக்கையை வஞ்சிக்கும் செயலாகும். மக்கள் தங்கள் வாக்குகளை வழங்கி ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தவர்கள், தங்களுக்கு நீதி வழங்கப்படும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர்கள் தொடர்ந்து பதவியில் நீடிப்பது, மக்களின் எதிர்பார்ப்புகளை புறக்கணிப்பதாகவே உள்ளது.

நாகரிகமாக விலக வேண்டிய பொறுப்பு

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அமைச்சர்கள், நாகரிகம் கருதி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். இது நடக்காத பட்சத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் இந்த “களைகளை” அகற்றுவார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், 2026இல் மீண்டும் திமுக ஆட்சி என்று முதலமைச்சர் வீராவேசமாக பேசுவது, மக்களின் கவலைகளுக்கு செவிசாய்க்காமல், ஆட்சியை தக்கவைப்பதற்கான அரசியல் விளையாட்டாகவே தெரிகிறது.

முடிவாக “மாண்புமிகு” என்ற பட்டம், ஒரு அமைச்சரின் செயல்களாலும், மக்களுக்கு அவர் செய்யும் நன்மைகளாலும் மட்டுமே பொருள் பெறும். ஆனால், இன்றைய தமிழக அமைச்சரவையில் பலர் இந்த பட்டத்திற்கு தகுதியற்றவர்களாகவே உள்ளனர். மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக தனது அமைச்சரவையை சீரமைத்து, நீதிமன்றங்களால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும். இல்லையெனில், 2026 தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். மக்களின் குரல் எப்போதும் வெல்லும்; அதை மறந்துவிடக் கூடாது.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!