கலைஞர் சிலைத் திறப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!

தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 26ம் தேதி 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் உண்டென்றால் அது கருணாநிதி மட்டும்தான். ஐந்து முறை முதலமைச்சராக இருந்து 19 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து 60 ஆண்டுகள் மாமன்றத்தில் இருந்தவர் கருணாநிதி. கருணாநிதி பிறந்த ஜூன் 3ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும் சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும்’ என்று அறிவித்தார். அதன்படி ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ளது போன்றே இந்த சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் சிற்பி தீனதயாளன் இந்த சிலையை வடிவமைத்துள்ளார். இந்நிலையில், ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலையை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு இன்று மாலை 5.30 மணியளவில் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.
அந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பேசியது இதுதான்
சகோதர, சகோதரிகளே,
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த டாக்டர் கலைஞர் மு. கருணாநிதியின் 98-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு அவரது சிலைத் திறப்பு நிகழ்ச்சியில் உங்களுடன் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் மிக சக்திவாய்ந்த முதலமைச்சர்களுள் அவரும் ஒருவர்.
இந்த முக்கிய நிகழ்விற்கு எனக்கு அழைப்பு விடுத்ததற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். சென்னை, என் மனதிற்கு மிகவும் நெருக்கமான நகரம் மட்டுமல்லாமல், எனது வாழ்க்கையில் சிறப்பு இடமும் பிடித்துள்ளது. எனது சொந்த ஊரான நெல்லூருக்கு அருகில் இருப்பதால், சிறுவயது முதலே சென்னை என் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
பொது வாழ்க்கையில் எனது நீண்டநாள் பயணத்தின்போது, பல தசாப்தங்களில் கலைஞர் மு.கருணாநிதியுடன் நெருக்கமாக கலந்துரையாடும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றிருந்தேன்.
பல்வேறு திறமைகளின் தனித்துவமான கலவையோடு ஓர் பல்துறை வித்தகராக அவர் விளங்கினார்.
தாம் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற நுட்பமான அரசியல்வாதியாக இருந்ததுடன், சுமார் 50 ஆண்டு காலம் தமது கட்சிக்கு அவர் தலைமை தாங்கினார்.
வளர்ச்சி மற்றும் சமூக நலனின் மரபை நிலைநிறுத்திய முதல்வராக அவர் திகழ்ந்தார்.
தமது புத்திசாலித்தனம், இலக்கிய சுவை மற்றும் கற்றறிந்த வெளிப்பாடுகளோடு பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் தலைசிறந்த சொற்பொழிவாளராக அவர் இருந்தார்.
அவர், ஆக்கபூர்வமான அரசியல் விவாத கலையில் சிறந்து விளங்கிய ஒப்பற்ற சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
கலை, கலாச்சாரம் மற்றும் இதழியலின் மீது அவரது ஈடுபாட்டினால், 1948-ஆம் ஆண்டு “தூக்குமேடை” என்ற அவரது நாடகம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து, “கலைஞர்” என்ற கௌரவப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையில் என்றும் அழியாத தடத்தை விட்டுச் சென்றுள்ள உண்மையான பன்முக ஆளுமை கொண்டவராக அவர் இருந்தார்.
தமது எழுத்து மற்றும் வசனங்களின் வாயிலாக தமிழ் திரைப்படத் துறையில் புதிய பாதையை அவர் வகுத்தார்.
அன்றாட நிகழ்வுகளின் நுண்ணறிவுமிக்க வர்ணனையாளராக, அரசியல் பகுப்பாய்வராக செயல்பட்டதோடு, அவர் நிறுவிய கட்சி வெளியீடான முரசொலியில் தமது விசாலமான எழுத்துக்களின் மூலம் சக்திவாய்ந்த எழுத்தாளராகவும் விளங்கினார்.
நிர்வாகி, சமூக ஆர்வலர், அரசியல் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், கவிஞர், திரைப்பட எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் ஆசிரியர் என கலைஞர் மு.கருணாநிதியின் பணிகளில் இயங்கும் பொதுவான இழை, சமூக சமத்துவமும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியும் ஆகும்.
சகோதர, சகோதரிகளே,
1947-இல் சுதந்திரத்திற்குப் பிறகு, நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையை வடிவமைத்த மேன்மைவாய்ந்த பிரதமர்களையும், முதல்வர்களையும் நாம் பெற்றிருந்தோம். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், கொள்கைகளை வடிவமைக்கவும், திட்டங்களை உருவாக்கவும், நிறுவனங்களைக் கட்டமைக்கவும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு அளவில் அவர்கள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதுபோன்ற தொடர் முயற்சிகள், நம் நாட்டை முன்னெடுத்துச் சென்றுள்ளன. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வகுத்துத் தந்த பாதையால் வழிநடத்தப்பட்டு, இது போன்ற தலைவர்கள் நமது அரசியலமைப்பின் வார்த்தைகளுக்கு அர்த்தம் காண பல்வேறு நிலைகளில் முயன்றுள்ளனர்.
ஒரு சில பிறழ்வுகளைத் தவிர அரசியலமைப்பின் முன்னுரையில் உள்ள பார்வையை நிலைநிறுத்தும் வகையில், ஒரு துடிப்பான, வளர்ந்த ஜனநாயகமாக இந்தியாவை வடிவமைக்க அவர்கள் உதவியுள்ளனர். தங்களது பணியில் மக்களை மையமாகக் கொண்டிருந்த தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் கலைஞர் மு.கருணாநிதியும் இடம்பிடித்துள்ளார். அவரைப்போன்ற தலைவர்களால் நாடு தனது கூட்டாட்சி முறையை வலுப்படுத்தியிருப்பதோடு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியவாறு வலிமையான ‘குழு இந்தியாவாக’ வளர்ந்துள்ளது.
ஒவ்வொரு மாநிலமும் துடிப்பான, தனித்துவம் வாய்ந்த திறமையைப் பெற்றுள்ளது. மொழிவளம், இலக்கிய மற்றும் கலாச்சார பொக்கிஷங்கள், தலைசிறந்த கட்டிடவியல், அபாரமான கைவினைத் திறன், அறிவியல், தொழில் மற்றும் வேளாண்மை சாதனைகள் போன்ற வளங்களை ஒவ்வொரு மாநிலமும் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உள்ளார்ந்த வலிமையைப் பயன்படுத்தி, இத்தகைய வியப்பூட்டும் பன்முகத்தன்மையைக் கொண்டாடி, ஒரு நாடாக நாம் வளர்ந்திருப்பதோடு, விவேகமான முன்னேற்றத்தையும் அடைந்துள்ளோம். ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரிடமும் ஒளிந்திருக்கும் அபரிமிதமான சக்தியைத் தட்டி எழுப்புவதன் மூலம் அரிதான ஒருங்கிணைப்பை நம்மால் ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்துள்ளோம்.
கலைஞர் மு.கருணாநிதியைப் போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள், அதைத்தான் செய்ய முயன்றார்கள். மக்களுக்கு, குறிப்பாக, ஒடுக்கப்பட்டோர் மற்றும் வளர்ச்சி வட்டத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு அதிகாரம் அளிப்பது, அவரது தொலைநோக்குப் பார்வையாக இருந்தது. “உழவர் சந்தை” என்ற விவசாயிகளின் சந்தை மற்றும் ஏழைகளுக்கு மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் பற்றி சிந்தித்த தலைவர், அவர். தொழில்துறை வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு அவர் ஊக்கமளித்தார். தமது தாய்நாடு மீதும், தாய் மொழி மீதும் அவர் அளவற்ற பற்று கொண்டிருந்ததோடு, செம்மொழியான தமிழில் உள்ள இலக்கிய படைப்புகள் பற்றியும், மாநிலத்தின் பாரம்பரிய கலாச்சார வளம் பற்றியும் உலகம் தெரிந்துகொள்ள உதவினார். மாநிலத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளின் துவக்கத்தில் இடம்பெறும் ‘தமிழ்த்தாய் வாழ்த்தை’ தமிழ்நாட்டின் இறைவணக்கப் பாடலாக 1970-இல் அவர் உருவாக்கினார்.
சகோதர, சகோதரிகளே,
தமது அரசியல் கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகளில் கலைஞர் கருணாநிதி உறுதியாக இருந்தார். அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலைக்கு கலைஞர் கருணாநிதி தெளிவாக எதிர்ப்பு தெரிவித்திருந்ததை நினைவுகூர்வது அவசியமாகிறது.
சமூகத்தின் விளிம்பு நிலையில் இருந்து வளர்ந்து, தாழ்த்தப்பட்டோருக்காக அயராது உழைத்து, பல தசாப்தங்கள் பொதுவாழ்வின் மையப்பகுதியை ஆக்கிரமித்து, கலைஞர் கருணாநிதி மேற்கொண்ட பல அம்சங்கள் நிறைந்த பணிகள், தமிழகத்தின் சமூக- அரசியல் வட்டாரத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சில தலைவர்கள் பெருமை கொள்ளக்கூடிய நீடித்த அரசியல் மரபை கலைஞர் விட்டுச் சென்றுள்ளார். தற்போதைய முதல்வர் திரு மு.க. ஸ்டாலின், தமது புகழ்பெற்ற தந்தையின் தொலைநோக்குப் பார்வை மற்றும் பணிகளால் வழிநடத்தப்படுவார் என்று நான் நம்புகிறேன்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்விற்கு என்னை அழைத்ததற்கு தமிழக அரசுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிப்பதோடு, முதல்வர் திரு ஸ்டாலின், அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும் கலைஞர் செய்தது போல மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தை அதே ஆர்வத்துடன் தொடர, தங்களது அயராத முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அனைத்து நிலைகளிலும் விரைவான வளர்ச்சியை இந்த மாநிலம் பதிவு செய்யும் என்றும், ‘கூட்டாட்சி உணர்வு’ மற்றும் ‘கூட்டாட்சியில் போட்டித்தன்மை’ என்ற உணர்வோடு மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வரும் ஆண்டுகளில் இந்தியா தனது உண்மையான திறனை உணரும் என்றும் நான் நம்புகிறேன்.
நன்றி!
ஜெய் ஹிந்த்!