கைகழுவுதல்: உயிர்காக்கும் எளிய மந்திரம்! -உலகக் கைகழுவும் நாள் சிறப்புக்கட்டுரை!

கைகழுவுதல்: உயிர்காக்கும் எளிய மந்திரம்! -உலகக் கைகழுவும் நாள் சிறப்புக்கட்டுரை!

கொரோனா பெருந்தொற்று (COVID-19 Pandemic) உலகைத் தாக்குவதற்கு முன், ‘கைகளைச் சுத்தமாகக் கழுவுவதன் மூலம் உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம்’ என்று யாராவது சொல்லியிருந்தால், அதைக் கேட்டவர்கள் வாய்விட்டுச் சிரித்திருப்பார்கள். “என்ன ஒரு அபத்தமான செய்தி! ஒரு சாதாரண சோப்புத் தண்ணீர் எப்படி ஒரு கொடிய நோயை விரட்டும்?” என்று கிண்டல் செய்திருப்பார்கள்.

ஆனால், கொரோனா தந்த பாடங்களில் மிகப் பெரிய பாடமாக இந்த எளிய பழக்கம் இணைந்திருக்கிறது. கோடிக்கணக்கான டாலர்களைக் கொட்டியும், நவீன மருத்துவ வசதிகளைக் குவித்தும் காப்பாற்ற வழியில்லாத ஓர் உலகளாவிய நோய்த்தொற்றை, வெறும் பத்து ரூபாய் சோப்பும், கொஞ்சமே சுத்தமான தண்ணீரும் கொண்டும் மனிதர்களால் தவிர்க்க முடிந்தது. இந்த மகத்தான பேருண்மையை, தங்கள் சக மனிதர்களைப் பலிகொடுத்தவர்கள் ஒரு கசப்பான அவல நகைச்சுவையாக எதிர்கொண்டார்கள்.

சரியான தடுப்பூசி கண்டறியப்படும் வரை, கொரோனாவை அண்டவிடாது தவிர்ப்பதற்கு, சோப்பு மற்றும் நீர் கொண்டு அடிக்கடி கை கழுவுவதுதான் தனிச்சிறப்புமிக்க மற்றும் பிரத்யேக உபாயமாக உலகம் முழுவதும் பரிந்துரைக்கப்பட்டது. இந்த ஆச்சரியமான உண்மையைப் போற்றும் விதமாகத்தான், அக்டோபர் 15 அன்று சர்வதேச அளவில் அனுசரிக்கப்படும் உலகக் கைகழுவுதல் தினம் (Global Handwashing Day) இந்த எளிய பழக்கத்தை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது என வலியுறுத்துகிறது.

திருமூலரின் வாக்கும், கொரோனாவின் எச்சரிக்கையும்

பழங்காலத்தில், நம் சித்தர்கள் உடல் நலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளனர். திருமூலர், தன் திருமந்திரத்தில், ‘உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்று உரைத்தார். இதன் பொருள், மனிதனின் வளமான வாழ்க்கைக்கு சுகாதாரமான உடல் நலமே ஆதாரம் என்பதாகும். நம்முடைய ஒட்டுமொத்த சுகாதாரப் பராமரிப்பு முறைகளில், கைகளைக் கழுவுதல் என்பது வெறும் இரண்டாம் படியல்ல, அதுவே முதல் படி!

இந்த முதல் படியை அலட்சியம் செய்தவர்களைத்தான் கண்ணுக்குத் தெரியாத கொரோனா அரக்கன் விழுங்கி, ஒரு பெரும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தினான். கைகளைச் சரியாகக் கழுவாமல், அசுத்தமான கைகளால் நம் கண், மூக்கு, வாய் போன்ற சளி சவ்வுப் பகுதிகளைத் தொடும்போது, கிருமிகள் நம் உடலுக்குள் நுழைந்துவிடுகின்றன.

கொரோனாவால் ஏற்பட்ட பயங்கரம் இன்னும் முடிந்துவிடவில்லை. அதையும் தொடர்ந்து, இன்னும் வீரியமான அதன் திரிபுகள், கொரோனாவுக்கு இணையான இன்னபிற வைரஸ், பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர் தொற்றுகள் உலகைத் தாக்க வரிசையில் காத்திருக்கின்றன. இந்த இதர நுண்ணியிர் தொற்றுகளின் அச்சுறுத்தல் தொடரும் என்ற எச்சரிக்கையின் மத்தியில் நின்றபடியும், கைகளைக் கழுவுதல் குறித்து விழிப்புணர்வு பெறுவது மேலும் அவசியமாகிறது.

எப்போது கழுவ வேண்டும்? ஏன் கழுவ வேண்டும்?

கைகளைக் கழுவுவது என்பது, சடங்கு போல ஏதோ ஒரு நேரத்தில் செய்வது அல்ல; அது ஒரு முக்கியமான செயல்பாடு.

  • சமைப்பதற்கு முன், உணவருந்துவதற்கு முன் மற்றும் பின்.
  • கழிப்பறையைப் பயன்படுத்திய பின்.
  • இருமல், தும்மல் அல்லது மூக்கைத் துடைத்த பின்.
  • விலங்குகளைத் தொட்ட பின்.
  • காயங்களைச் சுத்தம் செய்வதற்கு முன் மற்றும் பின்.
  • குப்பைகளை அப்புறப்படுத்திய பின்.

இந்தச் சந்தர்ப்பங்களில் கைகளைக் கழுவுவதன் மூலம், சாதாரண சளி, வயிற்றுப்போக்கு, நிமோனியா மற்றும் காலரா போன்ற பல நோய்கள் பரவுவதைத் தடுக்கலாம். ஆய்வுகளின்படி, கைகளைக் கழுவும் பழக்கத்தால், வயிற்றுப்போக்கு நோய்களை 50 சதவீதம் வரையும், சுவாச நோய்த்தொற்றுகளை 20 சதவீதம் வரையும் குறைக்க முடியும்.

20 வினாடிகள் மந்திரம்

வெறுமனே தண்ணீரில் கைகளைக் காண்பிப்பது கைகழுவுதல் ஆகாது. கைகளைக் கழுவும் முழுமையான செயல்முறைக்குச் சரியாக 20 வினாடிகள் தேவைப்படும். சோப்பை நீரில் குழைத்து, உள்ளங்கை, விரல்கள் இடுக்கு, நகங்களின் கீழ் பகுதி, மற்றும் மணிக்கட்டு வரை தேய்த்துக் கழுவுவதே சரியான முறையாகும். இந்த 20 வினாடிகள், ஒரு முழுமையான “ஹேப்பி பர்த்டே” பாடலை இருமுறை பாடும் நேரத்திற்குச் சமம்.

இந்த எளிய, ஆனால் சக்திவாய்ந்த பழக்கத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, உலகக் கைகழுவுதல் தினம், சுகாதாரம் என்பது ஒரு தனிப்பட்ட நன்மை மட்டுமல்ல, அது ஒரு பொதுநலம் (Public Health) சார்ந்த பொறுப்பு என்பதையும் நமக்கு நினைவுபடுத்துகிறது. உயிரைக் காக்கும் இந்த எளிய மந்திரத்தை, நாம் மறக்காமல் அடுத்த தலைமுறையினருக்கும் கடத்துவோம்.

தனுஜா

Related Posts