ஒரே நாடு ; ஒரே வரி -ஜிஎஸ்டி அமலாக்கம் தொடங்கியது!
நம் தேசத்தில் வரி விதிப்பு முறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக பார்லிமென்டில் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கான அரசியல் சட்டத்திருத்த மசோதா கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாப்படி, புதிய வரிவிதிப்பு அமலாக்கத்துக்கான வழிமுறைகள் வகுப்பதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை தலைவராகவும், மாநில நிதி அமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில் பலமுறை கூட்டங்கள் நடத்தியது. இதில், ஆயிரத்து 211 பொருட்கள் மற்றும் சேவைகளை வகைப்படுத்தி, 5, 12, 18, 28 என 4 அளவுகளில் ஜிஎஸ்டி விதிக்க கவுன்சில் நிர்ணயம் செய்தது.இந்நிலையில், பார்லிமென்டின் மைய மண்டபத்தில் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் தொடக்க விழா நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கியது. இதில் கலந்து கொள்ள வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி, ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் வரவேற்றனர். விழாவில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மாநில நிதி அமைச்சர்கள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்பிக்கள் பங்கேற்றனர். மேலும் ரத்தன் டாடா உட்பட தொழிலதிபர்கள், அமிதாப் பச்சன் உட்பட பிரபலங்கள், ரிசர்வ் வங்கி கவர்னர், தேர்தல் கமிஷனர்கள், மத்திய லஞ்சஒழிப்பு கமிஷனர், தலைமை தணிக்கை அதிகாரி உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவை காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், திரிணாமுல், திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் புறக்கணித்தன.

விழாவில் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அறிமுகப்படுத்தி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசிய போது, “ஜிஎஸ்டி அமலாக்கத்தில் இந்தியா புதிய சரித்திரம் படைக்கிறது. ‘ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே நாடு’ என்ற அடிப்படையில் நாடு முழுவதும் ஒரே வரி அமல்படுத்தும் திட்டம் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. 2010ம் ஆண்டில் ஜிஎஸ்டி அமலாக்கப்படும் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2006ம் ஆண்டு அறிவித்தது. நாட்டின் நலனுக்காக எல்லா அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என்பதை ஜிஎஸ்டி நிரூபித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் நடத்திய 18 கூட்டங்களில், எல்லா முடிவுகளையும் கருத்தொற்றுமை அடிப்படையில் கவுன்சில் உறுப்பினர்களான மாநில நிதி அமைச்சர்கள் எடுத்துள்ளனர்.மேலும், எல்லா மாநிலங்களின் கருத்துக்களும் ஏற்கப்பட்டு, ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி தத்துவம் அடிப்படையில் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அமலாக்கம் என்பது நாடு முழுவதற்கும் முக்கிய சாதனை ஆகும். உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வரும் நிலையில், இந்திய பொருளாதாரத்துக்கு புதிய உந்துவிசையாக ஜிஎஸ்டி அமையும்”இவ்வாறு அமைச்சர் ஜெட்லி பேசினார்.
இந்த ஜிஎஸ்டி தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவுக்கான முன்னேற்ற பாதையை இந்த நள்ளிரவில் நாம் முடிவு செய்துள்ளோம். நாட்டின் புதிய எதிர்காலம் இந்த நள்ளிரவில் ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் எதிர்கால பயணத்துக்கான பாதையை ஜிஎஸ்டி தொடங்கி வைத்துள்ளது. ஜிஎஸ்டி அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்காவிட்டால் ஜிஎஸ்டியை நிச்சயமாக உருவாக்கி இருக்க முடியாது. எனினும், ஜிஎஸ்டியில் ஒருமித்த கருத்தை உருவாக்குவது எளிதானதாக இருக்கவில்லை. நீண்ட சிந்தனையின் நடைமுறை காரணமாக ஜிஎஸ்டி உருவானது. ஜிஎஸ்டி என்ற கனவு நனவாவதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜிஎஸ்டியை உருவாக்குவது ஒரு மாரத்தான் ஓட்டம்போல் நடந்தது. ஜிஎஸ்டி மிகப்பெரிய சீர்திருந்த நடவடிக்கையாகும்.
பகவத் கீதையில் இருப்பதுபோல, ஜிஎஸ்டி கவுன்சிலிலும் 18 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. கீதையில் 18 அத்தியா யங்கள் உள்ளன. அதேபோல் ஜிஎஸ்டி கவுன்சில் 18 கூட்டங்களை நடத்தி இருக்கிறது. ஜிஎஸ்டி நம் நிதிக்கான ஆரோக்கியமாகும். நீண்ட விவாதத்துக்கு பின்னர்தான் ஜிஎஸ்டியில் ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி என்பது ஒரு கூட்டு முயற்சியாகும். விலை வேறுபாட்டை ஜிஎஸ்டி முடிவுக்கு கொண்டு வரும். ஜிஎஸ்டி பற்றி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஜிஎஸ்டி இந்தியாவை ஒன்றாக மாற்றி உள்ளது. வரி அமைப்பில் இப்போது பிரச்னைக்குரிய பகுதி இல்லை. ஜிஎஸ்டி ஒரு திருப்புமுனை. வரி தீவிரவாதத்துக்கும், அதிகாரிகள் தொல்லைக்கும் ஜிஎஸ்டி முற்றுப்புள்ளி வைக்கும். கறுப்பு பணத்துக்கு ஜிஎஸ்டி மரண சாசனம் எழுதும். சிறிய வர்த்தகர்களுக்கு ஜிஎஸ்டி எந்த பிரச்னையையும் ஏற்படுத்தாது. இந்தியாவை ஜிஎஸ்டி ஒருங்கிணைக்கும். ஜிஎஸ்டி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். புதிய இந்தியாவை ஜிஎஸ்டி கட்டமைக்கும்.

ஜிஎஸ்டி என்பது வர்த்தகம் செய்வதற்கு மிகவும் எளிதானது. ஜிஎஸ்டி என்பது வரி சீர்திருத்தம் மட்டுமல்ல, அது ஒரு பொருளாதார சீர்திருத்தம். விரைவில் அது சமூக சீர்திருத்தமாகவும் மாறும். புதிய இந்திய கனவை நிறைவேற்று வதில் ஜிஎஸ்டி மிக முக்கிய பங்கு வகிக்கும். நம்முடைய பொருளாதாரத்தில் நிலவும் சமமின்மையை குறைக்கும் கிரியா ஊக்கியாக ஜிஎஸ்டி செயல்படும். ‘கச்சா பில்’, ‘பக்கா பில்’ இனி கிடையாது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்து விட்டாலும், ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிவை இன்னும் ஏராளம் உள்ளன. அந்த திசையில் ஏழைகளுக்கு உதவுவதில் ஜிஎஸ்டி மிகவும் முக்கிய பங்கு வகிக்கும்.
ஏராளமான வரிகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அதில் இருந்து இப்போது விடுதலை கிடைத்துள்ளது. ஊழலுக்கு ஜிஎஸ்டி முற்றுப்புள்ளி வைக்கும். நேர்மைக்கான வாய்ப்புகளை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், நல்ல அரசுக்கும் இது உதவியாக இருக்கும். பொருளாதார வளர்ச்சிக்கான தடைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும். கங்காநகரில் இருந்து இடாநகரையும், லே பகுதியில் இருந்து லட்சதீவையும் ஜிஎஸ்டி இணைக்கும். இதன்மூலம் ‘ஒரு நாடு ஒரே வரி, ஒரே சந்தை’ என்ற நிலை உருவாகும். ஜிஎஸ்டி உருவாக்கம் என்பது ஒரு அரசின் சாதனை அல்ல. இது கூட்டு முயற்சியால் விளைந்த நன்மையாகும். இது ஒத்துழைப்பு கூட்டாட்சிக்கான சிறந்த உதாரணமாகும்.ஜிஎஸ்டிக்கு பின்னால் நாட்டின் சிறந்த நிபுணர்களின் மூளைகளின் உழைப்பு அதிகமாக இருந்துள்ளது. அவர்களின் திறமைகளை அளவிட முடியாது. இந்தியாவை ஒருங்கிணைக்கும் ஜிஎஸ்டி ஒரு நல்ல எளிதான வரி”இவ்வாறு மோடி பேசினார்.
விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசிய போது, “ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கான நீண்ட பாதையில் நானும் பங்கேற்றேன். மத்திய நிதி அமைச்சராக நான் இருந்தபோது, பார்லிமென்டில் ஜிஎஸ்டிக்கான அரசியல் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தேன். விரைவில் ஜிஎஸ்டி அமலாக்கப்படும் என அப்போது நான் நம்பிக்கை கொண்டிருந்தேன். அந்த நம்பிக்கை இப்போது நிறைவேறியுள்ளது. இந்தச் சாதனைக்காக ஜிஎஸ்டி கவுன்சில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஒத்துழைப்பு அளித்த மாநிலங்களுக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன்.”என்றார். பின்னர், ஜனாதிபதி பிரணாப்பும், பிரதமர் மோடியும் சேர்ந்து கூட்டாக, ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கான மணி ஒலிக்கும் பட்டனை அழுத்தினர். அத்துடன், நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலாக்கம் தொடங்கியது.


