க்ராண்ட் செஸ் டூர்: மேக்னஸ் கார்ல்சனை கருப்பு காய்களுடன் வீழ்த்திய குகேஷ் டி!

க்ராண்ட் செஸ் டூர்: மேக்னஸ் கார்ல்சனை கருப்பு காய்களுடன் வீழ்த்திய குகேஷ் டி!

செஸ் உலகில் உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ், மீண்டும் ஒருமுறை உலக நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளார். க்ரோஷியாவில் நடைபெற்று வரும் சூப்பர்யுனைடெட் க்ரோஷியா ரேபிட் & பிளிட்ஸ் 2025 (SuperUnited Croatia Rapid & Blitz 2025) தொடரின் ரேபிட் பிரிவில், கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ், கார்ல்சனைத் தோற்கடித்து ஒற்றை முன்னிலை பெற்றுள்ளார்.

மேக்னஸ் கார்ல்சனின் சவால் மற்றும் குகேஷின் பதிலடி

இந்தத் போட்டிக்கு முன்னர், மேக்னஸ் கார்ல்சன், குகேஷ் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். ரேபிட் மற்றும் பிளிட்ஸ் வடிவங்களில் குகேஷ் “பலவீனமான வீரர்களில் ஒருவர்” என்று தான் கருதுவதாகக் கூறியிருந்தார். இத்தகைய சூழலில், இந்தக் குறிப்பிடத்தக்க வெற்றி, கார்ல்சனின் கருத்துக்கு குகேஷ் சதுரங்கப் பலகை மூலம் அளித்த அழுத்தமான பதிலடியாக அமைந்துள்ளது.

இது குகேஷ், கார்ல்சனை ரேபிட் செஸ்ஸில் வீழ்த்துவது இது ஐந்தாவது தொடர்ச்சியான வெற்றியாகும். இப்போட்டிக்கு முன்னரும், நோர்வே செஸ் 2025 இல் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் முக்கிய தருணங்கள்

ஜாப்ரேகில் நடந்த இந்தப் போட்டியில், குகேஷ் கருப்பு காய்களுடன் களமிறங்கினார். கார்ல்சன் வெள்ளை காய்களுடன் “இங்கிலீஷ் ஓப்பனிங்” மூலம் ஆட்டத்தைத் தொடங்கினார். ஆரம்பத்தில் கார்ல்சன் சற்று நல்ல நிலையில் இருப்பதாகத் தோன்றினாலும், குகேஷ் நிதானமாக விளையாடி தனது நிலையை மேம்படுத்தினார். குறிப்பாக, 26வது நகர்வில் தனது d-பானை நகர்த்தி குகேஷ் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். நேரம் குறைவாக இருந்ததால், கார்ல்சன் அழுத்தத்திற்கு ஆளானார். அவரது நிலை மோசமடைந்தபோது, கடிகாரத்தில் ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே நேரம் இருந்தது. 49வது நகர்வுக்குப் பிறகு, தனது நிலை மீட்க முடியாததை உணர்ந்த கார்ல்சன், தோல்வியை ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்தார்.

குகேஷின் ஆதிக்கம்

இந்த வெற்றியின் மூலம், குகேஷ் தற்போது க்ராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் தொடரில் 10 புள்ளிகளுடன் தனித்து முன்னிலை வகிக்கிறார். இது அவரது ஐந்தாவது தொடர்ச்சியான வெற்றியாகும். கார்ல்சனின் முந்தைய கருத்துக்களுக்கு மாறாக, குகேஷ் ரேபிட் வடிவத்திலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

புகழ்பெற்ற செஸ் வீரர் கேரி காஸ்பரோவ் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில், “இப்போது நாம் மேக்னஸின் ஆதிக்கத்தைக் கேள்வி கேட்கலாம். இது குகேஷுக்கு எதிரான அவரது இரண்டாவது தோல்வி மட்டுமல்ல, இது மிகவும் உறுதியான தோல்வி. இது ஒரு அதிசயம் அல்ல… அல்லது மேக்னஸின் மோசமான தவறுகளால் குகேஷ் பயனடைந்தார் என்று சொல்ல முடியாது. இது ஒரு கடுமையான போராட்டம் நிறைந்த ஆட்டம். மேக்னஸ் தோற்றார்,” என்று கூறினார்.

இந்த வெற்றி, இளம் இந்திய கிராண்ட்மாஸ்டரான குகேஷ், உலகின் தலைசிறந்த செஸ் வீரர்களுக்கு மத்தியில் சமமானவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதற்கான ஒரு வலுவான ஆதாரமாக அமைந்துள்ளது.

ஈஸ்வர் பிரசாத்

CLOSE
CLOSE
error: Content is protected !!