எவரெஸ்ட் சிகரத்தின் பின்னணியில் உள்ள கதையும்/பின்னணியும்!
உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், எவரெஸ்ட் என்பது ஜார்ஜ் எவரெஸ்ட் என்ற ஆங்கிலேய நில அளவையாளரின் பெயர் என்பதையும், இந்தியாவின் நிலப்பரப்பைத் துல்லியமாக அளவிடுவதற்காக முதன்முதலாக நடைபெற்ற நில அளவைப் பணியைத் தலைமை ஏற்று நடத்தியவர் இவர் என்பதையும் பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று (ஜூலை 4) ஜார்ஜ் எவரெஸ்ட்டின் பிறந்தநாள் என்பதால், அவரைப் பற்றியும் எவரெஸ்ட் சிகரத்தின் பெயர்க்காரணம் குறித்தும் சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்வது பொருத்தமானது.
எவரெஸ்ட் என்ற பெயர் ஏன் வந்தது?
இமயமலையின் உயர்ந்த சிகரங்களில் ஒன்றான இதை நேபாளிகள் “சாகர்மாதா” என்றும், திபெத்தியர்கள் “சோமுலிங்மா” என்றும், வடமொழியில் “தேவகிரி”, “தேவதுர்கா” என்றும் காலம்காலமாக அழைத்து வந்தனர். இந்தியாவில் இமயமலை கைலாயம் என்று அழைக்கப்பட்டது.
ஆனால், இந்தச் சிகரத்திற்கு ஜார்ஜ் எவரெஸ்ட் என்ற பெயரை ஏன் சூட்ட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஒரு நாட்டை நயவஞ்சகமாக ஆக்கிரமித்து, அங்கு வாழும் பூர்வகுடி மக்களின் நிலங்களைக் கைப்பற்றி, புதிய தேசங்களைக் கண்டுபிடித்ததாகப் பெயர் சூட்டிக்கொண்டு மகிழ்வது ஆங்கிலேயர்களின் வழக்கம். அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற பல பூர்வீக நிலங்கள் வெள்ளையர்களின் அதிகார வெறியால் தங்களது சுயத்தை இழந்ததையும், பூர்வகுடிகள் அழித்தொழிக்கப்பட்டதையும் இவ்வுலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அதேபோன்ற ஒரு நிகழ்வாகவே இதுவும் பார்க்கப்படுகிறது.

இந்திய நில அளவைப் பணியின் தொடக்கம்
இந்த நில அளவைப் பணி 1802 ஆம் ஆண்டில் தொடங்கியது. கர்னல் வில்லியம் லாம்டன் என்ற ஆங்கிலேயர் “தி கிரேட் இந்தியன் ஆர்க்” (The Great Indian Arc) எனப்படும் இந்திய நில அளவைப் பணியை மேற்கொண்டார். சென்னையின் பரங்கிமலையில் துவங்கிய இப்பணி 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. இந்த பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே பாதியில் லாம்டன் இறந்துவிட்டார். லாம்டன் விட்டுச்சென்ற பணியை ஜார்ஜ் எவரெஸ்ட் சிறப்பாக செய்து முடித்தார்.
சிகரத்தின் உயரத்தை அளந்தது யார்?
ஆனால், எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை முதன்முதலில் துல்லியமாக அளந்தது யார் தெரியுமா? இராதானாத் சிக்தார் என்னும் வங்காளத்து இந்தியரே முதன்முதலாக 1852 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர்கள் என்று துல்லியமாகக் கண்டுபிடித்தார். அவர் சுமார் 240 கி.மீ தொலைவில் இருந்தபடியே தியோடலைட் என்னும் கருவியினால் திரிகோணமிதி முறையின் அடிப்படையில் இதன் உயரத்தைக் கணித்தார்.
எவரெஸ்ட் எங்குள்ளது?
எவரெஸ்ட் சிகரம் இந்தியாவில் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை, இது நேபாளத்திற்கும் சீனாவிற்கும் எல்லையில் உள்ளது.
பெயர் மாற்றம் ஏன் நிகழ்ந்தது?
இங்கிலாந்தின் ராணியாக எலிசபெத் முடிசூட்டிக்கொண்ட அன்றுதான் எவரெஸ்ட் சிகரம் வெற்றிகொள்ளப்பட்ட செய்தி வெளியிடப்பட்டது. உடனே ஆங்கிலேயர்கள் அதற்கு எலிசபெத்தின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள். ஆனால், எவரெஸ்ட்டின் தென்பாதிக்கு உரிமையாளரான நேபாளமும், வடபாதிக்கு உரிமையாளரான சீனாவும் அதைக் கண்டுகொள்ளவேயில்லை.
இந்தச் சிகரத்தை முறைப்படி அளவிடும் முன், இதனை கொடுமுடி-15 என்றுதான் குறித்து வைத்திருந்தார்கள். பின்னர், நில அளவை அணியின் தலைவராக இருந்த ஜார்ஜ் எவரெஸ்ட் என்பவரின் பெயரை இந்த கொடுமுடிக்கு ஆங்கிலேயர் ஆண்ட்ரூ வா (Andrew Waugh) என்பவர் சூட்டினார்.
உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டும் இவ்வாறு பெயர் மாற்றம் பெற்று, தனது இயற்பெயர்களை மறந்து, ஒரு ஆங்கிலேய அதிகாரியின் பெயரைத் தாங்கி நிற்கிறது. இது, காலனியாதிக்கத்தின் ஒரு பிரதிபலிப்பாகவே இன்றும் பார்க்கப்படுகிறது.


