நம்மைப் போல் ஏழு பேர்! -கூகுளின் புதிய அம்சம் இந்தியாவில் அறிமுகம்!
உலகில் ஒருவரை போன்ற தோற்றம் கொண்ட ஏழு பேர் வாழ்ந்து வருகின்றனர் என்ற நம்பிக்கை அல்லது கருத்து நிலவி வருகிறது. எனினும் இதன் நம்பகத்தன்மை ஒவ்வொருத்தர் மனநிலை சார்ந்தது ஆகும். கூகுளின் ஆர்ட்ஸ் & கல்ச்சர் எனும் செயலி இந்த நம்பிக்கையை நம்ப வைக்கும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் அழகிய மற்றும் பிரபல ஓவியங்கள், புகைப்படங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் சார்ந்த தகவல்கள் இந்த செயலியில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சம் வாடிக்கையாளர் முக சாயலில் உலகம் முழுக்க இருக்கும் போர்டிரெயிட்களை காண்பிக்கின்றது.
முதற்கட்டமாக அமெரிக்காவில் வழங்கப்பட்ட அம்சம், நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்தயாவிலும் இந்த அம்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது. கம்ப்யூட்டர் விஷன் தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளரின் செல்ஃபிக்களை உலகம் முழுக்க சேகரிக்கப்பட்ட போர்டிரெயிட்களுடன் ஒற்றுபோகும் புகைப்படங்களை காண்பிக்கும்.
இத்துடன் குறிப்பிட்ட நபரின் செல்ஃபி போர்டிரெயிட்களுடன் ஒற்று போகும் அளவையும் காண்பிக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் கிடைக்கும் கூகுள் ஆர்ட்ஸ் & கல்ச்சர் செயலியில் இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இதுவரை செல்ஃபி அம்சத்தை பயன்படுத்தி மூன்று கோடி பேர் செல்ஃபி எடுத்துள்ளனர்.
உலகம் முழுக்க 70 நாடுகளில் உள்ள 1500 அருங்காட்சியகங்களில் 6000க்கும் அதிகமான கண்காட்சிகளில் உள்ள ஓவியங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை என மொத்தம் பல லட்சத்திற்கும் அதிகமான புகைப்படங்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவை தொடர்ந்து மேலும் பல்வேறு நாடுகளில் இந்த அம்சம் படிப்படியாக வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.