’குட் பேட் அக்லி’ -விமர்சனம்!

இன்றைய 2கே கிட்ஸூகளுக்கு எம்.ஜி.ஆரின் ஃபார்முலா என்றொன்று இருந்ததே தெரிய வாய்ப்பில்லை. தன்னை பிடிக்காதவரையும் தம் படத்தைப் பார்க்கவைத்துவிடுவார்.திரைப்படங்களில் வன்முறை அதிகரிப்பது குறித்து முன்பொருமுறை கவலையைத் தெரிவித்த பிரபல சைக்கியாரிஸ்ட் ருத்ரைய்யாவும் “அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் பத்து பேரை எதிர்த்து சண்டைபோடும்போது கஷ்டமாக இருக்காது; அருவருப்பாக இருக்காது; UNEASY-ஆக இருக்காது’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஏனென்றால், எம்.ஜி.ஆர் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்பதால், ரசிகர்கள் பயப்படாமல் படம் பார்க்கலாம். நல்லவன் வாழ்வான் என்பதில், எம்.ஜி.ஆர் படங்களில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மீது கடுமையாக விமர்சனம் வைக்கும் பலரும், அவரை ஏதேனும் ஒரு வகையில் ரசித்தனர். அந்த ஹிட் சீக்ரெட் படி இந்த குட் அக்லியில் தோன்றுகிறார் அஜித்குமார்.அப்படி ஸ்கீரினில் வரும் போதெல்லாம் ஆரவாரம் செய்ய வைத்து விடுகிறார். இப்படி ஒரு ஃபார்முலைப் பிடித்த டீம் இன்னும் கொஞ்சம் அக்கறையுடன் கதை , திரைக்கதை வசனத்தில் அக்கறை காட்டி இருந்தால் அஜித் ரசிகர்களை தாண்டியும் பலரை நிச்சயம் கவர்ந்து இருக்கும்.
அதாவது நாயகன் ஒரு காலத்தில் கேங்க்ஸ்டராக இருந்த ரெட் டிராகன் என்ற நாமகரணம் கொண்ட அஜித் குமார் தன் ஒய்ஃப் ரம்யா என்ற பேர் கொண்ட த்ரிஷா கேட்டுக் கொண்டதாலும், மகனுக்கு ஒரு நல்ல அப்பாவாக இருக்க வேண்டும் என்று விரும்பியதாலும் , செய்த தவறுகளையெல்லாம் ஒப்புக் கொண்டு அரசாங்கத்தில் சரணடைந்து மும்பையில் 18 வருடங்கள் சிறை வாசம் இருக்கிறார் . அதே சமயம் நாயகி த்ரிஷா அஜித்தின் குற்ற பின்னணியை மறைத்து அவர் பிசிஸசில் படுபிசியாக இருக்கிறார் என சொல்லி ஸ்பெய்னில் தன் மகன் விஹானை (கார்த்திகேயா தேவ்) வளர்க்கிறார். முன்னரே சொன்ன 18 ஆண்டுகளுக்கு பின் மகன் விஹானை பார்க்க சிறையில் இருந்து ரிலீஸாகி ஸ்பெய்னுக்கு AK வரும் போது, போதைப் பொருள் வழக்கு ஒன்றில் ஆசை மகம் விஹான் கைதாகிவிட்டார் என்ற தகவல் கிடைக்கிறது . நிஜமாலுமே ரொம்ப நல்லவனாகிய மகனுக்காக கைவிட்ட வன்முறையை, மீண்டும் கையில் எடுக்கிறார் முன்னாள் தல. ஆக அஜித் மகனை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்தது யார்? அவரை காப்பாற்றினாரா அஜித்.- இவைதான் இந்த குட் பேட் அக்லி சினிமா கதை(யாம்).
ஹீரோ அஜீத் துப்பாக்கி எடுத்தால் குறைந்தது 20 லிருந்து 50 பேராவது சுட்டு தள்ளப்படுகிறார்கள். இதற்கு லாஜிக் மேஜிக் எதுவும் பார்க்க கூடாது ஏனென்றால் அவர் கையில் இருப்பது ஏகே 47 மட்டுமல்ல அதற்கும் மேலாக குண்டு சுனாமி பொழியும் மிஷின் துப்பாக்கிகள்.அத்துடன் தனது ஒவ்வொரு அசைவிலும் மாஸ் காட்டியிருப்பவர், வசன உச்சரிப்பு, ஆக்ஷன், மகன் மீதான செண்டிமெண்ட் என அனைத்தையும் லிமிட்டா கொடுத்தே தன் ரசிக குஞ்சுமணிகளை கைதட்ட வைத்து விசிலும் அடிக்க வைத்து விடுவதில் வழக்கம் போல் ஜெயித்து விடுகிறார்.
வில்லன் ரோலில் நடித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ். அதுவும் டபுள் ஆக்ட். சிங்கிள் ரோல் என்றாலே தனது கனமான காந்தர்வ குரலை வைத்து மிரட்டுவார், இதில் இரட்டை வேடம்.. போதாதா மிரட்டலோ மிரட்டல் செய்வதில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். கூடவே “ஒத்த ரூபாய் தாரேன்…” மற்றும் “தொட்டு தொட்டு பேசும் சுல்தானா…’ ஆகிய பாடல்களுக்கு ஸ்டைலிஷான குத்தாட்டம் போட்டு தன் கதாபாத்திரத்தையும் கொண்டாட வைத்து போனஸ் மார்க்கும் வாங்கி விடுகிறார்.
அஜீத் மிசஸாக திரிஷா நடித்திருக்கிறார். அஜீத்தின் எக்ஸ் காதலியாக சிம்ரன் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். அத்துடன் பிரபு, பிரசன்னா, சுனில், உஷா உதுப், ப்ரியா பிரகாஷ் வாரியார் ,ரெடின் கிங்ஸ்லி, ஜாக்கி ஷெராஃப் எனப் பலர் வருகிறார்கள், எல்லோரும் கெஸ்ட் ரோல் அளவிலேயே வருகிறார்களே தவிர யாருக்கும் அழுத்தமான பாத்திரம் இல்லை. என்பதால் ஆஜர் மட்டும் சொல்லிவிட்டு போகிறார்கள்.
கேமராமேன் அபிநந்தன் ராமானுஜம் என்றும் அல்டிமேட் ஸ்டார் அஜித்தை டைரக்டரின் மனசுகேற்ப ரசித்து, ருசித்து ஒவ்வொரு சீன்களையும் படமாக்கியிருக்கிறார். எந்த கோணத்தில் காண்பித்தாலும் அஜித்தை படு மாஸாகவும், ஸ்டைலிஷாகவும் காட்டுவதற்கு அதிகம் மெனக்கெட்டிருப்பவர், திரிஷாவை வழக்கம் போல் இளமையாக காண்பித்திருக்கிறார். ஒட்டு மொத்த படத்தையும் கலர்புல்லாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தி தன் பங்களிப்பில் டிஸ்டிங்கசன் வாங்கி விட்டார்.
மியூசிக் டைரக்டர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பழைய பாடல்கள் ரீமேக் செய்யப்பட்ட விதம் ஆட்டம் போட வைக்கிறது. திடீரென்று வரும் கானா பாடல்களும், பின்னணி இசையிலும் கமர்ஷியல் மசாலா சற்று தூக்கலாக இருந்தாலும், காட்சிகளில் இருக்கும் பில்டப்புகளுக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.
மாஸ் ஹீரோ அஜித்த்ஹின் மாஃபியா லைஃப், மேரேஜ்,, குழந்தை பிறப்பு என மூன்று பார்ட்டாக காட்ட வேண்டிய அளவுக்கு படத்தில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருந்தாலும், 2 மணி நேரம் 20 நிமிடங்களில் அதை சுருக்கி சொல்லியிருக்கும் படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி தன் ஒர்க்கில் இன்னமும் மெனக்கெட்டிருக்கலாம். . ஒன்றோடு ஒன்றுக்கு தொடர்பில்லாததைப் போல ஏகப்பட்ட காட்சிகள் இருப்பது உறுத்தல்.
ஸ்டண்ட் மாஸ்டர், சுப்ரீம் சுந்தர், ஆடை வடிவமைப்பாளர்கள் அனு வர்தன், ராஜேஷ் குமாராசு, கலை இயக்குநர் ஜி.எம்.சேகர் ஆகியோரது பங்களிப்பு படத்தை பக்காவாக கமர்சியல் லெவலுக்கு தூக்கி விட்டு விடுகிறது.
படத்தில் ஒன்றரை நிமிடங்களுக்கு ஒரு முறை தலயின் பழைய பட ரெஃபரன்ஸ் வந்து கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் ஆர்வம் காட்டும் ம் அவை, போகப் போக திகட்டி விடுகிறது. இன்ஸ்டா ரீல்ஸ் பாணியிலேயே படம் நகர்வது , ஒரு கட்டத்தில் போரடிக்க ஆரம்பித்துவிடுகிறது. இன்னும் சொல்லப்போனால் இது அஜித்தின் பழைய படங்களை, அஜித்தை வைத்தே ஒரு ஷோ ரீலாக எடுத்தது ஒப்பேற்றியது போலிருக்கிறது. டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் வெறித்தனமான ரசிகராக அவர் நிற்பதுவே, நடப்பதுவே, சிரிப்பது, முறைப்பது, காதலிப்பது, கவலைப்படுவது, கார் ஓட்டுவது என அனைத்தையும் ரசித்து ரசித்து காட்சிகளை வடிவமைத்து காண்பதெல்லாம் சொப்பனந்தானா என்று கிறங்கியிருப்பது படம் முழுவதும் தெரிகிறது.
ஒட்டு மொத்தத்தில் ஆரம்ப பேராவில் சொன்னது போல் படத்தில் கதை, திரைகதை , வசனம் மற்றும் லாஜிக் என எதுவுமே இல்லை என்றாலும், அஜித்தை வைத்து மேஜிக் செய்திருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன், தன்னை போன்ற கண்மூடித்தனமான அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்துவதில் ஜெயித்து விட்டார்.
மார்க் 3/5