கடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா?

ஒரே நாளில் இரு பெரும் துயரங்களை சந்தித்து கேரளமே சோகத்தில் ஆழ்ந்து போயுள்ளது. கேரள மாநிலம் இடுக்கியில் அமைந்திருக்கும் மூணாறு ராஜமலா பெட்டிமுடி பகுதியில் தேயிலை தோட்டப் பணியாளர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது.கண்ணன் தேவன் டீ கம்பெனியில் வேலை பார்க்கும் 20 குடும்பங்களைச்சேர்ந்த 85 பேர் அங்குள்ள வசதிகள் குறைந்த சிறிய குடியிருப்புகளில் தங்கியிருந்தனர். பெரும்பாலானோர் தமிழர்கள்.தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச்சேர்ந்தவர்கள். கேரளாவில் தற்போது பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. நேற்று அதிகாலையில் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. 24 பேர் உடல்கள் இதுவரை கிடைத்துள்ளன. 12 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறையினர் தற்போது அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் வேதனை தீரும் முன்னரே நேற்று இரவு கோழிக்கோடு கரிப்பூர் விமான விபத்து நடந்து வேதனையை மேலும் அதிகரிக்கச்செய்தது.மரண எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது. கனத்த மழை காரணமாக விமான ஓடுதளத்தைப் பார்க்க விமானியால் முடியாததால் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. கறுப்புபெட்டிகள் இரண்டும் கைப்பற்றப் பட்டது. தொடர் விசாரணை நடந்து வருகிறது. இறந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சமும் மத்திய அரசு நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. விமானத்தில் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அவருக்கு சிறப்பு சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துபாயில் இருந்து ஆயிரம் கனவுகளோடு சொந்த ஊர் வந்தவர்களின் கனவு விமான நிலையத்திலேயே சுக்கு நூறாக நொறுங்கி விட்டது.அதுபோலவே சொந்த ஊரில் வேலை வாய்ப்பு இல்லாததால் தேயிலைக்கம்பெனியில் சொற்ப சம்பளத்தில் வேலைக்குப்போய் வாழ்க்கையையை ஓட்டிக்கொண்டிருந்த நம் தமிழக சொந்தங்கள் பலர் உயிரையும் இழந்து மண்ணோடு மண்ணாகியுள்ளனர். ”இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ₹ 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்” என கேரள முதல்வர் பிணறாயி விஜயன் அறிவித்துள்ளார்.
அதுபோல் மத்திய அரசும் ரூ.2 லட்சம் இறந்தவர் குடும்பத்துக்கு அளிக்கப்படும் என அறிவித்து உள்ளது.இரு சம்பவங்களும் கேரளாவை நிலை குலையச்செய்து கொண்டிருக்கும் வேளையில் தொடர் மழையால் ஐந்து மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது.
கடவுளே உன் தேசம் தொடந்து சோதனைக்குள்ளாகிறதே..உனது தேசத்தை உன்னைத்தவிர வேறு யாரால் காப்பாற்ற முடியும்..?
கேரளாவிற்கு கொஞ்சம் கருணை காட்டு கடவுளே..!