பருவ நிலை மாற்றம் குறித்து உலக நாடுகளை கவரும் விழிப்புணர்வு பேரணி!
மனிதர்களால பாழாய் போன பருவ நிலை மாற்றம் குறித்து விவாதிக்க ஐ.நா சபை கூடவுள்ள நிலையில், 150க்கு மேற்பட்ட நாடுகளில் இரண்டாவது நாளாக இளைஞர்கள் பேரணிகள் மூலம் பூமியை பாதுகாக்கும் முழக்கங்களை முன்னெடுத்தனர்.
உலகின் கல்லீரல் எனப்படும் அமேசான் மலைக்காடுகளில் பற்றி எரியும் தீ, இந்தோனேஷியா காட்டுத்தீ போன்ற பல்வேறு நிகழ்வுகளால், புவி வெப்பமயமாகி, பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நிலவி வரும் பருவ நிலை மாற்றம் குறித்து விவாதித்து, முக்கிய முடிவுகளை எடுக்க ஐ.நா பொதுச்சபை அடுத்த வாரம் கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்பதற்காக 150க்கும் மேற்பட்ட நாடு களில் மக்கள், விழிப்புணர்வு பேரணிகளை நேற்று நடத்தினர்.
குறிப்பாக மெக்ஸிக்கோ, இந்தியா, பெரு, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற தலைவர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று இயற்கையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து உலக தலைவர்கள் ஆலோசிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பிரேசிலில் நடந்த விழிப்புணர்வு போராட்டத்தின் போது, சிறுவர்கள் உள்பட பல ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டு, அமேசான் மழைக்காடுகள் அழிய காரணமான அதிபர் ஜெயிர் போல்சனரோ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
மாபெரும் இந்த விழிப்புணர்வு பேரணிக்கு இடையே, ஆர்க்டிக் கடலில் பருவ நிலை மாற்றம் தொடர்பான விரிவான ஆராய்ச்சியை மேற்கொள்ள 19 நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஓராண்டு கால ஆராய்ச்சி பயணத்தை தொடங்கினர்.