Gen Zயின் அதிகாரபூர்வ ஹீரோ: ‘ஒன் பீஸ்’ கொடி எனும் போராட்டப் பிரகடனம்!

Gen Zயின் அதிகாரபூர்வ ஹீரோ: ‘ஒன் பீஸ்’ கொடி எனும் போராட்டப் பிரகடனம்!

இணைய உலகில் மூழ்கி, சமூக அக்கறை இல்லாதவர்கள் என இன்றைய Gen Z தலைமுறையினர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுண்டு. ஆனால், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நேபாளம் போன்ற நாடுகளில் ஊழல் மற்றும் அநீதிகளுக்கு எதிராக அவர்கள் நடத்திய மாபெரும் போராட்டங்கள், இந்த விமர்சனங்களைப் பொய்யாக்கி, உலக வரலாற்றில் புதியதொரு தடத்தைப் பதித்துள்ளன. இந்த இளைஞர்கள் தங்கள் தேசியக் கொடிக்கு இணையாகவும், போராட்டத்தின் எதிர்ப்புக் குறியீடாகவும் ஏந்திச் சென்றது, புகழ்பெற்ற அனிமேஷன் தொடரான ‘ஒன் பீஸ்’-இல் வரும் ‘ஜாலி ரோஜர்’ கொடியைத்தான்.

ஒரு நாட்டின் ஆட்சியையே மாற்றும் சக்தி கொண்ட போராட்டத்திற்கு, ஒரு அனிமேஷன் கதாபாத்திரத்தின் கொடி எப்படி இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது? இந்தக் கேள்விக்கு விடை, வெறும் ஃபேஷனில் இல்லை; மாறாக, அந்தக் கதைக்களத்தில் ஆழமாகப் புதைந்துள்ள அரசியல் உணர்வுகளிலும், விடுதலை வேட்கையிலுமே உள்ளது.

அனிமேஷன் எழுப்பும் அரசியல் கேள்விகள்

இன்றைய Gen Z தலைமுறையினரிடம் நருடோ, ஒன் பீஸ், அட்டாக் ஆன் டைட்டன் போன்ற அனிமேஷன் தொடர்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இது வெறும் கலை வடிவத்தின் மீதான ஈர்ப்பு மட்டுமல்ல; இத்தொடர்களில் பேசப்படும் ஆழமான, உணர்வுப் பூர்வமான கதைக்களமே அவர்களைக் கவர்ந்திழுக்கிறது.

‘ஒன் பீஸ்’ தொடரின் கதாநாயகன் மங்கி டி. லுஃபி மற்றும் அவனது ‘ஸ்ட்ரா ஹேட் பைரேட்ஸ்’ குழு, பாரம்பரிய கடற்கொள்ளையர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். அவர்கள் செல்லுமிடமெல்லாம் மக்களைச் சுரண்டுவதற்குப் பதிலாக, அவர்களின் துன்பங்களை அறிந்து சரிசெய்கிறார்கள். அவர்களின் சாகசப் பயணங்களின் மையக் கருவே:

  • கொடுங்கோல் ஆட்சியாளர்களின் அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புவது.
  • மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்பது.
  • மனிதக்கடத்தல், இன/நிற வெறிகளுக்கு எதிராகப் போராடுவது.
  • ஊழல் நிறைந்த அரசாங்கத்தை வீழ்த்தி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது.

அக்கதையில், அரசு அங்கீகாரம் பெற்ற கடற்கொள்ளை குற்றவாளிகளுடன் கைகோர்க்கும் அரசின் கடற்படையின் ஊழல், இன்றைய இளைஞர்களின் நிஜ வாழ்வில் உள்ள அதிகார துஷ்பிரயோகம், பெரும் பணக்காரர்களுக்கும் ஊழல்வாதிகளுக்கும் அரசாங்கம் தரும் ஆதரவு போன்றவற்றுடன் நேரடியாகத் தொடர்புபடுத்துவதாக இளைஞர்கள் உணர்கின்றனர்.

நம்பிக்கையின் குறியீடு: லுஃபியின் உறுதியும், தன்னம்பிக்கையும்

அனிமேஷன் கதாபாத்திரங்களின் ஹீரோயிசத்துடன் வெளிப்படும் சம்பவங்கள், இளைஞர்களுக்கு தங்கள் சொந்த வாழ்க்கையை வழிநடத்துவதாக அமைகிறது. நருடோ உசுமாகி-யின் விடாமுயற்சியும், “நான் ஒருபோதும் எனது இலட்சியத்தை கைவிட மாட்டேன்” என்ற அவனது பேச்சும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி, துயரங்களை எதிர்கொள்ளக் கற்றுக்கொடுக்கிறது.

அதேபோல, லுஃபி குழு சண்டையிட்டு மீட்கும் கிராமங்களில், தனது கொடியைக் கொடுத்துவிட்டு, “மீண்டும் பிரச்சனை வந்தால் லுஃபி குழு அவர்களை மீட்க வரும்” என்ற உறுதியுடன் செல்வது, இளம் ரசிகர்களிடையே தங்களை லுஃபியாகவோ அல்லது அவனுடன் பயணிப்பதாகவோ உணரும் ஒரு பெரிய நம்பிக்கையைத் தருகிறது. தங்கள் நாட்டில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க லுஃபி வருவான் என்று நம்பும் அளவிற்கு அந்தக் கதாபாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

திறமையற்ற தலைவர்கள், வாரிசு அரசியல் மற்றும் நிறைவேறாத வாக்குறுதிகளால் தங்கள் எதிர்காலம் திருடப்படுவதாக உணரும் இன்றைய தலைமுறைக்கு, ஊழல் நிறைந்த அதிகாரிகளுக்கு எதிராகப் போராடி வீழ்த்தும் லுஃபி, தங்கள் விடுதலைக்கான உண்மையான ஹீரோவாக உருவெடுத்துள்ளான்.

ஒரு கலாச்சாரப் பிரகடனம்

இன்று இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களில் ஒன் பீஸ் கொடியை உயர்த்துவது, வெறுமனே ஒரு ஃபேஷன் ஆகவோ அல்லது அனிமேஷன் மீதான ஆர்வமாகவோ கருத முடியாது. இது, “நாங்கள் அநீதி நடக்கும் இடத்தில் லுஃபி போல அதிகாரத்தை கேள்வி கேட்போம், ஊழல் நிறைந்த அதிகார வர்க்கத்தினரால் எங்கள் எதிர்காலம் திருடப்படுவதை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்ற ஒரு வலுவான அரசியல் மற்றும் கலாச்சாரப் பிரகடனமாகும். Gen Z தலைமுறையினர் தங்கள் உரிமைகளுக்காகப் போராட, தாங்களாகவே ஒரு உலகளாவிய அடையாளத்தை கண்டுபிடித்துள்ளனர்.

முதலாளித்துவத்தின் லாபமும், அனிமேஷன் சந்தையும்

அதே சமயம், முதலளித்துவத்தின் விந்தை என்னவென்றால், அநீதிக்கு எதிரான இந்த உணர்வுகளையும் அது லாபமாக மாற்றுகிறது. “லுஃபி பாலஸ்தீனத்தை விடுவிப்பான்” போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்கள் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு பெரும் லாபம் பார்க்கின்றன. சந்தை பகுப்பாய்வுகள், உலகளாவிய அனிமேஷன் சந்தை 2034 ஆம் ஆண்டில் $895 பில்லியன் டாலர்களைத் (75 லட்சம் கோடி ரூபாய்) தாண்டும் என்று கணித்துள்ளன.

இந்தியாவிலும் அனிமேஷன் ஒரு புதிய கலாச்சார அடையாளமாக மாறியுள்ளது. க்ரஞ்ச்ரோல் (Crunchyroll) இந்தியாவைத் தனது இரண்டாவது மிகப்பெரிய சந்தை என்று அறிவித்துள்ளது, மேலும் cosplay நிகழ்வுகள், அனிமேஷன் மீதான இளைஞர்களின் ஆழ்ந்த ஈடுபாட்டை உறுதி செய்கிறது.

Gen Z-க்கு, அனிமேஷன் என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பின் கலாசாரக் குறியீடு. அனிமேஷன் கதாபாத்திரங்கள் கற்றுக்கொடுக்கும் மதிப்புகளைக் கொண்டே, அவர்கள் தங்கள் நிஜ உலகப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறார்கள். இந்தப் போராட்டங்களின் நாயகன், தேசியக் கொடிக்கு இணையாக ஒரு அனிமேஷன் கொடியை உயர்த்தி, அநீதிக்கு எதிரான இளைஞர் சக்தியை உலகிற்குப் பிரகடனம் செய்கிறான்.

பிருத்விராஜ்

Related Posts

error: Content is protected !!