32°C
விளம்பரம்
Advertisement

ஜி.டி.என். – விமர்சனம்!

admin Published: August 7, 2026 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


முறையான பட்டப்படிப்புகள் இல்லையென்றாலும், தன்முயற்சி, தேடல் மற்றும் ஓயாத உழைப்பினால் நூற்றுக்கும் மேற்பட்ட பயனுள்ள கருவிகளை உருவாக்கியவர் ஜி.டி. நாயுடு. எலெக்ட்ரிக் ரேஸர், தமிழ் டயல் ரேடியோ, ஸ்பிரிங் ஜூஸர், இந்தியாவின் முதல் உள்நாட்டு மின்மோட்டார் என அத்தியாவசியக் கண்டுபிடிப்புகளைத் தந்த இவரை ‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றுவதுண்டு. இத்தகைய மாமனிதரின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் திரைப்படமாக இது உருவெடுத்துள்ளது.
நாயுடுவின் அறிவியல் சாதனைப் பயணத்தைக் காட்டுவதைக் காட்டிலும், அவரது அசுர வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனிதர்கள் அவருக்கு எதிராகப் பின்னிய சூழ்ச்சிகளையே படம் அதிகம் பேசுகிறது. ஒரு வரலாற்றுப் பதிவை ஆவணப்படத் தன்மையில் கொண்டு செல்லாமல், கமர்சியல் சுவாரஸ்யங்களுடன் தந்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார். இன்றைய தலைமுறையினர் நிச்சயம் திரையரங்கில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுப் பதிவு இது.
படக் கதை
ஜி.டி. நாயுடுவின் வரலாற்றைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்த விவாதத்துடன் தொடங்கும் படம், உடனடியாக கோவையின் ஆரம்பக்கால சூழலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. உணவகத்தில் மேசை துடைக்கும் சாதாரண பணியில் தொடங்கி, பிரிட்டிஷ்காரர் ஹென்றியிடமிருந்து மோட்டார் சைக்கிளை வாங்கிப் பிரித்துப் பார்க்கும் ஆர்வம், விவசாயிகளுக்கு உதவியாக எளிய கருவிகளை உருவாக்குவது என அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கிறது நாயுடுவின் பயணம்.
ஒரு சூழலில் சொத்துகளை இழக்க நேரிட்டாலும், தளராத நம்பிக்கையுடன் ஒரு பேருந்தை வாங்கி, அதை வைத்துப் பெரும் மோட்டார் சாம்ராஜ்யத்தையே உருவாக்குகிறார். வெளிநாடுகள் வரை தனது தொழிலை விரிவுபடுத்தும் வேளையில், அவரது வளர்ச்சியைச் சகிக்க முடியாத ஆங்கிலேய அதிகாரி ஒருவர், நாயுடுவின் பெயரைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறார். அவரைச் சிக்க வைக்க வருமான வரித்துறை அதிகாரியான ஜெயராம் களமிறக்கப்படுகிறார். இந்த வலையிலிருந்து நாயுடு மீண்டாரா, உலகமே வியந்த அந்த சாதனையாளரின் வெற்றிப் பயணம் என்ன ஆனது என்பதை நோக்கி நகர்கிறது மீதிக்கதை.
https://www.youtube.com/watch?v=SRr96X-SwX4
நடிப்பு 
ஜி.டி. நாயுடுவின் இளமை மற்றும் முதுமை என இருவேறு காலகட்டங்களிலும் மாதவன் தனது கம்பீரமான தோற்றத்தாலும் ஸ்டைலான நடிப்பாலும் கதாபாத்திரத்திற்கு உயிர்காட்டியுள்ளார். இனி ஜி.டி. நாயுடு என்றாலே மாதவனின் உருவமும்  நினைவிற்கும் வரும்.
வருமான வரித்துறை அதிகாரியான அம்பலவானா கிருஷ்ணன் வேடத்தில் ஜெயராம் மிரட்டியுள்ளார். இதுவரை நகைச்சுவை பாத்திரங்களில் பார்த்த அவரை, இதில் கோபமும் வில்லத்தனமும் நிறைந்த நேர்மையான அதிகாரியாகப் பார்ப்பது புதுமையாகவும் பாராட்டும் படியும் உள்ளது.
நாயுடுவின் தோழர் சிதம்பரம் பிள்ளையாக வரும் சத்யராஜின் நடிப்பு படத்திற்குப் பெரிய பலம். துஷாரா விஜயன், பிரியா மணி, அதிதி பாலன், வினய், தம்பி ராமையா உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களும் தங்களுக்குரிய பாத்திரங்களை நிறைவாகச் செய்துள்ளனர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்  
ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன் காலக்கட்டத்தை அப்பட்டமாகக் கண்முன் நிறுத்துகிறார். ஜெர்மனி பயணம் மற்றும் ஹிட்லரைச் சந்திக்கும் காட்சிகளில் விஎஃப்எக்ஸ் பயன்பாடு சிறப்பு.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் பெரியளவில் மனதில் ஒட்டவில்லை என்றாலும், பின்னணி இசையில் அசாத்திய திறமையைக் காட்டி ‘பலே’ சொல்ல வைத்துவிடுகிறார். பழைய காலத்து ஒலிகளுடன் நவீன இசையைக் கலந்து காட்சிகளின் எமோஷனை BGM மூலமாகவே கடத்தியுள்ளார்.
படத்தொகுப்பாளர்கள் பிஜித் பாலா மற்றும் கே. சசிகுமார் இருவரும் பயோபிக் கதையை தொய்வின்றி நகர்த்தியுள்ளனர். கலை இயக்குநர் சிரில் குருவில்லா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் சம்சுதீன் ஆகியோரின் கடின உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.
மொத்தத்தில் ஒரு தமிழரின் சாதனைப் பயணம், பொறாமை மற்றும் அரசதந்திர தடைகளைத் தாண்டி எப்படி வென்றது என்பதைச் சில பால காட்சி பிழைகள் இருந்தாலும், ஆவணப்படமாக மாற்றாமல் குடும்பத்துடன் பார்க்கும் கமர்சியல் சினிமாவாகத் தந்துள்ளனர்.
மார்க்: 3.25/5

உடனடி செய்திகள்