ஆளுமைகளின் வாழ்த்துகளுடன் சென்னையில் வேர்விடும் ‘நம்பிக்கை’! 🌱
மலேசிய மண்ணில் கடந்த 27 ஆண்டுகளாக நேர்மையான ஊடகப் பணியால் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ குழுமம், இப்போது தனது கிளையைச் சென்னையில் கம்பீரமாகத் தொடங்கியுள்ளது. அரசியலும் சினிமாவும் கைகோர்த்த இந்த விழாவில், ஒரு புதிய ஊடகத்தின் வருகை தமிழகச் சூழலில் எவ்வளவு முக்கியமானது என்பதைப் பல ஆளுமைகள் சுட்டிக்காட்டினர்.
அரசியல் ஆளுமைகளின் ‘நம்பிக்கை’:
விழாவில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “இன்றைய ஊடகங்கள் பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் பிடியில் இருக்கும் சூழலில், ஒரு பெரும் வெளிச்சமாக இந்த ‘நம்பிக்கை’யைப் பார்க்கிறேன். இது தேர்தல் காலத்தில் நேர்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்” எனத் தனது உள்ளன்போடு வாழ்த்தினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, “சமூக வலைதள யுகத்தில் உண்மைத்தன்மை குறைந்து வருகிறது. முதலில் முட்டாள்களைக் கவரும் ஊடகங்கள், பின்பு புத்திசாலிகளை வாயடைக்கச் செய்துவிடும். அப்படி இல்லாமல், தவறு யார் செய்திருந்தாலும் அதைத் தைரியமாகச் சுட்டிக்காட்டுங்கள். ‘உள்ளது உள்ளபடி’ சொல்லுங்கள்” என ஊடகத் தர்மத்தை நினைவூட்டி வாழ்த்தினார்.
திரைத்துறையினரின் வாழ்த்து:
பத்திரிகைத் துறையோடு தனக்கிருக்கும் பூர்வீகத் தொடர்பை நினைவு கூர்ந்த நடிகர் சரத்குமார், “உண்மைகள் மட்டுமே பேசப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்தப் பயணம் தொடர வேண்டும்” என்றார். நடிகை ராதிகா சரத்குமார், “பத்திரிகை என்பது வெறும் பரபரப்பு செய்திகளைத் தருவது மட்டுமல்ல, பொறுப்புணர்வோடு செயல்படுவதே தர்மம்” என வாழ்த்தினார்.
நடிகர் நாசர் பேசும்போது ஒரு முக்கியமான ஆதங்கத்தைப் பதிவு செய்தார். “பரபரப்புக்காகச் செய்திகள் திரிக்கப்படுவதால் நான் செய்திகள் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். ஆனால், இந்த ‘நம்பிக்கை’ என்னை மீண்டும் செய்திகள் பார்க்க வைக்கும் என நம்புகிறேன். சினிமா துறையில் நல்ல படங்கள் திரித்துக் கூறப்பட்டு காணாமல் போவதைத் தடுக்க உண்மையான செய்திகள் தேவை” என்றார்.


