கிண்டி முதல் ராஷ்டிரபதி பவன் வரை: கோப்புகளின் ‘உறக்க நேரம்’ தொடர்கிறது! – சட்டமன்ற முடிவுகளுக்கு மரியாதை எங்கே?
இந்திய ஜனநாயகத்தின் தூண்களான நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்கள், சட்டம் ஆவதற்கான இறுதி அங்கீகாரத்திற்காகக் குடியரசுத் தலைவருக்கும் (மத்தியில்), ஆளுநர்களுக்கும் (மாநிலங்களில்) அனுப்பப்படுகின்றன. நமது அரசியலமைப்புச் சட்டம், இந்த உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் எவ்வளவு விரைவில் முடியுமோ (as soon as possible) அவ்வளவு விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று மட்டுமே கூறியது. இதற்குக் காரணம், அரசியலமைப்பை உருவாக்கிய முன்னோடிகள், அப்பதவிகளை அடைபவர்கள் கட்சி அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவர்களாகவும், நாட்டு நலனில் மட்டுமே அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்று ஆழமாக நம்பினார்கள்.
ஆனால், அந்த உன்னதமான நம்பிக்கை, இன்று காலாவதியாகி, “குழுதை தேய்ந்து கட்டெறும்பான” கதையாகிவிட்டது.
😴 ஆளுநர் மாளிகையின் “சுகமான தூக்கம்”
அண்மையில், திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க.) அரசு, தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய முக்கியச் சட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் ‘சுகமாகத் தூங்க’த் தொடங்கின. ஆளுநர் அவற்றின் செயல்பாடு குறித்து எந்த முடிவும் எடுக்காமல், காலவரையின்றி அவற்றைக் கிடப்பில் போட்டு, அவற்றின்மீது ‘வெண்சாமரம் வீசினார்’. இதை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியது.
விசாரணை நடத்திய இரு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு, கடந்த ஏப்ரல் மாதம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது: “ஆளுநர்கள் மசோதாக்களை இஷ்டம்போல் தூங்கப்போட முடியாது; மூன்று மாதங்கள்தான் காலக்கெடு!” என்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு வந்த பிறகுதான் கிண்டி மாளிகையில் கோப்புகள் மின்னல் வேகமெடுத்தன. தமிழக அரசு மட்டுமல்ல, தமிழக மக்களும் இதன் மூலம் ஓர் ஆறுதல் அடைந்தனர்.

❓ குடியரசுத் தலைவரின் 14 சந்தேகங்கள்
ஆனால், யார் கண் பட்டதோ? இரண்டு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு வழங்கிய அத்தீர்ப்பில், அன்றைய பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்ட பலத்த சந்தேகம்போல நமது குடியரசுத் தலைவருக்கும் வந்துவிட்டது. அதுவும் ஒன்றல்ல, மொத்தம் பதினான்கு சந்தேகங்கள்!
அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள், நம்பிக்கை என்னும் ஒற்றை இழையைக்கொண்டு அரசியல் மாண்புகளைப் பிணைத்திருந்தனர். ஆனால், இன்று அந்த மாண்புகள் மிதிபட்டுக் கிடக்கின்றன.
நம் வள்ளுவன், “இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து” (நோய் கொடுத்த கண்ணே அதற்கு மருந்தாகும்) என்று காதல் நோய்க்குத்தான் சொன்னான். அதேபோல, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு கொடுத்த வலிக்கு, அதே சுப்ரீம் கோர்ட்டால்தானே மருந்தும் தர முடியும்?
⚖️ சுப்ரீம் கோர்ட்டின் இறுதிப் பதில்
அதனால், இரண்டு நீதிபதிகளின் தீர்ப்புக்கு விளக்கம் கேட்டு, 14 கேள்விகளைக் கொண்ட பட்டியலை சுப்ரீம் கோர்ட்டிற்குக் குடியரசுத் தலைவர் அனுப்பி வைத்தார். இதை விசாரித்த ஐந்து நீதிபதிகளடங்கிய அரசியல் சாசன அமர்வு இப்போது பதிலளித்துள்ளது:
“அனுப்பப்படும் மசோதாக்களை நீண்ட நாள்களுக்குக் கிடப்பில் போட முடியாது என்றாலும், அதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது!” என்று பதிலளித்துள்ளது.
அரசியல் சட்டங்களையும் அவற்றின் மாண்புகளையும் கணக்கில் கொண்டே இந்தப் பதில்களை வழங்கியிருக்கிறது என்பதில் நமக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.
❓ எப்போது கணக்கில் கொள்ளப் போகிறது?
என்றாலும், ஒரு சாமானியனாக நமக்குள்ள சந்தேகம் ஒன்றே ஒன்றுதான்:
சுப்ரீம் கோர்ட் எதிர்பார்க்கும் ‘அரசியல் மாண்புகளெல்லாம்’ நமது இன்றைய சாக்கடையான அரசியலில் விழுந்து மிதிபட்டுக் கொண்டிருக்கும் இந்த யதார்த்தத்தை, சுப்ரீம் கோர்ட் எப்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப் போகிறது என்பதுதான்.
மாண்புகளைச் சட்டத்தின் கண்களால் மட்டும் பார்க்காமல், சமகால அரசியலின் இழிந்த நடைமுறைகளையும் கணக்கில் கொண்டு, மக்களின் நலனுக்காக ஒரு இறுக்கமான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டிய அவசியத்தை உணரும் நாள் எப்போது வரும்?
இதைத்தான் இந்தியக் குடிமகனாகிய நாம், சுப்ரீம் கோர்ட்டிடம் மண்டியிட்டு வணங்கிக் கேட்கிறோம்!


