தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு கடல் கடந்து தேடி வந்த ‘தங்க’ கௌரவம்!

தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு கடல் கடந்து தேடி வந்த ‘தங்க’ கௌரவம்!

“குணம் என்னும் குன்றேறி நின்றார்” என்பதற்கு இலக்கணமாகத் திகழும் சென்னைத் தூய்மைப் பணியாளர் பத்மா அவர்களின் நேர்மை, இன்று சர்வதேச எல்லையைத் தாண்டி மலேசியாவையும் எட்டியுள்ளது. சாலையில் கண்டெடுத்த 45 சவரன் நகையைத் துளியும் ஆசையின்றி ஒப்படைத்த அந்தப் பெருந்தன்மைக்கு, இப்போது மலேசிய அமைச்சரின் கௌரவம் பரிசாகக் கிடைத்துள்ளது.

நடந்தது என்ன?

கடந்த ஜனவரி 11-ம் தேதி, தி.நகரின் பரபரப்பான சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பத்மா, கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பையைக் கண்டெடுத்தார். உள்ளே 45 சவரன் தங்க நகைகள்! அன்றாடப் பிழைப்புக்கே போராடும் சூழலிலும், அடுத்தவர் சொத்து நமக்கு வேண்டாம் என்ற உயரிய எண்ணத்துடன் உடனடியாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த நகைகள் உரியவரிடம் சேர்க்கப்பட்டபோது, ஒட்டுமொத்தத் தமிழகமும் பத்மாவைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது.

குவிந்த பாராட்டுகள்

பத்மாவின் இந்த ஈடுஇணையற்ற நேர்மையைக் கண்டு:

  • தமிழக முதல்வர் . மு.க. ஸ்டாலின் ள் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டியதுடன், அவரது நேர்மைக்கு அங்கீகாரமாக ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

  • சென்னை மத்திய கோட்டத்தில் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் மை ஸ்டாம்பில் பத்மாவின் புகைப்படத்துடன் சில தினங்களுக்கு முன் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பத்மாவைத் தனது இல்லத்திற்கே வரவழைத்து, அவருக்குத் தங்கச் சங்கிலி அணிவித்து, “நிஜமான சூப்பர் ஸ்டார் இவர்தான்” என நெகிழ்ந்தார்.

மலேசிய அமைச்சரின் நெகிழ்ச்சி

தற்போது இந்தத் தீரம் கடல் தாண்டி மலேசியாவையும் சென்றடைந்துள்ளது. மலேசிய சட்டத்துறை துணை அமைச்சரான திரு. மு. குலசேகரன் அவர்கள், பத்மாவின் செயல் குறித்துக் கேள்விப்பட்டு வியந்து போயுள்ளார்.

தன் சார்பாகத் தனது உதவி அதிகாரி வடிவுக்கரசி அவர்களைச் சென்னைக்கு அனுப்பி வைத்து, பத்மா பணி செய்யும் இடத்திற்கே சென்று அவருக்கு தங்க மோதிரம் அணிவித்து கௌரவிக்கச் செய்தார். அதுமட்டுமின்றி, மலேசியாவிலிருந்து வீடியோ கால் மூலம் பத்மாவிடம் பேசிய அமைச்சர், “உங்கள் நேர்மை உலகிற்கே ஒரு பாடம்” என நெஞ்சார வாழ்த்தினார்.

மவுசு

வறுமையிலும் நேர்மை மாறாத பத்மா போன்றவர்கள் தான் இந்தச் சமூகத்தின் அச்சாணிகள். அவர் சுத்தம் செய்வது தெருக்களை மட்டுமல்ல, மனிதர்களின் மனங்களையும் தான்! ஒரு சாதாரணத் தூய்மைப் பணியாளரின் நேர்மையைக் கௌரவிக்க மலேசிய அமைச்சரே தேடி வந்தது, “நேர்மைக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு” என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

Related Posts