கார்கில் பகுதியில் முதல் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையம்!

கார்கில் பகுதியில் முதல் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையம்!

370 வது சட்டப்பிரிவின் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை, கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து, காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி நான்காண்டுகள் ஆன நிலையில் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் பகுதியில் முதல் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்படத் தொடங்கி உள்ளது..!

லடாக் உலகின் குளிர்ந்த பாலைவனங்களில் ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இது சாகச விளையாட்டுகளின் புகலிடமாகும். அதன் கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் ஓடும் ஆறுகள் மலையேற்றம், ரிவர் ராஃப்டிங், கேம்பிங், மலை ஏறுதல் மற்றும் பைக்கிங் போன்ற செயல்களுக்கு பழுத்த வாய்ப்புகளை வழங்குகிறது. குளிர்கால மாதங்கள் நெருங்கும்போது, ​​யூனியன் பிரதேசம் பனியால் சூழப்பட்டுள்ளது, இது குளிர்கால விளையாட்டுகளுக்கான சொர்க்க அமைப்பாக அமைகிறது. இந்த லடாக் யூனியன் பிரதேசத்தில் லே-வுக்கு அடுத்தபடியாக உள்ள மிகப் பெரிய நகரம் கார்கில்.

உலக வரலாற்றில் இடம் பிடித்துள்ள கார்கில் மாவட்டத்தில் மகளிர் காவல் நிலையம் இதுவரை இல்லாமல் இருந்தது. கார்கில் போர் வெற்றி தினத்தின் 24-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கார்கில் பகுதியில் முதல் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தை ஏடிஜிபி சிங் ஜாம்வல் தொடங்கி வைத்தார்.

அதன்பின் அவர் அளித்த பேட்டியில், ‘‘பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது முக்கியமான நடவடிக்கை. இந்த காவல் நிலையம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும். 24 மணி நேரமும் செயல்படும். இந்த காவல் நிலையம் பெண்களுக்கு தேவையான உதவியையும், ஆதரவையும் அளிக்கும். மேலும், சவாலான சூழ்நிலைகளை சந்திக்கும் பெண்களுக்கு இது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்கும் மையமாகவும் செயல்படும்’’ என்றார்.

Related Posts