கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு புதிய கடன் உத்தரவாதம் அறிவிப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு புதிய கடன் உத்தரவாதம் அறிவிப்பு!

டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர், சுகாதாரத்துறை உட்கட்டமைப்புக்கு மட்டும் 50 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதம் தரப்படும் என்றும் தொழில்துறையினருக்கு அவசர கால கடனுதவியாக 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இன்று மதியம் டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளை மீட்டெடுக்க 8 வகையான பொருளாதார திட்டங்களை அவர்கள் அறிவித்தனர். இதில், ஏற்கனவே உள்ள 4 திட்டங்கள் கூடுதல் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் எனவும், சுகாதாரத்துறைக்கு தனியாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. நலிவடைந்த துறைகளை மீட்க ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவித் திட்டம். சுகாதாரத்துறைக்கு மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய திட்டத்தின் மூலம், சிறு வியாபாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், சிறிய நிதி நிறுவனங்கள் மூலம், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படவுள்ளது.

இந்த சிறிய கடன் உதவி திட்டங்களின் மூலம் 25 லட்சம் பேர் பயனடையவுள்ளனர். ஊரடங்கால், சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய நிதி அமைச்சர், சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கிய பின்னர், வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு வரும், முதல் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் விசா கட்டணம் செலுத்ததேவையில்லை என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்த ஆண்டு ஏழை மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய 3 ஆயிரத்து 869 கோடி ரூபாய் நிதி செலவிடப்படும் என நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான திட்டமாக, புரத அடிப்படையிலான உரங்களுக்கான மானியமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் அனுராக் தாக்கூர் கூறினார்.

error: Content is protected !!