தகவல் திருட்டு! ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்-கிடம் 5 மணி நேரம் விசாரணை!

தகவல் திருட்டு! ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்-கிடம் 5 மணி நேரம் விசாரணை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த ஃபேஸ்புக் தகவல்கள் வெளியானதற்கு அதன் நிறுவனரான நானே முழுப்பொறுப்பு ஏற்று, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்  ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வாஷிங்டனில் இருக்கும் அமெரிக்க பார்லிமென்ட் செனட் சபை, மக்கள் பிரதிநிதிகள் சபை முன் மார்க் இன்று ஆஜராகி ஐந்து மணி நேரம் சாட்சியம் அளித்தார்.

சமூக வலைத்தளங்களி டாப் நிலையில் இருக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்தினால் சமீபத்தில் ஏற்பட்ட குழப்பம் மோடி ஆப் வரை சென்றுள்ளது. அதிலும் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக பகிரங்கமான குற்றச்சாட்டு வெடித்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்த குழுவின் முன்னர் இன்றும் நாளையும் (ஏப்ரல் 10,11) பேஸ்புக் தலைமை செயல் இயக்குனர் மார்க் ஜுக்கர்பக் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கிறார்.

இதற்கிடையில், நேற்று சில பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த மார்க்  ஜூக்கர்பர்க் விசாரணை குழுவினரிடம் எழுத்து மூலமாக தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அவரது வாக்குமூலம் பத்திரிகைகளுக்காக வெளியிடப்பட்டது.

அதில் கல்லூரி பருவத்தில் நான் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை தொடங்கினேன். நான்தான் அதை நடத்துகிறேன். சுமார் 200 கோடி மக்கள் தங்களுக்கு மிகவும் வேண்டியவர்களுடன் தங்களது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர். இங்கு எது நடந்தாலும் அதற்கு நான்தான் பொறுப்பேற்றாக வேண்டும். பொய் செய்திகள், தேர்தல்களில் பிறநாடுகளின் தலையீடு, வெறுப்புணர்வை தூண்டும் கருத்துகள் போன்ற தீமைகளும் எங்களது சமூக வலைத் தளத்தில் பரவுவதை தடுக்கும் வகையில் போதுமான தற்காப்பு நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கவில்லை என்பது தற்போது தெளிவாக புரிகிறது. எங்களது பொறுப்புகளை நிறைவேற்றுவது தொடர்பாக அகன்ற தொலைநோக்குப் பார்வையை செலுத்தாமல் போனது மிகப்பெரிய தவறு. அது என்னுடைய தவறு. இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்ததாக அந்த பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இதையடுத்து நேரில் ஆஜரான போது ஐந்து மணி நேர விசாரணையின் போது மேற்படி தகவல்களுடன், “கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எங்களுக்குப் பாடத்தை கற்றுத் தந்துள்ளது. தகவல் திருட்டு மற்றும் வெளிநாட்டுத் தேர்தல்களில் தலையீடு உள்ளிட்டவை ஃபேஸ்புக் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய பிரச்னை. இதனால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மில்லியன் கணக்கான தனிநபர்களின் தகவல்கள் அப்ளிகேஷன் டெவலப்பர்களிடம் இருந்து கேம்பிரிட்ஜ் அனாலிடிகா வாங்கியுள்ளது. இந்தத் தவறுகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்துக்கு பின் எங்களின் முதல்வேலையே உலக நாடுகளின் தேர்தல்களுடைய நேர்மையை காக்க வேண்டும் என்பதே. அந்தவகையில், இந்தியாவில் நடக்கவிருக்கும் தேர்தல்களின் நேர்மையை காப்போம் என உறுதியளிக்கிறோம்” என்றார்