சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் காலமானார்!

சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் காலமானார்!

த்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் முலாயம் சிங் யாதவ். இவர் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், குருகிராம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி மறைந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வயது 82. முலாயம் சிங் யாதவின் மறைவிற்கு கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக முலாயம் சிங் யாதவ் திகழ்ந்து வந்தார். 28 வயதில் எம்.எல்.ஏவாக அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜஸ்வந்த் நகர் தொகுதியில் 7 முறை எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி மெயின்பூரி, சாம்பால், கன்னவுஜ், ஆசம்கார் ஆகிய மக்களவை தொகுதிகளில் வென்று எம்.பியாகவும் பதவி வகித்துள்ளார்.

1989-91, 1993-95, 2003-2007 என மூன்று முறை உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர். ஆனால் ஒருமுறை கூட தனது ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்தது இல்லை. 2012 இல் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்த நிலையில், மகன் அகிலேஷ் யாதவை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்தார். 1996-98 காலகட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்தார்.

1992 இல் சமாஜ்வாதி என்ற அரசியல் கட்சியை தொடங்கி தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் அளவிற்கு வளர்த்தெடுத்தார். இவரது குடும்பத்தில் ராம்கோபால் யாதவ், சகோதரர் ஷிவ்பால் யாதவ், மகன் அகிலேஷ் யாதவ், தர்மேந்திர யாதவ், அக்‌ஷயா யாதவ், மருமகள் டிம்பிள் யாதவ், தேஜ் பிரதாப் சிங் யாதவ் ஆகியோர் அரசியலில் இருக்கின்றனர்.

ஒருகட்டத்தில் முலாயம் சிங் யாதவின் சகோதரர் ஷிவ்பால் யாதவ் மற்றும் மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு இடையில் கட்சியை வழிநடத்துவது தொடர்பாக சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் முலாயம் சிங் யாதவிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இறுதியில் தனக்கு பின்னர் மகன் அகிலேஷ் யாதவ் என்று கூறி கட்சியை அவரது கையில் ஒப்படைத்துவிட்டார். தற்போது சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் பதவி வகித்து வருகிறார்

error: Content is protected !!