ஆண்டவனால் கூட காப்பாற்றமுடியாது!

இது நாள் வரை நாம் அதிகம் பேசாத ஒரு கட்சி. கடலூர் வெள்ளத்தின் பொழுது, ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி என நாம் கடுமையாக எதிர்த்த ஒரு கட்சி. தேர்தலுக்கு முன் எடப்பாடி மேல் மக்களுக்கு அதிக கோவமில்லை. திமுக ஜெயிக்க ஒரு முக்கிய காரணம் பி.ஜே பி எதிர்ப்பு மட்டுமே. பணம்தான் எல்லா அரசியலையும் தீர்மானிக்கிறது. இன்று தாமரை கொடி உள்ள இன்னோவக்களை சில சின்ன ஊர்களில் கூட கவனித்தேன். தாமரை ஊடுருவ முக்கிய ஒரு காரணம் அதிமுக என்பதில் பலருக்கு மாற்றுக்கருத்து இருக்காது.
அதிமுக ஆதரவாளர்களை பதவி கொடுத்து பிஜேபி அழைப்பதும் நிஜம். கவனித்து பார்த்தால் அ.தி.மு.க, தி.மு.க இரண்டிலும் புதியவர்களுக்கு ( வாரிசாக இல்லாவிடில் ) வாய்ப்பே கிடையாது. யாரும் சும்மா அரசியல் ஆதரவாளர்களாக இருக்க விரும்புவதில்லை. ஒரு சின்ன பதவியாவது எதிர்பார்க்கிறார்கள்.. அதற்கு தீனி போட மத்திய் கட்சிகள் தயார் ஆனாலும் பி.ஜே.பி யில் மட்டும் இன்று வாய்ப்பு. யார் செல்வார்கள் எனில் பெரும்பாலும் அதிமுக ஆதரவாளர்கள் மட்டுமே. எனவே தன் கட்சியை நீர்க்க வைக்கும் ஒரு கட்சியை எங்கே வைக்க வேண்டுமோ அங்குதான் வைக்க வேண்டும். அதை உணர்ந்துதான் ஒற்றை தலைமை சிக்கல் வந்திருக்கும்.
அதை திமுக வேடிக்கை பார்ப்பதில் அர்த்தம் இருக்கு..அவர்களும் இன்று வரை எடப்பாடி எதிர்த்துதான் அரசியல் செய்தார்கள். அண்ணாமலைக்கு எதிராக சி.எம் சமிப்த்தில் சொன்ன I dont care தான் பதில் .ஏன் எனில் எதிர்த்தால் வளர்வார்கள் என நன்றாக புரிந்தே நிலைப்பாடு. அதுவும் இல்லாமல் சீண்டி, சீண்டி எதிர்க்க வைத்து வளர்வது பி ஜே.பி யின் ஸ்டைல் அதை ஆளும் கட்சி நன்றாகவே புரிந்து வைத்துள்ளது.
இனவாதம், இன வெறுப்பு என்பது பணம் தாண்டிய உணர்வு அரசியல். அதற்கு எதிராக திராவிட உணர்வு அரசியல் என இருவரும் போர்களத்தில் தயாராக உள்ளனர். இப்படி ஏதும் அதிமுக விடம் இல்லை. ஆனால் இடம் இருக்கு. இர்ண்டுமே தவறு என pluralism/ பன்முகத்தன்மை கையில் எடுக்கலாம். இதே சமயத்தில் அதிமுக நீர்த்து போவதில் காங்கிரசுக்கும் நன்மை உள்ளது இரண்டுமே அரசியலில் மிதவாத போக்கை கடைப்பிடிக்கும் கட்சிகள். தமிழகத்தில் மிதவாதிகள் மிக அதிகம். அவர்களுக்கு புகலிடமாக காங்கிரஸ் மாறும்.
இந்த சமயத்தில் அதிமுக வை பலப்படுத்துவது அவர்களுக்கு நல்லது நமக்கு ஏன் சிக்கல்? ஏன் எனில் மிதவாத கட்சிகள் நீர்த்து போவது, பிராந்திய கட்சிகள் நீர்த்து போவது நல்லதில்லை. ஓரமாய் போய் அடித்துக்கொண்டு வெகுவிரைவில் ஒற்றைத்தலைமை நிலைப்பாடு எடுத்து காட்டமான அரசியலில் ஈடுபடுவது நல்லது. திமுகவிற்கு அதிமுக நீர்த்து போவதில் ஒரு கெடுதல், ஒரு நன்மை இருக்கு. கெடுதல் அதிகாரத்தில் உள்ள பலமான எதிரி தமிழகத்தில் உருவாகும். நல்லதும் அதேதான். பலமான எதிரி உருவாவதில் ஒரு நன்மை நாமும் வளருவோம். எதிர்ப்பு அரசியல் வளர்ச்சிதானே. அதனால்தான் பேசாமல் இருக்கலாம்.
ஆக மொத்தம் அதிமுக வீழ்ச்சியை காட்டில் முன்பு ஆட்சியில் இருந்த சிங்கம் அடிப்பட்டு இருப்பதை வேடிக்கை பார்க்கும் பல விலங்குகள் போல்தான் எல்லா கட்சிகளும் கவனிக்கின்றன. தனக்கு சாதகமான சிலவற்றை உட்கட்சி அரசியலில் செய்துவிட்டு ஒதுங்குகின்றன. அதிமுக நீர்த்து போவதில் ஒரு கட்சிக்குதான் பெரும் லாபம்..எனவே அவர்களும் உள் புகுந்து பல செயல்களில் இறங்கலாம் .இருப்பினும் பணநாயக நம்பிக்கையை ஒரு தலைவர் பெற்று இருப்பதாய் தெரிகிறது.
ஆக மொத்தம் பணம்தான் வெல்லும் எனினும் உணர்வு அரசியலுக்கு பலியான பலர் வெறியோடு இருக்கிறார்கள். அவர்கள் கையில் அதிகாரம், பணம் இரண்டும் வருவது இன்னும் அவர்களை தூண்டுகிறது. எப்பொழுதையும் விட அதிமுகவினர் தங்கள் தலைமையை வலுபடுத்த வேண்டும்.
செய்வது அதிமுகவிற்கு நல்லதாய் இருக்கட்டும்..எதிர் / பக்க பாசறைக்கு ஆதரவாய் இருப்பின்..ரஜினி அன்று சொன்னதுதான் .
ஆண்டவனால் கூட காப்பாற்றமுடியாது.