எறும்பு – விமர்சனம்!

எறும்பு – விமர்சனம்!

சில படங்கள் டாப் ஹீரோக்கள் நடிப்பதால் பிடிக்கும்.. சில படங்கள் நல்ல டைரக்டர்கள் இயக்கியதால் பிடிக்கும்.. சில படங்கள் பிரமாண்ட பட்ஜெட் காரணமாகப் பிடிக்கும்.. அது போல் மிகக் குறைந்த பட்ஜெட்டில் சில படங்கள் பலருக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி இருக்கும்.. அப்படி ஒரு படமே ‘ எறும்பு’ .மிகச் சாதாரண கருவுக்கு, முடிந்த அளவு திறமையாக திரைக்கதை அமைத்து பக்கா சிறுகதையை ஒன்றை படித்த ஃபீங்கைக் கொடுத்து அசத்த முற்பட்டுள்ளார்கள்..!

அதாவது ஒரு கிராமத்தில் விவசாய கூலியான அண்ணா துரை (சார்லி). வட்டிக்கு கடன் வாங்கி, கடன் வாங்கியவரிடம்(எம்.எச். பாஸ்கர்) அவமானப்படுத்தப்படுகிறார் இவரின் மறைந்த முதல் மனைவிக்கு ஒரு மகள் (மோனிகா) ஒரு மகன் (மாஸ்டர் சக்தி ரித்விக்) இருக்கிறார்கள். கடன் பிரச்சனை தீர தனது இரண்டாவது மனைவியுடன் கூலி வேலைக்கு செல்கிறார். இந்த நேரத்தில் இவரது மகன் ரித்விக் கைக்குக் கிடைத்த தங்க மோதிரத்தை தொலைத்து விட, சிறுவர்களான மகனும் மகளும் சித்தி அடிக்கு பயந்து மீண்டும் மோதிரம் வாங்க பல சிறு சிறு வேலைகள் செய்து பணம் சேகரிக்கிறார்கள். இருந்தாலும் மோதிரம் வாங்கும் அளவுக்கு பணம் சேரவில்லை. இச்சூழலில் வேலைக்கு சென்ற இடத்தில் கிடைத்த பணத்தை வைத்து கடனை அடைக்க முடியாது என்பதால், வேறு வழியில் பணம் புரட்டும் முயற்சியில் ஈடுபடும் சார்லி, வீட்டில் இருந்த தங்க மோதிரத்தை அடகு வைக்க முடிவு செய்கிறார். அதே சமயம் மோதிரம் வாங்கும் அளவுக்கு பணம் சேர்க்க முடியாமல் சிறுவர்கள் தடுமாறுகிறார்கள். இறுதியில் நடக்கும் விஷயங்களே ‘எறும்பு’.

மெயின் கேரக்டர்களாக வரும் சிறுமி மோனிகாவும், சிறுவன் சக்தி ரித்விக்கும் அடடே சொல்ல வைத்து விட்டார்கள். ஒரு குக்கிராமத்தில் வாழும் நிஜ அக்கா, தம்பி போலவே படம் முழுவதும் வலம் வந்து கவர்கிறார்கள்.. குறிப்பாக சிறுமி மோனிகா, இறந்த தனது தாயை நினைத்து, செயல்படாத போனில் “அம்மா…அம்மா…” என்று சொல்லி அழும் காட்சியில் நம்மை கண்கலங்க வைத்துவிடுகிறார். அதேபோல், தனது தம்பி பயப்படும் போதெல்லாம் ஆறுதல் சொல்லி அவனை தேற்றி அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சிகள், அன்னையாக இருந்து சகோதர, சகோதரிகளை வளர்க்கும் அக்காக்களை நிச்சயம் நினைவுப்படுத்தும்.

விவசாய கூலியாக நடித்திருக்கும் சார்லி, தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். விவசாயிகளின் அவல நிலையை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கும் சார்லி, அவர்களுடைய நம்பிக்கை மற்றும் விடா முயற்சியையும் தனது நடிப்பு மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார் அனுபவ நடிகரான ஜார்ஜ் மரியன், சிட்டு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.. அதிலும், படத்தின் பிற்பாதி காட்சிகள் அனைத்திலும் கண்கலங்க வைக்கும் காட்சிகளில் கைதட்டல் பெறும் அளவிற்கு நன்றாகவே நடித்திருக்கிறார்.

சித்தி கேரக்டரில் சூசன் பொருத்தமாக இருந்தார். வட்டி தொழில் செய்யும் வில்லன் கதாபாத்திரமாக எம் எஸ் பாஸ்கர் வாழ்ந்து இருந்தார்… இவரின் உடல் மொழியும் பேச்சு மொழியும் கதாபாத்திராத்திற்கு நச் என பொருந்தியிருந்தது. பாட்டி பறவை சுந்தரம்பாள், கங்கானியாக நடித்திருக்கும் ஜெகன் ஆகியோரும் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

கேமராமேன் கே.எஸ்.காளிதாஸ் எளிமையான கிராமத்தை மிக அழகாக காட்டியிருப்பதோடு, அந்த கிராமத்தில் நம்மையும் பயணிக்க வைக்கும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். அருண் ராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாகவும், கதையோடு பயணிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. பின்னணி இசை சிறுவர்களின் நடிப்பை போல் இயல்பாகவும், மென்மையாகவும் பயணிக்கிறது.

சிறுவர்களை மையப்படுத்திய கதையாக இருந்தாலும், அதில் தேசிய அளவிலான விவசாயிகளின் பிரச்சைனைகள், கிராமத்து மனிதர்களின் இயல்பான வாழ்க்கை, சிறுவர்களின் விடுமுறை கொண்டாட்டங்கள் என பல விஷயங்களையும் தேவையான அளவு கோர்த்து காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் சுரேஷ்.ஜி, கையில் மெகா பட்ஜெட் வந்தால் தூள் கிளப்புவார் என்பது நிஜம்

error: Content is protected !!