இன்ஜினீயரிங் கலந்தாய்வு நிறைவு:72% இடங்கள் நிரம்பின!

இன்ஜினீயரிங் கலந்தாய்வு நிறைவு:72% இடங்கள் நிரம்பின!

ன்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு அனைத்தும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில், நடப்பாண்டில் 72 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.

2024-–25-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 433 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 79 ஆயிரத்து 950 காலி இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி தொடங்கியது.முதலில் சிறப்பு பிரிவு மாணவ-–மாணவிகளுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்தது. இதில் 836 பேர் இடங்களை தேர்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பொது கலந்தாய்வு மற்றும் அரசு பள்ளி மாணவ-–மாணவிகளுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு பிரிவு கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி தொடங்கியது. 3 சுற்றுகளாக கலந்தாய்வு கடந்த 4-ந் தேதியுடன் நடந்து முடிந்தது. 3 சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றதும், அதனைத் தொடர்ந்து துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அவர்களுக்கும் கடந்த 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடந்தது. அதன் தொடர்ச்சியாக எஸ்.சிஏ பிரிவில் இருந்து எஸ்.சி. பிரிவுக்கான கலந்தாய்வு கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடத்தப்பட்டது.

இப்படியாக நடப்பாண்டுக்கான இன்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வு நிறைவு பெற்று இருக்கிறது. நடப்பாண்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 950 இடங்கள் காலியாக இருந்த நிலையில், இந்த கலந்தாய்வு மூலம் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 371 இடங்கள் நிரம்பி இருக்கின்றன. இது 72.45 சதவீதம் ஆகும். 49 ஆயிரத்து 579 இடங்கள் நடப்பாண்டில் காலியாக இருக்கின்றன.

கடந்த ஆண்டுகளுடன் மாணவர் சேர்க்கையில் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் அதிகமாகவே இருப்பதையும், அதிலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இன்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருவதையும் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.நடப்பாண்டில் 433 கல்லூரிகளில் 15 கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. 120 கல்லூரிகளில் 90 சதவீதம் இடங்களும், 298 கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கு மேல் இடங்களும், 80 கல்லூரிகளில் 100 இடங்களுக்கு கீழும், 4 கல்லூரிகளில் 10 இடங்களுக்கு கீழூம் நிரம்பியிருக்கின்றன.

நிரம்பிய இடங்களில் கொங்கு மற்றும் சென்னை மண்டலங்களில் உள்ள கல்லூரிகளில்தான் அதிக இடங்களை மாணவ-–மாணவிகள் தேர்வு செய்து இருப்பதாகவும், பெரிய கல்லூரிகளில் 160 கட்-ஆப் மதிப்பெண் வரையிலும், சிறிய கல்லூரிகளில் 120 கட்-ஆப் மதிப்பெண் வரையிலும் மாணவர் சேர்க்கை நடந்து முடிந்திருப்பதாகவும் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.

error: Content is protected !!