அமலாக்கத்துறை அதிகாரி கைது – லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி!
மத்திய அமைச்சரவையின் ஒரு அங்கமாக இருக்கும் அமலாக்க த் துறையில் அதிரடி ரெய்டு குறித்து அன்றாடம் செய்திகள் வருவது வாடிக்கை.. ஆனால் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும். என்ற பாணியில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கியதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தனது சொத்துக்குவிப்பு வழக்கை முடித்துத் தருவதாகக் கூறி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் தன்னிடம் ரூ.3 கோடி லஞ்சம் கேட்டதாகவும், அதனை தர மறுக்கவே இறுதியில் ரூ.51 லட்சம்வரை பேரம் பேசி தர வேண்டும் என்றும் மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அதில் முதற்கட்டமாக ரூ.20 லட்சம் பணத்தை முன்பணமாக வாங்கியுள்ளதாகவும், பின்னர் இரண்டாவது முறையாக ரூ.31 லட்சம் லஞ்சமாக தரவேண்டும் என்று தன்னை தொடர்ந்து மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். மருத்துவர் புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட போலீசார், இதற்காக ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மருத்துவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அங்கித் திவாரி வாங்கிய உடனே பணத்துடன் காரில் தப்பியோட முயன்றுள்ளார்.அப்போது அவரை தொடர்ந்து விரட்டி சென்று திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து மடக்கி பிடித்த போலீசார் அமலாக்கத்துறை அதிகாரியை அதிரடியாக கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்ட்ரன். மேலும் அவருக்கு சொந்தமாக வீடு உள்ளிட்டவைகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து அவரிடம் 15 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி பல்வேறு தொழிலதிபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் லஞ்சப்பணம் பெற்று, அதனை சக அதிகாரிகளுக்கு பங்கு பிரித்து கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளன. மேலும் இதில் மதுரை, சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அங்கிருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அதோடு அங்கித் திவாரியின் வீடு, மற்றும் அலுவலகத்தின் அறை உள்ளிட்டவைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அரசு ஊழியர் ஒருவரை தொடர்பு கொண்டு முடிந்து போன வழக்கை சுட்டிக்காட்டி, அவ்வழக்கில் அமலாக்க துறை விசாரணை நடத்த வேண்டுமென பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாக கூறி அவரிடம் விசாரணை நடத்தி லஞ்சம் பெற்றுள்ளதாகவும் லஞ்சஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அங்கித் திவாரிக்கு எதிராக உள்ள ஆதாரங்களின் அடிப்படையில், திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்தை காவலில் எடுத்து விசாரிக்க தமிழ்நாடு காவல்துறை திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.