ஒரு சகாப்தத்தின் அடையாளமான எலான் மஸ்க் பர்த் டே டு டே!

ஒரு சகாப்தத்தின் அடையாளமான எலான் மஸ்க் பர்த் டே டு டே!

எலான் மஸ்க் – உலகின் நம்பர் 1 பணக்காரர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் சிஇஓ, சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களைப் பதிவிடும் நபர். இவ்வளவுதானா? இல்லை! எலான் மஸ்க் இதை எல்லாம் தாண்டிய ஒரு அதிபுத்திசாலி, தேர்ந்த வணிகர், ஒரு எக்ஸ்பெர்ட் மாஸ் சைக்காலஜிஸ்ட் அல்லது ஒரு அறிவியல் அறிஞர் என எந்த ஒரு குறிப்பிட்ட மனித வகைப்படுத்தலுக்குள் அடங்காத, பன்முகத்தன்மை கொண்ட ஒரு மனிதர்.

“நடைமுறைக்குச் சாத்தியமா அல்லது தேவையா” என கேள்வி எழுப்பும் தருணத்தில், தனது சிந்தனையின் மீது மிகப்பெரிய அளவில் முதலீடும், அதீத உழைப்பையும் கொடுத்து வெற்றி பெறச் செய்தவர் தான் எலான் மஸ்க் எனும் ஒன் மேன் ஆர்மி. ஆம்… உலகம் முழுவதும் ஒரு தனி அடையாளத்தை கொண்டவர் எலோன் மஸ்க் (Elon Musk). உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை தவிர, அவர் எதிர்காலத்தையே உருவாக்குபவர் என்றும் அழைக்கப்படுகிறார். ஏவுகணைகள் மற்றும் விண்கலங்களைத் தயாரிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தை உருவாக்கினார். மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லாவின் (Tesla) தலைமை செயல் அதிகாரியாக (CEO) உள்ளார் எலோன் மஸ்க். இந்த நிலையை அடைய அவர் கடுமையாக உழைத்ததுடன், அனைத்து தடைகளையும் தாண்டி தனது இலக்கை அடைந்துள்ளார். அப்பேர்பட்டவர் ஜூன் 28, 1971 அன்று தென்னாப்பிரிக்காவின் ப்ரிடோரியாவில் பிறந்த எலான் ரீவ் மஸ்க், இன்று தனது 54வது பிறந்தநாளைக் (ஜூன் 28, 2025) கொண்டாடுகிறார். இந்தப் பெயர் இன்று உலகம் முழுவதும் அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் தொலைநோக்கு சிந்தனைகளின் அடையாளமாக விளங்குகிறது. ஒரு தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர், மற்றும் எதிர்காலத்தை வடிவமைப்பவர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்ட மஸ்க், அவரது வாழ்க்கை, சாதனைகள், மற்றும் உலகிற்கு அவர் அளித்த மற்றும் அளித்துக் கொண்டிருக்கும் பங்களிப்புகள் எக்கச்சக்கம்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

எலான் மஸ்க் ஜூன் 28, 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா பகுதியில் பிறந்தார். தந்தையின் தொடர் குடிப்பழக்கம், தாய் தந்தையர் விவகாரத்து என சிறுவயதிலேயே பல கஷ்டங்களை பார்த்திருக்கிறார். சிறுவயதில் அவருக்கு அதிக நண்பர்கள் இல்லாததால். இவருக்கு நண்பனாய் இருந்தது புத்தகங்களே. இதனால் சிறுவயதிலேயே அதிகம் புத்தகங்களை படிக்கும் திறன்மிக்கவராக இருந்துள்ளார் எலான் மஸ்க். பிறகு கனடாவில் குவின்ஸ் பல்கலைகழகத்திலும், பென்சில்வேனியா பல்கலைகழகத்திலும் இளங்கலை படிப்பை முடித்தார். மனிதர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் கண்டுபிடுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தார் எலான் மஸ்க். அப்படி அவர் தேர்ந்தெடுத்த துறைகள் தான் இணையம் (Internet), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் (renewable energy sources), விண்வெளி குடியேற்றம் (space colonization). அதனின் முதல் படியாய் 1995ல் Zip2 Corporation எனும் ஐடி நிறுவனத்தை துவங்குகிறார். அதிகாலையில் வேலையை துவங்கினால் மாலை வரை கடுமையாக உழைக்கும் பேர்வழி தான் எலன் மஸ்க். இருப்பினும் தொடங்கிய சில வருடங்களிலே புகழ்பெற்ற Altavista எனும் சர்ச் என்ஜின் நிறுவனம், $307 மில்லியன் கொடுத்து இவரது நிறுவனத்தை வாங்கியது. பிறகு அதே வருடமே X.com என்னும் எலெக்ட்ரானிக் பணம் செலுத்தும் முறையிலான நிறுவனத்தை துவங்கினார்.பின்னாளில் அந்நிறுவனத்திற்கு Paypal என பெயர் மாற்றம் செய்யப்பட்டு சேர்மன் ஆகவும் உயர்ந்தார் எலான் மஸ்க். 2002ல் Paypal நிறுவனத்தை ebay 1.5 பில்லியன் டாலருக்கு வாங்கியது. எலான் மஸ்கின் பங்காக 180 மில்லியன் டாலர் கிடைத்தது. இதில், 100 மில்லியன் டாலரை SpaceX நிறுவனத்திலும், 70 மில்லியன் டாலரை டெஸ்லா நிறுவனத்திலும், மீதமுள்ள 10 மில்லியன் டாலரை சோலார் சிட்டி என்ற நிறுவனத்திலும் முதலீடு செய்தார். உலகை மாற்றும் கண்டுபிடிப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதில் ஒரு போதும் தயங்கியதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

26 ஆண்டுகளுக்கு முன் கண்ட எதிர்காலம்:

எலான் மஸ்கின் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சிறந்த உதாரணம், 1998 ஆம் ஆண்டு அளித்த ஒரு வீடியோ நேர்காணல். இது இணையத்தில் பரவியது. இதனை அவரே ஒரு சூழலில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “இதில் கிரேஸியான (Crazy) விஷயம் என்னவென்றால், இந்த மிகத் தெளிவான கணிப்பைக் கூறியதற்காக அவர்கள் என்னை பைத்தியம் என்று நினைத்தார்கள்” என குறிப்பிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் இணையதளம் வருங்காலத்தில் எப்படி இருக்கப் போகிறது எனப் பேசியிருந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், 26 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கூறியவாறே இன்று உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

“இணையம் அனைத்து ஊடகங்களுக்குமான சிறப்பு தொகுப்பாக இருக்கும்” என எலான் மஸ்க் கூறியிருந்தார். செய்தித்தாள்களும், இதழ்களும் பரபரப்பாக விற்கப்பட்ட, தொலைக்காட்சிகளே எதிர்காலமாகப் பார்க்கப்பட்ட அந்தக் காலத்தில் யாரும் அவரது சிந்தனையை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்.

“இணையமே அனைத்து ஊடகங்களுக்குமான எரிபொருளாகவும் இறுதி நிலையாகவும் இருக்கும். அச்சு, ஒளிபரப்பு, விவாதங்கள் வானொலி… எனத் தேவையான அனைத்து ஊடக வடிவங்களையும் ஒருவர் இணையத்தில் அணுக முடியும்” எனக் கூறியுள்ளார் மஸ்க்.

“மக்கள் எதைப் பார்க்கலாம், எப்போது பார்ப்பது என்பதையெல்லாம் அவர்களே முடிவு செய்துகொள்வார்கள். அது வானொலி, இதழ் அல்லது தொலைக்காட்சி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்” என்றும் பேசியிருந்தார்.

“இணையம் அனைத்து பாரம்பரிய ஊடகங்களிலும் புரட்சியை உருவாக்கும்” என அறுதியிட்டுக் கூறினார் எலான். இன்று நாம் பொழுதுபோக்கு, செய்திகள், தகவல்கள் என அனைத்தையும் இணையத்தின் உதவியுடனே பார்க்கிறோம். நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஒளிபரப்பு தளங்கள் முதல் சமூக வலைத்தளங்கள் வரை எல்லாமும் இணையத்தில் இருக்கின்றன. அப்படி இணையதளத்தின் முழுமையான திறனை உணர்ந்திருந்ததால்தான், மஸ்க்கே பின்னாளில் ஒரு இணையதள நிறுவனத்தை உருவாக்கினார். எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் உலகின் பல தொலைதூர இடங்களுக்கு அதிவேக இணைய வசதி வழங்குவதன் மூலம், உலகை இணைக்கிறது. எலான் மஸ்கின் வாழ்க்கை, சாதாரண மனிதர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்ட சாதனைகளை அடைய முடியும் என்பதற்கு ஒரு வாழும் சான்று.

நாளைய கனவு ..ஸாரி லட்சியம்

எலான் மஸ்க் தனது 54வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், அவரது தொலைநோக்கு இலக்குகள் உலகைத் தொடர்ந்து வியப்பில் ஆழ்த்துகின்றன. செவ்வாய் குடியேற்றம், மனித மூளையை மேம்படுத்துதல், மற்றும் AI மூலம் மனித அறிவை விரிவாக்குதல் ஆகியவை அவரது முக்கிய இலக்குகள். மஸ்க்கின் முயற்சிகள், எதிர்கால தலைமுறைகளுக்கு ஒரு புதிய உலகத்தை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

நாம் எலான் மஸ்கின் வாழ்வில் இருந்து கற்று கொள்ள வேண்டிய முக்கியமான 10 விஷயங்கள் பின்வருமாறு..

1. கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை . அதிர்ஷ்டமும் கடவுளும் துணை செய்கிறார்களோ இல்லையோ வள்ளுவர் வாக்கின்படி நம் கடின உழைப்பும் , முயற்சியும் நம் கனவுகளை மெய்ப்பட வைக்கும்

2. வாழ்க்கையில் கனவு காணுதலும் அந்த கனவை மெய்ப்பிக்கும் துடிப்பும் விடா முயற்சியும் ரொம்பவே முக்கியம். முயன்றால் மெய்யாக்கப்பட முடியாத கனவுகளே இல்லை.

3. உங்கள் கனவுகளை மெய்ப்படுத்த எல்லாரும் பயன்படுத்தும் ஒரே ஒரு அரதப்பழசான போட்டிகள் நிறைந்த பழைய வழியை மட்டும் நம்பி இருக்காதீர்கள் . மாத்தி யோசியுங்கள், வெற்றி உங்கள் வசமாகும்

4. உங்கள் கனவுகளை நோக்கிய உங்கள் நெடும் பயணத்தில் பொறுமை காப்பது மிகவும் அவசியம். வெற்றி கோட்டை தொடும் வரையில் நீங்கள் சந்திக்க நேரும் இடையூறுகள், தோல்விகள் உங்களை தடம் பிறழ செய்ய செய்யாமல் நீங்கள் பொறுமை காப்பது மிகவும் அவசியம். அத்தகைய பொறுமையும் அசுரத்தனமான கடின உழைப்பும் நான் கண்டிப்பாக சாதிப்பேன் என்ற அளவு கடந்த தன்னம்பிக்கையும் மட்டுமே உலகமே எதிர்பார்த்தபடி நஷ்டத்தில் மூழ்கி போன கப்பலாக மாறி போக இருந்த டெஸ்லா நிறுவனத்தை மீண்டும் கோடிகள் கொழிக்கும் லாபகரமான நிறுவனமாக மாற்ற எலான் மஸ்க்குக்கு உதவியது

5.எத்தனை முறை தோல்விகள் வந்தாலும் உடனடியாக பீனிக்ஸ் பறவை போல எழுந்து நிற்க வேண்டியது ஒரு சாதனையாளனுக்கு மிக முக்கியம்

6. உங்கள் கனவுகளை நனவாக்கும் நீண்ட நெடும் சாதனை பயணத்தில் உங்களுக்கு கிடைக்கும் சிறு சிறு உதவிகளையும் , யோசனைகளையும் கூட ஒதுக்கி தள்ளாமல் ஏற்று கொள்ளுவது அவசியம். நல்ல யோசனைகளை கேட்க உங்கள் செவிகளை எப்போதும் திறந்து வைத்தல் மிக அவசியம்.

7. உங்கள் வியாபாரத்திற்கு என்னதான் வலுவான PLAN A இருந்தாலும், PLAN B ஒன்றையும் வைத்து இருத்தல் மிக அவசியம்

8. உங்கள் கனவுகளை மெய்ப்படுத்தும் உங்கள் சாதனை பயணத்தில் வழி நெடுக சிறிதும் பெரிதுமாக பல தியாகங்களை நீங்கள் செய்ய வேண்டி இருக்கும். கோடீஸ்வரன் ஆனபிறகும் தன் குடும்பத்துடன் நேரம் செலவிடாமல் வாரத்துக்கு 100 முதல் 120 மணி நேரம் வேலையிலே பழியாக கிடப்பவர் எலான் மஸ்க் . அதுவே அவரை இன்று குபேரனின் பங்காளியாக ஆக்கி இருக்கிறது.

9. அடுத்தவர்களின் குறிக்கோள்களை விட ஒருபடி அதிகமாகவே உங்கள் குறிக்கோள்கள் இருக்கட்டும் . அதுவே உங்களை சாதனையாளராக மாற்றும். அடுத்தவர்கள் திருப்தியடையும் சாதாரண இலக்குகளை அடைவதில் ஒருபோதும் திருப்தி கொள்ளாதீர்கள்.

10. புதிய விஷயங்களை தொடர்ந்து கற்று கொண்டு வருதல் சவாலான உங்கள் எதிர்கால பயணத்தை எளிதாக்கும். அதுவும் தினமும் முன்னேறி செல்லும் டெக்னாலஜி நீக்கமற நிறைந்த உலகில் தொடர்ந்து கற்றல் (Continuous Learning ) ரொம்பவே முக்கியம். உங்களை சுற்றி நடக்கும் உலக நிகழ்வுகளை தொடர்ந்து அவதானித்தல் மிக அவசியம். அதுவே உங்கள் எதிர்கால பயணத்தில் மிகப்பெரும் சாதனைக் கோடுகளை எளிதில் கடக்க உதவும். இன்றைய சாதனை கொண்டாட்டங்களுக்கு நடுவில் எதிர்காலத்துக்கான திட்டமிடல் மிக முக்கியம் .

மேற்கண்ட விஷயங்களை பின்பற்றுவதால் மட்டுமே நாம் அனைவரும் தோல்விகள் எதுவும் இன்றி சீக்கிரமே எலான் மஸ்க் போல ஆகிவிடுவோம் என்று சொல்லவில்லை. ஏனென்றால் இவ்வளவு கடின உழைப்பும் அறிவும் கொண்ட மிக பெரும் சாதனையாளராக பணக்காரராக உருவெடுத்து இருக்கும் எலான் மஸ்கின் இந்த நீண்ட நெடும் சாதனை பயணம் மற்ற சாதனையாளர்கள் போலவே கடும் சோதனைகளை சந்தித்த பின்னே இன்று வெற்றி கோட்டை தொட்டு இருக்கிறது. இதற்கு காரணம் முழுக்க முழுக்க அவருடையய அதீத தன்னம்பிக்கையும், அவரின் தொடர்ந்த கற்றலும், சமூக அவதானிப்பும், மிக கடினமான அசுரத்தனமான உழைப்பும் மட்டுமே .

மொத்தத்தில் எலான் மஸ்க் ஒரு மனிதராக மட்டுமல்ல, ஒரு சகாப்தத்தின் அடையாளமாக விளங்குகிறார். அவரது பிறந்தநாள், அவரது சாதனைகளையும், உலகை மாற்றிய அவரது தொலைநோக்கு சிந்தனைகளையும் கொண்டாடுவதற்கு ஒரு சிறந்த தருணமாகும். அவரது பயணம், தைரியம், உறுதி, மற்றும் கற்பனையின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. மஸ்க்கின் வாழ்க்கை, “நம்ப முடியாதவற்றை நம்பு, செய்ய முடியாதவற்றைச் செய்” என்ற கருத்தை உலகிற்கு உணர்த்துகிறது.

எலான் மஸ்க்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Related Posts