கல்வி கடனால் கவலைப்பட்டு ‘காலமாகும்’ மாணவர்கள் ! – அதிர்ச்சியில் பெற்றோர்கள்
பாரத் ஸ்டேட் வங்கியின் மூலம் கல்விக் கடன் பெற்ற மாணவர்களிடம் இருந்து, கடன் தொகையை வசூலிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ‘ கடன் தொகையைக் கேட்டு ரிலையன்ஸ் நிறுவனம் மிரட்டல் விடுப்பதாக’ மாணவர்கள் தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தன. கடன் தொகையை ஒரே தவணையில் செலுத்துமாறு நெருக்கடி கொடுத்ததால், மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் லெனின் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இத்தனைக்கும் மாணவர் லெனின் படிப்பை முடித்து ஒரு மாதமே நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் ரிலையன்ஸின் வசூல் போக்கிற்கு எதிராக தி.மு.க, ம.தி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. நேற்று லெனினின் தந்தை கதிரேசனை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர் வங்கி ஊழியர் சங்கத்தினர்.
இதையடுத்து பத்திரிகையாளர்க்ளிடம் பேசிய இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன்,
” மிகுந்த வேதனையாக இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம், நமது வங்கிகளிடம் இருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ளது. அந்த வகையில் நமது மாணவர்களின் கல்விக் கடனை இவர்கள் வசூலிப்பதே சட்டவிரோதம்தான். அனில் அம்பானியின் இந்நிறுவனத்திற்கு மத்திய அரசு பல சலுகைகளை அளித்து வருகிறது. இதுபற்றி சி.பி.எம் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கடந்த வாரம் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு இன்னமும் எந்தப் பதிலும் வரவில்லை.
பாரத ஸ்டேட் வங்கி, 55 சதவீத தள்ளுபடியில் கடன் வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது. மீதமுள்ள 45 சதவீத தொகையில் 15 சதவீதத்தை உடனடியாகவும், மீதி 85 சதவீதப் பணத்தை 15 ஆண்டு காலத்திற்குள்ளாகவும் தவணை முறையில் செலுத்த வேண்டும் என்ற உறுதிமொழியை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வாங்கியிருக்கிறது எஸ்.பி.ஐ. எங்கள் கேள்வியெல்லாம் அந்த 55 சதவீத தள்ளுபடி மற்றும் 15 வருடகால தவணை முறை சலுகையை மாணவர்களுக்கு வழங்கினால் என்ன? அதிலும், லெனின் வாங்கிய தொகைக்கு, வட்டியோடு சேர்த்து 2 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயை உடனே கட்டுமாறு நெருக்கடி கொடுத்துள்ளது
ரிலையன்ஸ். படிப்பை முடித்த ஒரே மாதத்திற்குள் மாதம் இரண்டரை லட்சம் சம்பளத்தை எந்த நிறுவனம் வழங்குகின்றது? கல்விக் கடனைப் பெற்ற மாணவர்கள் படிப்பை முடித்ததும் ஒரு வருடம் அல்லது வேலை கிடைக்கும் 5 வருட காலத்திற்குள் தொகையைச் செலுத்த வேண்டும் என்றுதான் வங்கி நிர்வாகங்கள் விதிமுறை வகுத்துள்ளன.
அதுவரையில், கல்விக்கடனுக்கான வட்டியை அரசுதான் செலுத்த வேண்டும். இதுவரையில், இப்படிப்பட்ட நடைமுறைதான் இருந்து வந்துள்ளது.லெனினின் தந்தை கதிரேசன் கொத்தனாராக வேலை பார்க்கிறார். மிகுந்த வறுமைச் சூழலில் அவருடைய குடும்பம் உள்ளது. நேற்று நாங்கள் அவரிடம் பேசியபோது, ‘ என் மகனைப் போல இனி யாரும் கல்விக்கடனுக்காக இறந்துவிடக் கூடாது’ என அழுகிறார். ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள, வசூல் செய்யும் உத்தரவை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதைப் பற்றி ஆலோசித்து வருகிறோம்” என்றார் கொந்தளிப்போடு.ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் வசூல் மையத்தின் பொறுப்பாளரான உமா மகேஸ்வரியிடம் பேசினோம். “இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. உரிய விளக்கத்தை விரைவில் தருகிறோம்” என்றதோடு முடித்துக் கொண்டார்.


