16 வயதை எட்டிய சிறுவர்களுக்கும் ஓட்டுநர் உரிமம்! – மத்திய அரசு பரிசீலனை!
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களில் பெரும்பாலானோர் இரு சக்கர வாகனங்களில்தான் சென்று வருகின்றனர். அதிலும் தற்போது அதிவேகமாக செல்லக்கூடிய வகையில் 150 சிசி, 200 சிசி உள்பட பல்வேறு கம்பெனிகளின் ஏராளமான வாகனங்கள் விற்பனைக்கு வருகின்றன. குறிப்பாக இந்த தனியார் நிறுவனங்கள் இது போன்ற இரு சக்கர வாகனங்களை மாணவர்களை குறிவைத்தே சந்தைப்படுத்துகின்றனர் என்பது அதிர்ச்சித் தரக்கூடிய தகவலாக உள்ளது.

தற்போது நாடெங்கும் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகமாவதோடு, வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாதாரணமாக 10 நிமிடத்தில் கடக்க வேண்டிய தூரத்தை, கூட்ட நெரிசலுக்கு இடையே சுமார் ஒரு மணி நேரம் வரை பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதுபோன்ற நிலையில், பள்ளி மாணவர்களும் இரு சக்கர வாகனங்களில் ஆபத்தை உணராமல் பள்ளிக்கு சென்று வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது என்று புகார் எழுந்துள்ள நிலையில் பல்வேறு பள்ளிகளில் ஸ்டூடண்டுகள் டூ வீலரில் வர அனுமதிப்பதில்லை.
இந்நிலையில் கியர் இல்லாத ஸ்கூட்டர்களை இயக்குவதற்கு, 16 வயதை எட்டிய சிறுவர்களுக்கும் ஓட்டுநர் உரிமங்களை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில், “சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக அமைச்சர்கள் குழு பல்வேறு யோசனைகளைப் பரிந்துரைத்துள்ளது. அவற்றில், கியர் இல்லாத, 100 சிசி திறனுக்கும் குறைவான ஸ்கூட்டர்களை இயக்குவதற்கு, 16 வயதை எட்டிய சிறுவர்களுக்கும் ஓட்டுநர் உரிமங்களை வழங்குவது குறித்த முன்மொழிவும் ஒன்றாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


